
கோடைக்காலத்தில் மனிதர்களே கடுமையாக பாதிக்கப்படும்போது, அதன் தாக்கம் விலங்குகளையும் கடுமையாக பாதிக்கும். கோடைக் காலத்தில் ஏற்படும் கடுமையான வறட்சியில் வன விலங்குகள் மிகவும் கடுமையாக பாதிக்கும். கடும் வெப்பத்தில் குளங்கள், குட்டைகள், ஆறுகள், ஓடைகள் போன்றவை வறண்டு விடுவதால் நீரின்றி விலங்குகள் தவிக்கும். இந்த நேரத்தில் தாவரங்களும் முழுமையாக இலைகளை உதிர்த்து விடுவதால், தாவர உண்ணிகளுக்கு உணவுப் பற்றாக்குறையும் ஏற்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஒரு வறண்ட பாலைவனம். இங்கு வறண்ட பகுதிகளில் சில மரங்களை தவிர வேறு தாவரங்கள் வளருவது இல்லை. விலங்குகளுக்கு உணவு, நிழல் மற்றும் தண்ணீர் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் வெப்பநிலை பெரும்பாலும் 45°C க்கு மேல் உயரும். இந்த நேரத்தில் நீரிழப்பு விலங்குகளின் உயிருக்கு ஆபத்தானது.
2021 ஆம் ஆண்டு கோடையின்போது ராஜஸ்தானின் ஜோத்பூரில் விலங்குகளும் பறவைகளும் வெப்பத்தாலும் தாகத்தாலும் மடிந்து கொண்டிருந்தன. வறட்சியைத் தாங்கும் ஒட்டகங்கள் கூட தண்ணீர் பற்றாக்குறையால் இறந்தன.
ராஜஸ்தானின் கொளுத்தும் வெயிலில் விலங்குகளின் அவல நிலையைக் கண்ட, ஜோத்பூருக்கு அருகிலுள்ள பவர்லா கிராமத்தைச் சேர்ந்த ஏழு நண்பர்கள் குழு விலங்குகளை காப்பாற்ற முடிவு செய்தனர். இவர்களின் இந்த அமைப்பு ஜீவ் ஜந்து பிரேமி பந்து சன்ஸ்தா என பெயரிடப்பட்டது. இந்த அமைப்பு மார்ச் 7, 2021 தனது சேவையை தொடங்கியது.
இவர்கள் அனைவரும் முதலில் தலா ₹150 சேர்த்து, மொத்தமாக ₹1000 சேகரித்து பறவைகள் மற்றும் தெரு விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்கத் தொடங்கினர். விலங்குகளுக்கு தண்ணீர் வைக்க தொட்டிகள் மற்றும் பறவைகளுக்கு தானியம் வைக்க கிண்ணங்கள் என எளிய முயற்சியாகத் தொடங்கியது.
இவர்களின் குறிக்கோள் "ராஜஸ்தானில் கடுமையான கோடைக்காலத்தில் எந்த உயிரினமும் தாகம் அல்லது பசியால் இறக்கக் கூடாது" என்பதுதான். இந்த அமைப்பு இப்போது 35 கிராமங்களில் செயல்பட்டு 21 பெரிய மற்றும் 50 சிறிய நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வழங்குகிறது.
மொத்தத்தில், ஒரு கிராமத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 5000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. நான்கு ஆண்டுகளில் தண்ணீருக்காக மட்டும் அவர்களுக்கு ரூ.24 லட்சம் செலவு செய்துள்ளனர். தண்ணீரை டேங்கர் லாரிகள் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் நீர் தொட்டிகளில் விலங்குகள் குடிப்பதற்காக நிரப்பி வைக்கின்றனர்.
ஒவ்வொரு கிராமத்திற்கும் நீர் நிரப்பும் தொட்டிகளை கட்டி வைத்துள்ளனர். தினசரி 50கிலோ தானியங்களை ஒவ்வொரு கிராமத்திலும் தொட்டிகளில் நிரப்பி வைக்கின்றனர். பறவைகளுக்கு மாதந்தோறும் 150 குவிண்டால்களுக்கு மேல் தானியங்களை விநியோகித்து வருகின்றனர். இந்த சேவைகள் மூலம் பசுக்கள், நாய்கள், மான்கள், மற்றும் ஜோத்பூரின் ஜஜிவால் துரா பகுதியில் உள்ள சைபீரியன் குர்ஜா போன்ற புலம் பெயர்ந்த பறவைகள் வரை பலனடைகிறது.
இந்த அமைப்பின் ஒவ்வொரு உறுப்பினரும் அமாவாசை அன்று மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.100 பங்களிக்கின்றனர். இன்று, காவல்துறை அதிகாரிகள், செவிலியர்கள், ஆசிரியர்கள், ராணுவ அதிகாரிகள், வணிக உரிமையாளர்கள், கிராமவாசிகள் மற்றும் விவசாயிகள்வரை 690க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எங்களிடம் உள்ளனர். காலப்போக்கில் கிராமவாசிகள் பலரும் தாங்களாகவே தண்ணீர் மற்றும் உணவை வழங்கத் தொடங்கினர் என்று அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான தினேஷ் கூறுகிறார்.
தொடக்கத்தில் ரூ.1,000 ஆக இருந்த மாதாந்திர வசூல் கடந்த மாதம் ரூ.1.48 லட்சத்தை எட்டியது. மார்ச் 2025 நிலவரப்படி, இந்தக் குழு மொத்தம் ரூ.46.76 லட்சத்தை வசூலித்து, விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவளிக்கவும் தண்ணீர் ஊற்றவும் ரூ.43.89 லட்சத்தை செலவிட்டுள்ளது. மேலும் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்காக அவர்கள் 8500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் நட்டுள்ளனர்.