
உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழ காற்றில் கலந்திருக்கும் ஆக்ஸிஜன் தேவை. உயர்ந்த மலைகளின் உச்சிக்குச் செல்லச் செல்ல அங்கு காற்றில் கலந்திருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைந்துகொண்டே போகும். வெப்ப நிலையும் குறையும். அவ்வப்போது பலத்த காற்று வீசும். ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் சீரற்ற வானிலையுடயை இம்மாதிரியான இடங்களிலும் சில வகை விலங்குகள் சாதாரணமாக வாழ்ந்து கொண்டும் இனப்பெருக்கம் செய்துகொண்டும் இருக்கின்றன. இதற்கு ஒத்துழைப்பவை அவற்றின் உடலமைப்பு மற்றும் பாரம்பரிய வழியில் வந்த, எந்தவித சூழலையும் ஏற்று வாழத் தயாராயிருக்கும் அவற்றின் குணம் என்றும் கூறலாம். அத்தகைய சூழலில் வாழும் 7 வகை விலங்குகள், பறவை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. யாக் (Yak): 9,843 அடி முதல் 18,045 அடி வரையிலான உயரத்திலும் வாழக்கூடியவை யாக். இவற்றின் நுரையீரல், இதயம் போன்றவை தனித்துவம் பெற்று அளவில் பெரியதாகவும், இரத்த ஓட்டம் மேம்பாடடைந்தும் காணப்படுகின்றன.
2. ஸ்னோ லெப்பர்ட் (Snow Leopard): சுமார் 18,000 அடி உயரத்தில் வாழும் ஸ்னோ லெப்பர்டின், சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் (adaptability) அதிசயிக்கச் செய்கிறது. இதற்கு, மாறுபட்ட அதன் உடல் உறுப்புகளின் இயக்கம் மற்றும் வேறுபாடு கொண்ட அதன் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அமைப்பு போன்றவை எவ்வாறு உதவி புரிகின்றன என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.
3. ஹிமாலயன் ஜம்ப்பிங் ஸ்பைடர் (Himalayan Jumping Spider): 22,000 அடி வரையிலான உயரம் உள்ள மலைகள் மீது வாழக்கூடிய திறமை கொண்ட ஸ்பைடர் இனம் இது. காற்றில் கலந்து வரும் ஸ்பிரிங்டைல்ஸ் (Springtails) என்ற பூச்சிகள் மற்றும் ஈக்களைப் பிடித்து உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன.
4. ஆல்பகா (alpaca): மலை உச்சிகளில் வாழ்வதற்கு தன்னைத்தானே பழக்கப்படுத்திக் கொள்ளும் ஆல்பகா மற்றும் யாக் போன்ற விலங்குகள் கருவில் இருக்கும்போதே அவற்றின் பீட்டா குளோபின் மரபணு (Beta globin gene), ஹீமோகுளோபினில் அதிகளவு ஆக்ஸிஜனை சேமித்து வைத்துக்கொள்ள உதவும் வகையில் அதை ஒழுங்குபடுத்தி வைத்திருப்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5. லாமா (Llama): ஆல்பகா போலவே லாமாக்களின் இரத்தத்தின் ஹீமோகுளோபின்களும் தங்களிடம் அதிகளவு ஆக்ஸிஜனை தேக்கி வைத்துக்கொள்ளும் திறமை கொண்டவை. சூழலுக்கு ஏற்ப தன்னைத்தானே மாற்றியமைத்துக் கொள்ளும் திறன்களின் ஒரு பகுதி இது.
6. பார் ஹெட்டட் கூஸ் (Bar Headed Goose): உயரமான இமயமலைப் பகுதிகளில் அடிக்கடி மலைகளை கடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள இப்பறவை, மூச்சை ஆழமாக உள்ளிழுத்து ஹீமோகுளோபினில் அதிகளவு ஆக்ஸிஜனை சேமித்து வைத்துக்கொள்ளும். மேலும், இதன் இதயமும் தசைகளும் நுண்துளை ஈர்ப்பான்கள் (capillaries) மற்றும் செல்களின் ஆற்றல் உற்பத்திக்கு உதவும் மைட்டோக்கோன்ட்ரியன்களை (Mitochondrion) தம்மகத்தே கொண்டுள்ளன.
7. அன்டியன் கான்டர் (Andean Condor): அன்டியன் கான்டர் சுமார் 16,400 அடி உயரத்திலும் தங்கி வாழக்கூடிய பறவை. இதன் தரமான சுவாச உறுப்புகளின் அமைப்பு இப்பறவையை, ஆக்ஸிஜன் குறைவாக உள்ள இடங்களிலும் சுலபமாக மேலெழுந்து பறக்கவும் சறுக்கி இறங்கவும் உதவுகின்றன.