
பன்முகத்தன்மை கொண்ட லெமன் பாம் (Melissa Officinalis) என்ற ஒரு செடி உங்க வீட்டுத்தோட்டத்தில் இருந்தால் உங்கள் மன அழுத்தம் குறையும், கொசுக்கள் உங்களை அண்டாது, பூக்களில் மகரந்தச் சேர்க்கை மடை திறந்த வெள்ளம்போல் பெருகும் என்பதெல்லாம் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இச் செடியிலிருந்து கிடைக்கும் நன்மைகளை சற்று விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.
அதிக வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் மற்றும் சோர்வு உண்டாகும்போது, 'லெமன் பாம்'மின் (Lemon Balm) அமைதி தரும் பண்புகள், கபா (GABA) போன்ற நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களில் உண்டாகும் அழுத்தத்தைக் குறைத்து, மனம் மயக்கம் அடைந்துவிடாமல் அமைதிபெற உதவுகின்றன. லெமன் பாம் இலைகளை இரண்டு விரல்களுக்கிடையில் வைத்து நசுக்கி முகர்ந்து அதன் வாசனையை ஆழ்ந்து உள்ளிளுத்தாலே உடனடியாக உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெரும் என மூலிகை மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
லெமன் பாமில் உள்ள சிட்ரோனெல்லால் (Citronellal) என்ற கூட்டுப் பொருள் கொசுக்கள் மனிதர்களை அண்டவிடாமல் பாதுகாப்பதில் வல்லமை கொண்டதாக உள்ளது. கொசுவை விரட்டுவதற்கு கடைகளில் விற்கப்படும் இராசாயனம் கலந்த கிரீம் போன்றவற்றை வாங்கி உபயோகிப்பதற்குப் பதில், இயற்கையான லெமன் பாம் இலைகளைக் கசக்கி உடலில் வெளியில் தெரியும் சருமப் பகுதி முழுவதும் தடவிவிட்டால், கொசு உள்பட மற்ற எந்த பூச்சிகளும் நம்மைக் கடிப்பதிலிருந்து தப்பிவிடலாம்.
லெமன் பாம் செடி அபாயகரமான பூச்சிகள் மனிதர்களை அண்ட விடாமல் பாதுகாப்பதுபோல், நன்மை தரும் பூச்சிகளை கவரவும் தவறுவதில்லை.
இதன் பெயரில் உள்ள 'Melissa' என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் 'தேனீ' என்று பொருள் கூறப்படுகிறது. பயன் பெரும் நோக்கில் இச்செடியை காய்கறிச் செடிகளுக்கு இடையில் நட்டு வைத்து வளர்ப்பது மகரந்தச் சேர்க்கை அதிகளவில் நடைபெற்று
காய்கறிகள் அதிகம் உற்பத்தியாக வழி கிடைக்கும். தக்காளி மற்றும் குவாஷ் போன்ற செடிகளுக்கு அருகில் லெமன் பாம் செடியை வளர்க்கலாம். இது நன்கு வளர பகுதி நேர வெயில்படும் இடங்களே பொருத்தமானது.
இந்த செடிக்கும் மற்ற செடிக்கும் இடையே சுமார் 20 இன்ச் இடைவெளி இருப்பது நல்லது.
இடையூரில்லாத உறக்கம்பெற கெமோமைல் மூலிகைத் தாவரம் உதவுவதுபோல் லெமன் பாமும் சிறந்த முறையில் உதவக் கூடியது. தூக்கமின்மைக்கு அடிப்படைக் காரணிகளாக விளங்கும் அமைதியின்மை, கவலைகள் போன்ற மனக்கோளாறுகளைக் கண்டறிந்து அதற்குத் தகுந்த விதத்தில் நிவாரணம் அளிப்பதில் லெமன் பாம் தன்னிகரற்றது எனலாம்.
தூக்க மாத்திரையை போட்டு, ஸ்விட்ச் ஆஃப் பண்ணினதுபோல் உடனடியா தூங்கிவிடுவது போலில்லாமல், லெமன் பாம் உள் மனதை அமைதிப் படுத்தி மெதுவா உறக்கம் கண்களைத் தழுவ உதவிபுரியும். சிறப்பான ஜீரணத்துக்கும் உதவும்.
ஒரே நேரம் நம் கார்டன் செழிக்கவும், நம் உடல் நலம் காக்கவும் உதவும் லெமன் பாம் ஒரு சிறந்த மூலிகை என்பதில் சந்தேகமில்லை.