
பறவைகள் என்றாலே பாடும் குயில், பேசும் கிளி, ஆடும் மயில் என பல வகை வண்ணங்களில் நம்முடன் நட்புடன் பழகும் பறவைகளே நம் நினைவுக்கு வரும். அதையும் தாண்டி, ஆகாயத்தில் பறந்து திரியும் ஆக்ரோஷமான பல வகைப் பறவைகளும் இங்குள்ளன. அவை, மற்ற பறவைகளைப் போல் கொட்டைகள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளாமல், கொரித்துண்ணி போன்ற சிறிய விலங்குகளையும், பிற பெரிய விலங்குகள் கொன்று தின்றுவிட்டு மிச்சம் போட்ட மாமிசத் துண்டுகளையும் உண்டு உயிர் வாழ்கின்றன. அப்படிப்பட்ட ஐந்து வகை மாமிச உண்ணிப் பறவைகளின் விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. கழுகு (Eagle): எலி, அணில், கோழிக்குஞ்சு, பச்சோந்தி போன்ற சிறிய வகை விலங்குகளைப் பிடித்து உண்பதில் பிரசித்தி பெற்ற பறவை கழுகு. இது மிகவும் வலிமையான உடலமைப்பும், கூர்மையான பார்வைத் திறனும் கொண்டது. இந்தியாவின் பல பகுதிகளில் இவை வாழ்ந்து வருகின்றன. பாம்பு, மீன், வௌவால், எலி போன்றவற்றை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும் குணம் கொண்டது. இதன் கனமான வளைந்த மூக்கும், கால் விரல் நகங்களும் இரையை கிழித்து உண்பதற்கு வசதியாக அமைந்துள்ளன.
2. பருந்து (Hawk): மிக வேகமாகப் பறக்கக்கூடிய பறவை இது. கூர்மையான பார்வைத் திறன் இதற்கும் உண்டு. திறந்த வயல்வெளி, விவசாய நிலங்கள் மற்றும் காட்டுப் பகுதிகளில் இவை அதிகம் காணப்படும். பல்லி, சிறிய வகைப் பாம்பு, மீன், தவளை, எலி போன்றவையே இதன் உணவாகும். வானில் வட்டமிட்டபடியே, இதற்கு உணவாகக்கூடிய தரையில் திரியும் உயிரினங்களை தனது கூரிய பார்வையால் கண்டுபிடித்து, குறி தவறாமல் ஒரே பாய்ச்சலில் அவற்றைப் பிடித்து செல்லக்கூடிய தனித்துவமான திறன் கொண்டது பருந்து.
3. ஆந்தை (Owl): மற்ற உயிரினங்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இரவு நேரத்தில், மிகவும் சுறுசுறுப்பாக உணவைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் பறவை ஆந்தை. இதன் பார்வைத் திறன் இரவில் பன் மடங்கு அதிகமாக இருக்கும். ஆந்தை, இரவின் அமைதியில் சத்தமின்றி தவளை, எலி, பூச்சிகள், சிறு பறவை போன்றவற்றை வேட்டையாடி தனக்கு உணவாக்கிக் கொள்ளும். இந்தியாவில் கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் இது காணப்படும். ஆந்தையின் தலை 270° வரை திரும்பக் கூடியது. இது சுலபமாக அதன் இரையை கண்டுபிடிக்க உதவி புரிகிறது. மேலும், இது எலிகளைத் தின்று தீர்ப்பதால் எலியின் எண்ணிக்கை குறைகிறது. அதனால் விவசாயிகள் நன்மையடைகின்றனர்.
4. ஃபால்கன் (Falcons): ஃபால்கன் அளவில் சிறிய பறவையாய் இருந்தபோதும் வேட்டையாடும்போது மிகவும் சுறுசுறுப்பாயிருக்கும். அது வேட்டையாட விரும்பும் இடம் திறந்தவெளிப் பரப்புகளேயாகும். அந்த மாதிரி இடங்களில்தான் சிறிய வகைப் பறவைகள், வௌவால்கள் போன்றவற்றை தந்திரமாகவும் விரைவாகவும் துரத்திச் சென்று பிடித்துச் செல்வது சுலபமாகும். பெரேகிரைன் (Peregrine) ஃபால்கன் மின்னல் வேகத்தில் டைவ் அடித்து எதிரிகளை துரத்திப் பிடிப்பதில் பிரசித்தி பெற்றது. ஃபால்கன்களின் பிசிறில்லாத நேரடித் தாக்குதல் வேறெந்தப் பறவைகளும் அறியாத கலை.
5. வல்ச்சர் (Vulture): இது ஓர் அழகற்ற பறவையாக இருந்தபோதும், இயற்கையைப் பாதுகாக்க, வல்ச்சர் மிக முக்கியமான முறையில் செயலாற்றி தனது பங்களிப்பைத் தருகிறது. சிங்கம், புலி போன்ற பலசாலி மிருகங்கள், மான், எருமை போன்ற விலங்குகளை வேட்டையாடிக் கொன்று தின்ற பின் அவ்விடத்தை விட்டு சென்று விடும். அவை விட்டுச் சென்ற மிச்சம் மீதி மாமிசத்தை வல்ச்சர்கள் கூட்டமாகச் சென்று சாப்பிட்டு முடித்துவிடும். இதனால் வீணாக பரவிக் கிடக்கும் மாமிசத் துண்டுகள் அழுகி அதிலிருந்து கிருமிகள் வெளியேறி நோய் பரவும் அபாயம் தடுக்கப்படுகிறது.
மேலே கூறிய ஐந்து வகை பறவைகளும் தனது உள்ளுணர்வின் உந்துதலைப் பின்பற்றி, நோய் பரவலைத் தடுத்தும், சிறிய வகை விலங்குகளின் பெருக்கத்தைத் குறைத்தும் இயற்கையின் சுற்றுச்சூழல் அமைப்பை சமநிலைப்படுத்த பெரிதும் உதவி புரிகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.