
இந்த பூமியில் வாழும் விலங்குகளில் சிலவற்றிற்கு தலைப்பகுதி மிகவும் பெரியதாக இருக்கிறது. இந்தப் பதிவில் மிகப்பெரிய தலைகளைக் கொண்ட சில விலங்குகள் பற்றி பார்ப்போம்.
1. நீலத்திமிங்கலம்: பூமியில் உள்ள மிகப்பெரிய விலங்குகளில் நீலத்திமிங்கலம் முதலிடம் வகிக்கிறது. இதனுடைய தலை சுமார் 18 அடி. அதாவது, ஐந்தரை மீட்டர் நீளம் உடையது. இதன் மொத்த உடலில் சுமார் 25 சதவீதம் தலைப்பகுதி மட்டும் உள்ளது. இது தினமும் உணவாக பல டன்கள் அளவில் மீன்களை விழுங்குகின்றன.
2. வில் தலை திமிங்கலம்: பிற எந்த உயிரினத்திற்கும் இல்லாத மிகப்பெரிய வாய் மற்றும் 17 அடி நீள மண்டையோடு கொண்டது இந்தத் திமிங்கலம். 100 டன் வரை எடையும், 50 முதல் 60 அடி நீளமும் கொண்டது. தனது சக்தி வாய்ந்த கூர்மையான தலையை பயன்படுத்தி அடர்த்தியான ஆர்க்டிக் பனிக்கட்டியை உடைக்கிறது. இதனுடைய உடல் மற்றும் தலைப் பகுதி மிகவும் கடுமையான சூழலுக்கு ஏற்றவாறு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய உடலின் முழு நீளத்தில் 25 சதவீதம் வரை தலைப்பகுதி உள்ளது. இதனுடைய அகலமான வாய்ப்பகுதி ஆர்க்டிக் நீரில் திறமையாக உணவு தேட உதவுகிறது.
3. திமிங்கல சுறா: இது மிகப்பெரிய மீன் இனம் ஆகும். பெரிய தலையையும் கொண்டுள்ளது. பிற திமிங்கலங்களை விட அளவில் சிறியதாக இருந்தாலும் இதனுடைய தலையின் அளவு அகலமாகவும், பெரிதாகவும் இருக்கிறது. இந்த சுறாக்கள் 40 அடி நீளம் வரை வளரக்கூடியவை. இதனுடைய தலை அகலமாகவும் தட்டையாகவும் இருக்கும். இது மெதுவாக நகரும் இயல்புடையது. மணிக்கு இரண்டு மைல் வேகத்தில் அமைதியாகப் பயணித்து சிறிய உயிரினங்களை ஈர்க்கிறது. திமிங்கல சுறாக்கள் மென்மையான ராட்சதர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஐந்து அடிக்கு மேல் நீளமான வாய் கொண்டவை. உலகெங்கிலும் உள்ள வெப்ப மண்டல பெருங்கடல்களில் இவை வாழும்.
4. பாஸ்கிங் சுறா: பாஸ்கிங் சுறா பார்ப்பதற்கு பயங்கரமாக தோற்றமளிக்கும். இந்த சுறா ஒரு பெரிய முக்கோண தலையைக் கொண்டுள்ளது. இதனுடைய உடலின் மொத்த நீளத்தில் மூன்றில் ஒரு பங்கு தலைப்பகுதி ஆகும். அதனுடைய மிகப்பெரிய மூன்று அடி அகலமான வாய் அதனுடைய உணவை வடிகட்டுவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது போல இருக்கும். சராசரியாக 20 முதல் 30 அடி வரை நீளம் கொண்ட இந்த சுறாவின் தலை மட்டும் ஐந்து முதல் ஏழு அடி வரை இருக்கும்.
5. பெலுகா திமிங்கலம்: நீலத்திமிங்கலத்தை விட அளவில் சிறியதாக இருந்தாலும் பெலுகா திமிங்கலம் அதனுடைய உடல் அளவுடன் ஒப்பிடும்போது, பெரிய மற்றும் வட்டமான தலையை கொண்டுள்ளது. பெலுகாக்கள் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் பிறக்கின்றன. அவை வளர வளர படிப்படியாக வெளிர் வெள்ளை நிறமாக மாறும். 7 முதல் 8 வயது வரையில் முழு வெள்ளை நிறத்தை அடைகின்றன. வெள்ளை நிறம் அவற்றின் பனிக்கட்டி சூழ்ந்த ஆர்க்டிக் வாழ்விடங்களில் உருமறைப்பை வழங்குகிறது. இதனால் துருவக் கரடிகள் மற்றும் கொலையாளி திமிங்கலங்கள் போன்ற விலங்குகளிடமிருந்து தன்னை மறைத்துக்கொள்ள உதவுகிறது.
6. ஆப்பிரிக்க யானை: நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது ஆப்பிரிக்க யானை. இதனுடைய பெரிய காதுகள், வலுவான தண்டு தசைகள் மற்றும் தந்தங்களை தாங்கும் அளவில் ஒரு பெரிய தலை உள்ளது. உடலின் வெப்ப ஒழுங்கு முறைக்கும், பிற யானைகளுடனான தகவல் தொடர்புக்கும், தாவர வகை உணவைத் தேடுவதற்கும் இந்தத் தலை உதவுகிறது.
7. காட்டெருமை: காட்டெருமையின் தலை பெரியதாக இருக்கும். இதனுடைய தலையில் இருக்கும் கனமான கொம்புகள் தன்னை தற்காத்துக் கொள்ளவும், பிற மிருகங்களை ஆதிக்கம் செலுத்துவதற்கும் பயன்படுகின்றது. இதனுடைய அகன்ற மண்டை ஓடு, கடினமான பொருட்களை மெல்வதற்குத் தேவையான சக்தி வாய்ந்த தாடைத் தசைகளை ஆதரிக்கிறது.