
சிவப்பு பாண்டா கரடி தினம் செப்டம்பர் மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் அழிந்து வரும் சிவப்பு பாண்டாக்களை பாதுகாக்கவும், அவை காடுகளில் சுதந்திரமாக வாழ ஆதரிக்கவும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. லெசர் பாண்டா, ஃபயர்பாக்ஸ் மற்றும் சிவப்பு பூனைக் கரடி என்றும் சிவப்பு பாண்டாக்கள் வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. சிவப்பு பாண்டாக்கள் மரங்களில் வாழ்ந்து மூங்கிலை உண்ணும் பாலூட்டிகள். இவை இந்தியா, பூட்டான் மற்றும் தெற்கு சீனாவின் மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கரடி குடும்பத்தின் ஒரே இனமாக இருக்கின்றன.
மேற்கு வங்கம், பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா நிர்வாகம் சுமார் ஐந்து ஆண்டுகளில் 20 சிவப்பு நிற பாண்டா கரடிகளை காடுகளுக்குள் விடுவிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 1944ம் ஆண்டில் இது சிவப்பு பாண்டா கரடிகளுக்கான முக்கிய வன வாழ்விடமாக அறிவிக்கப்பட்டது. இது சூழலியல் மாற்றத்திற்கான ஒரு குறிகாட்டி இனமாகவும் கருதப்படுகின்றன.
இந்தியாவின் இமயமலையில் சிவப்பு நிற பாண்டா மற்றும் சீன சிவப்பு நிற பாண்டா என பாண்டா கரடிகளின் இரண்டு துணை இனங்கள் காணப்படுகின்றன. சிவப்பு நிற பாண்டா ஊசி இலை காடுகளிலும் மிக வெப்ப மண்டல அகன்ற இலைகள் கொண்ட மற்றும் கலப்பு காடுகளிலும் வாழ்கின்றன. நீர் ஆதாரங்களுக்கு அருகில் அடர்த்தியான மூங்கில் மூடிய செங்குத்தான சரிவுகளை இது மிகவும் விரும்புகிறது. இது தனிமையானது மற்றும் பெரும்பாலும் மரக்கட்டை போன்றது. மிக முக்கியமாக மூங்கில் தளிர்கள் மற்றும் இலைகளை உணவாகக் கொள்கிறது. சில நேரங்களில் பழங்கள் மற்றும் பூக்களையும் உண்கின்றது.
இவை வசந்த காலத்தின் துவக்கத்தில் இனச்சேர்க்கை செய்கின்றன. கோடையில் பெண் பாண்டாக்கள் நான்கு குட்டிகள் வரை ஈன்றெடுக்கின்றன. சிவப்பு பாண்டா அதன் முன் பாதங்களில் ஒன்றைக் கொண்டு, உணவைப் பிடிக்கும். பொதுவாக, உட்கார்ந்தோ அல்லது நின்று கொண்டோதான் உணவை சாப்பிடும்.
மூங்கிலை தேடிச் செல்லும்போது அது செடியின் தண்டைப் பிடித்து அதன் தாடைகளை நோக்கி இழுத்து கன்னத்தின் பக்கவாட்டில் உள்ள பற்களால் இலைகளை கடித்து பின்னர் கத்தரித்து மென்று அதன் பின் விழுங்குகிறது. இது ஒரு நாளில் ஒன்றரை கிலோவுக்கும் அதிகமான புதிய இலைகள் அல்லது நாலு கிலோ புதிய தளிர்களை சாப்பிடும்.
சிவப்பு பாண்டாவிடமிருந்து குறைந்தது ஏழு வெவ்வேறு குரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உறுமல்கள், குரைப்புகள், அலறல்கள், முணுமுணுப்புகள், கத்துதல் ஆகியவை அடங்கும். சிவப்பு பாண்டாக்கள் தங்கள் வாழ்நாட்களில் சுமார் 55 சதவிகித நாட்களை தூங்குவதில் செலவிடுகின்றன. அவை காலை உணவைத் தேடி செல்லும்போது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். சிவப்பு பாண்டாக்கள் பனியை மிகவும் விரும்புகின்றன.
இது பெரும்பாலும் மரங்களில் நாளைக் கழிக்கிறது. உயரமான இடத்தில் தூங்குகிறது. அவை அந்தி நேரம் மற்றும் விடியற்காலை இருண்ட நேரங்களில் உணவைத் தேடிச் செல்லும். சிவப்பு பாண்டாக்கள் பலர் எதிர்பார்ப்பதை.விட சிறியவை. ஏனெனில், அவற்றின் பெயர் பெரும்பாலும் ராட்சத பாண்டாவுடன் தொடர்புடையது. சிவப்பு பாண்டாக்கள் அவற்றின் அடர்த்தியான சிவப்பு ரோமங்கள், குட்டையான மூக்குகள், கூர்மையான காதுகள் மற்றும் புதர் போன்ற வளையம் கொண்ட வால்கள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.
பெண் பாண்டாக்களுக்கு கீழே கண்ணீர் துளி வடிவ அடையாளங்களையும் காணலாம். சிவப்பு பாண்டாக்கள் 23 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்டது மற்றும் தோராயமாக 12 முதல் 14 வயதாகும்போது முதுமையின் அறிகுறிகளை காட்டத் தொடங்கும்.
கிழக்கு இமயமலை பகுதியில் இந்த இனத்தை பாதுகாப்பதில் ‘WWF இந்தியா 2005’ அமைப்பு ஈடுபட்டு உள்ளது. சிவப்பு பாண்டாக்கள் தங்கள் வாழும் குளிர்ந்த சூழலில் சூடாக இருக்க தங்கள் வால்களைப் பயன்படுத்துகின்றன. வீட்டுப் பூனைகளை போலவே நக்குவதன் மூலம் தங்களை அழகுபடுத்திக் கொள்கின்றன. சிவப்பு பாண்டாவின் வாழ்விடம், வீழ்ச்சியை தடுப்பது, சேதம் அடைந்த வாழ்விடங்களை மீட்டெடுப்பது, ஆதரிப்பது மற்றும் சிவப்பு பாண்டாவை அதன் வாழ்விடத்திலேயே வைத்து கவனித்துக்கொள்ள சமூகத்திற்கு அதிகாரம் அளிப்பது இதன் நோக்கம் ஆகும்.