
ஒவ்வொரு வருடமும் வசந்தம் மற்றும் குளிர் காலங்களில் உயர்ந்த மலைகளின் அடிவாரத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் வண்ணமயமான காட்டுப் பூக்கள் பூத்துக் குலுங்கும். அவற்றிலுள்ள தேனை சேகரிக்க பூச்சிகளும் வண்டுகளும் வட்டமடித்துப் பறக்கும். அந்த மாதிரியான அழகிய 7 பள்ளத்தாக்குகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. வேலி ஆஃப் ஃபிளவர்ஸ் (Valley of Flowers), உத்தர்காண்ட் - இந்தியா: உலக பாரம்பரியக் களமான (The UNESCO world Heritage Site) இந்தப் பள்ளத்தாக்கு சுமார் 3,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு குளிர் காலத்திலும் இங்கே பூக்கள் பூத்துக் குலுங்கும். ப்ளூ ஹிமாலயன் பாப்பி, கோப்ரா லில்லி, ப்ரிமுலாஸ் மற்றும் ஆர்சிட்ஸ் போன்ற பூச்செடிகள் இப்பள்ளத்தாக்கு முழுவதும் செழித்து வளர்ந்துள்ளன. சாதாரண ப்ளூ அப்போல்லோ மற்றும் ஹிமாலயன் ஸ்வால்லோ டெய்ல் பட்டாம் பூச்சிகளை இங்கு காணலாம்.
2. காஸ் பிளேட்டு (Kaas Plateau) மகாராஷ்டிரா - இந்தியா: ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் இந்த பீடபூமி 850 வகை பூச்செடிகளால் பூத்துக் குலுங்கும். இதில் பல வகையான உள்ளூர் ஆர்சிட்ஸ், பால்சம்ஸ் மற்றும் பூச்சிகளை உண்ணும் ட்ரோசெறா செடிகள் அடங்கும். கிரிம்சன் ரோஸ், க்ராஸ் ஜுவெல், சதர்ன் பேர்ட்விங் வகை பட்டாம்பூச்சிகளையும் இங்கு காணலாம்.
3. ஆன்டெலோப் வேலி, கலிஃபோர்னியா பாப்பி ரிசர்வ் - USA: லாஸ் ஏஞ்சலேஸிலிருந்து இரண்டு மணி நேரத்தில் சென்றடையக்கூடிய தூரத்தில் உள்ளது இந்தப் பள்ளத்தாக்கு. வசந்த காலத்தில் தங்கக்கடல் போன்று தோற்றமளிக்கும் இந்த இடம். கலிஃபோர்னியா பாப்பி, லூபின்ஸ், ஃபிடில் நெக் மற்றும் கோல்டுஃபீல்டு போன்ற தாவரங்களால் மூடப்பட்டிருக்கும் ஆன்டெலோப் வேலி.
4. லஹால் அண்ட் ஸ்பிடி வேலிஸ் (Lahaul & Spiti Valleys), ஹிமாச்சல் பிரதேஷ் - இந்தியா: இந்தப் பள்ளத்தாக்குகள் வெறும் மலைகளாலான பரந்தவெளி மட்டுமல்ல, இங்கு பல வகை காட்டுப் பூக்களும் பூத்துக் குலுங்கி சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. சுற்றுச்சூழல் அமைப்பை சமநிலைப்படுத்த, இந்த உயரமான மலைகளில் பட்டாம்பூச்சிகளும் மோத்ஸ்களும் (Moths) பறந்து திரிவதையும் காண முடியும்.
5. கார்பதியன் (Carpathian) பள்ளத்தாக்கு - உக்ரைன் & ரொமானியா: கார்பதியன் மலைகள் சம்மர் சீசனில் பசுமையான, வண்ணக் கலவை நிறைந்த ஆர்சிட்ஸ், லில்லி, ஜென்டியன்ஸ் மற்றும் மீடோஸ்வீட் போன்ற பூ பூக்கும் செடிகளால் சூழப்பட்டு ரம்யமாகக் காட்சியளிக்கும்.
6. அவலாஞ்சி (Avalanche) பள்ளத்தாக்கு, ஊட்டி - இந்தியா: பருவ மழைக்காலங்களிலும் அதற்குப் பிந்தைய மாதங்களிலும் இந்தப் பள்ளத்தாக்கு ரோடோடென்ட்ரான்ஸ், மங்கோலியாஸ், ஆர்சிட்ஸ் மற்றும் அபூர்வமான உள்ளூர் வகைப் பூக்களாலான போர்வை போர்த்தியது போன்றதொரு காட்சி தரும். அங்கு நீலகிரி டைகர், நீலகிரி கிராஸ் எல்லோ என்ற பெயர்களுடைய வண்ணத்துப் பூச்சிகள் பலவற்றைக் காண முடியும்.
7. வேலி ஆஃப் டென் தவுஸண்ட் ஸ்மோக்ஸ் (Valley of Ten Thousand Smokes), அலாஸ்கா - USA: எரிமலைகளை பின்னணியாகக் கொண்டுள்ள இந்தப் பள்ளத்தாக்குகளில், ஃபையர்வீட், லூபின்ஸ், ஆர்க்டிக் பாப்பி போன்ற வண்ணமயமான பூக்கள் பூத்துக் குலுங்குவதைக் காண முடியும். குளிரை தாங்கிக்கொள்ள பழக்கப்பட்டுள்ள பம்பள்பீஸ் (bumblebees), மோத்ஸ் மற்றும் ஹார்டி போலினேட்டர் (Hardy Pollinator) போன்ற பூச்சி வகைகளையும் இங்கு காணலாம். சந்தர்ப்பம் கிடைக்கும்போது, தகுந்த சீசனில், நீங்களும் இந்த மாதிரி இடங்களுக்குச் சென்று கண்களுக்கு விருந்தளிக்கலாம்!