
செடிகளின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உரங்கள் அவசியமாகின்றன. ஆனால், கடைகளில் விற்கப்படும் செயற்கை உரங்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதால் அவை மண்ணில் இருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளையும் பூச்சிகளையும் அழித்து விடும். ஆகவே, வீட்டில் இருக்கும் மிக எளிதான இயற்கை உரங்களாக இருக்கும் 5 வகை நீர் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. அரிசி கழுவிய நீர்: சாதம் வடிக்க அரிசி ஊற வைத்து கழுவிய நீரில் ஸ்டார்ச், சிறிதளவு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் (NPK) ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான சத்துக்கள் என்பதாலும், அரிசி கழுவிய நீரில் குறைந்த அளவே பொட்டாசியம் இருப்பதால் அப்படியே செடிகளுக்கு ஊற்றினாலும் சற்று அதிகமாக ஊற்றினாலும் பாதிப்பு இல்லை. மேலும், இந்த நீரை உடனுக்குடன் செடிகளுக்கு ஊற்றுவது மிகவும் நல்லது.
2. முட்டை வேகவைத்த நீர்: முட்டை வேகவைத்த நீரில் சிறிதளவு ஊட்டச்சத்துக்களும், கால்சியமும் இருக்கும் இயற்கை உரம் என்பதால் இந்த நீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றுவது மிகவும் நல்லது. முட்டை ஓடுகளை தனியாக வேக வைத்தும் அந்த நீரைப் பயன்படுத்துவதோடு, வேக வைத்த முட்டை ஓடுகளைப் பொடியாக்கி செடிகளின் வேர்ப்பகுதியில் தூவலாம். இது நத்தைகள் மற்றும் புழுக்களைத் தடுக்க உதவும்.
3. உருளைக்கிழங்கு வேகவைத்த நீர்: உருளைக்கிழங்கு வேக வைத்த நீரில் ஸ்டார்ச் மற்றும் பல பயனுள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இந்த நீரை செடிகளுக்கு ஊற்றுவது செடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உப்பு சேர்க்காமல் ஆற வைத்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
4. காய்கறி வேக வைத்த நீர்: காய்கறிகள் வேக வைத்த அல்லது ஆவியில் வேக வைத்த நீரும் செடிகளுக்கு நல்ல உரமாகும் என்பதால் இந்த நீரை செடிகளுக்கு ஊற்ற வேண்டும். மேலும், முட்டைகோஸ், காலிபிளவர் வேகவைத்த நீரில் இருந்து துர்நாற்றம் வீசக்கூடும் என்பதால் இந்த நீரை வீட்டுக்குள் இருக்கும் செடிகளுக்குப் பயன்படுத்தாமல் வெளிப்புறத் தோட்டச் செடிகளுக்குப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
5. மீன் தொட்டி நீர்: மீன்களின் கழிவுகள் மற்றும் தாவரங்களின் எச்சங்கள் செடிகளுக்கு நல்ல உரமாகும் என்பதால் நன்னீர் மீன் தொட்டி வைத்திருந்தால், அந்த நீரை செடிகளுக்கு ஊற்றலாம். ஆனால், உப்புத் தண்ணீர் மீன் தொட்டி நீர் செடிகளை அழித்துவிடும் என்பதால் அதனைப் பயன்படுத்த வேண்டாம்.
மேற்கூறிய ஐந்து வகை நீரும் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் என்பதால் இதனை நாள்தோறும் தவறாமல் செடிகளுக்கு ஊற்ற நல்ல பலன் கிடைக்கும்.