
பார்ப்பதற்கு நல்ல தரையில் வளர்ந்தது போலக் காட்சியளிக்கும். ஆனால் உண்மையில் சதுப்பு நிலத்தில் வளர்ந்து கம்பீரமாகக் காட்சி அளிக்கும் மரங்களைக் கொண்ட ஒகேபெனோகி ஸ்வாம்ப் (Okefeenokee Swamp) உண்மையிலேயே உலகின் அதிசய இடங்களுள் ஒன்று என்று சொல்லலாம்! 680 சதுரமைல் பரப்பளவுள்ள அதிசயமான இந்த மிதக்கும் சதுப்பு நிலம் ஜார்ஜியாவின் தென்கிழக்குப் பகுதியிலும் அதன் முனை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைத் தொட்டுக்கொண்டும் இருக்கிறது!
முன்னொரு காலத்தில் அட்லாண்டிக் மகா சமுத்திரம் தென்கிழக்கு ஜார்ஜியாவிலிருந்து உள்வாங்கிப் பின்னால் செல்லவே அது உப்பு நீர் நிரம்பிய குறுகிய பகுதி ஒன்றைப் புதிதாக உருவாக்கிவிட்டது! களிமண்ணும் சுண்ணாம்பும் அங்கு சேரவே காலப்போக்கில் அது ஒரு பெரிய சதுப்பு நிலமாக மாறிவிட்டது. மிதக்கும் இந்த நிலத்தின் ஆழம் ஒரு மீட்டர் இருக்கிறது.
இங்கு ஏராளமான சைப்ரஸ் மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றில் ஏராளமானவை 400 வருடங்கள் ஆனவை. இவை 120 அடி உயரமுள்ளவையாகும்! ஆயிரம் வருடங்கள் வரை இந்த மரங்கள் இருக்கும்! பரந்திருக்கும் இந்த மரத்தின் முழு எடையையும் நீரே தாங்கிக்கொள்கிறது.
பெரிய காடுபோல இருக்கும் இந்தப் பகுதியில் பல தீவுகள் மிதந்து கொண்டே இருக்கும்! இந்த அற்புதமான சூழ்நிலையைப் பார்த்து பல விலங்குகளுக்குக் கொண்டாட்டம்தான்!
நான்கு அங்குலம் அளவில் விரல் அளவே உள்ளதாக சிறிய முதலைகள் இருக்கும்போது பெரிய முதலைகள் 13 அடி நீளமுள்ளதாக வளர்கின்றன. எடையோ 225 கிலோ ஆகும். இதை அமெரிக்க ராஜ முதலை என்கின்றனர்.
இந்த பிராந்தியத்திலேயே அதிகமாகச் சத்தம் போடுவது இங்குள்ள மரங்கொத்திப் பறவைகள்தாம்! பாம்புகளும், பல்லிகளும், விதம் விதமான தவளைகளும் கூட்டம் கூட்டமாக இங்கு வசிக்கின்றன.
1838ல் அமெரிக்க ராணுவம் ஃப்ளோரிடாவில் இருந்த பழங்குடியினரான செமினோல் இந்தியர்களை விரட்டி அடிக்கவே அவர்கள் இந்தப் பகுதிக்கு வந்து சதுப்பு நிலத்தை விவசாயம் செய்யும் நிலமாக மாற்ற முயன்று அதில் வெற்றியும் பெற்றனர்.
ஆயிரத்தி எண்ணூற்றுத் தொண்ணூறுகளில் காப்டன் ஹாரி ஜாக்ஸன் என்பவர் இங்கு சதுப்பு நிலத்தில் உள்ள நீரை வெளியேற்றி விட்டு அட்லாண்டிக் பெருங்கடலுடன் இணைக்கும் சுவானி கால்வாய் என்ற ஒரு கால்வாயை அமைக்க முயன்றார். ஆனால் அது வெற்றி பெறாமல் பாதியிலேயே நின்றது. அதற்கு ஜாக்ஸனின் முட்டாள்தனம் (Jackson’s Folly) என்று பெயரிட்டனர்.
1908 முதல் 1926 முடிய மரக்கம்பெனி ஒன்று இங்குள்ள மரங்களை வெட்டி அழித்தது. அதனால் வனவிலங்குகள் இந்த இடத்திலிருந்து ஓட ஆரம்பித்தன. அமெரிக்க அரசு இதைப் பார்த்தது. உடனே இதை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்தது. சைப்ரஸ் மரங்கள் உள்ளிட்ட தாவர வகைகள் அழிவிலிருந்து தப்பித்தன!
இப்போது இங்கு ஏராளமான உல்லாசப் பயணிகள் இந்த இயற்கை அற்புதத்தைப் பார்த்து வியக்கின்றனர். மிதக்கும் நீரில் மரம் வளர்வது ஒரு அதிசயம்தானே!