
மின்னல் என்பது மழைக் காலங்களில் திரண்ட கார் மேகங்களின் இடையே ஏற்படும் மிகப்பெரிய தீப்பொறி போன்ற மின்பொறிக் கீற்றல். கண்ணைப் பறிக்கும் ஒளி வீச்சோடு, கோடுகளாய் வானில் கிளைத்து நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நிகழ்ச்சிதான் மின்னல். இது ஒரு இயற்கையான நிகழ்வு. வானில் மின்னல் வெட்டும்போது ஏற்படும் வெப்ப அளவு, சூரியனின் மேற்பரப்பில் நிலவும் வெப்பத்தை விட 5 மடங்கு அதிகமானது. மின்னல் வெட்டும்போது நிலவும் வெப்ப நிலை 30,000 டிகிரி சென்டி கிரேடு (54,000 பாரன்ஹீட்) ஆகும்.
ஒரு மின்னல் உருவாகும் மூன்று மணி நேரங்களுக்கு முன்னர் நிலவும் வெப்ப நிலை மாற்றம், மேகங்களின் நகர்வு, நீண்ட தொலைவு வெளிப்படும் கதிர் வீச்சு போன்ற மூன்று நிலைகளை கணித்து மின்னல் ஏற்படும் நேரத்தை கணிக்க முடியும் என்கிறார்கள். இதனை 36,000 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள ஒரு செயற்கைகோள் மூலம் துல்லியமாக கணிக்க முடியும். அப்படித்தான் தற்போது மின்னல் மற்றும் இடி ஏற்படுவதை கணித்து முன்கூட்டியே சொல்கிறார்கள்.
மின்னல் தாக்கியதால் 2002 முதல் 2022 வரை 20 வருடங்களில் கிட்டத்தட்ட 50,000 பேர் மடிந்துள்ளனர். ஆனால், கடும் வெப்பம், புயல், வெள்ளப்பெருக்கு ஆகியவை மூலம் 20,000 பேர்தான் இறந்து போய் உள்ளார்கள். மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவில்தான் அதிகம் பேர் மின்னல் தாக்கியதில் இறந்துள்ளனர். இதற்குக் காரணம் அங்கு அதிகளவில் பனை மரங்கள் வெட்டப்பட்டதும் காரணம் என்கிறார்கள்.
பனை மரங்கள் இயற்கை மின்னல் மற்றும் இடி தாங்கியாக செயல்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நன்கு உயர்ந்து வளர்ந்த பனைமரங்கள் ஈரத் தன்மையுடன் இருப்பதால், மழைக் காலங்களில் அதன் மீது மின்னல் பாயும்போது, அதை ஈரப்பதம் உள்வாங்கி தரைக்குள் அனுப்பி பாதிப்பில்லாமல் செய்துவிடும். தற்போது, பனைகள் வெட்டப்படுவதால் மின்னல் பாய்ந்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பனைகள் வெட்டப்படுவதை சாதாரணமான விஷயமாகக் கடந்து செல்லக் கூடாது. அது பேரழிவை ஏற்படுத்தும் என்று வேளாண் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பனைமரத்தின் தண்டு, வேர் பகுதி இயற்கையாகவே ஈரப்பதத்தைக் கொண்டவை. அது மின்சாரத்தை (மின்னலை) தடையின்றி கடத்தும் தன்மை கொண்டது. மின்னல் மரணங்களைத் தடுக்க பெரிய அளவில் பனை சாகுபடியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பூமியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக நீளமான மின்னல் தாக்கம் 768 கி.மீ. நீளத்தையும் தாண்டியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2017 அக்டோபரில் அமெரிக்காவின் டெக்சாஸிலிருந்து கன்சாஸ் வரை வானத்தை ஒளிரச் செய்த ஒரு பெரிய மின்னல் உலகின் மிக நீளமான மின்னலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது வட அமெரிக்காவின் பெரிய சமவெளிகளில் நம்ப முடியாத 829 கிலோ மீட்டர் (515 மைல்) நீளம் நீட்டித்தது என்கிறார்கள்.
இந்த சாதனை படைத்த மாபெரும் மின்னல் முந்தைய சாதனையை 61 கிலோ மீட்டர் வித்தியாசத்தில் முறியடித்தது. இந்தக் கண்டுபிடிப்பை உலக வானிலை அமைப்பு (WMO) 2025 ஜூலை 30ம் தேதி அறிவித்துள்ளது. இதற்கு முன் உலகில் பதிவான நீண்ட தூர மின்னல் 767 கி.மீ. இதுவும் அமெரிக்காவில்தான் நிகழ்ந்தது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து 22,236 மைல்கள் உயரத்தில் சுற்றும் GOES கிழக்கு வானிலை செயற்கைக்கோளின் தரவைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இந்த மாபெரும் மின்னலைக் கண்டறிந்ததாக சயின்ஸ் அலர்ட் தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் தொழில்நுட்பம், தரைத் தாக்குதல்களை மட்டுமே கண்டறியும் பாரம்பரிய தரை அடிப்படையிலான மின்னல் கண்டறிதல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகளால் இந்த மின்னலைக் கண்காணிக்க முடிந்தது.