அமேசான் பால் தவளைகள் அமேசான் மழைக் காடுகளை பூர்வீகமாகக் கொண்ட கண்கவர் உயிரினங்கள். இவற்றைப் பற்றிய சுவாரசியமான 7 உண்மை தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. உருவ அமைப்பு: அமேசான் பால் தவளை அளவில் பெரியதாக இருக்கும். 2.5 முதல் நான்கு அங்குல நீளம் வரை இருக்கும். பெண் தவளைகள், ஆண் தவளைகளை விட பெரியதாக இருக்கும். வயதான தவளைகள் வெளிர் நீலம் மற்றும் சாம்பல் நிறத்தில், கருப்பு அல்லது பழுப்பு நிற பட்டையுடன் காணப்படும்.
2. நீலத் தவளைகள்: இவற்றின் வாய் மற்றும் கால் விரல்கள் நீல நிறத்தில் இருக்கும். அதனால் நீலத் தவளைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. கண்கள் தனித்துவமான கருப்புப் புள்ளிகளுடன் தங்க நிறத்தில் இருக்கும். இவற்றின் கால் விரல்கள் பட்டையாக, பெரியதாகவும் ஒட்டும் தன்மையுடன் இருப்பதால் மழைக்காடுகளில் வசிப்பதற்கும் மர உச்சிகளில் எளிதாக ஏறவும் இறங்கவும் உதவுகின்றன.
3. வாழ்விடம்: இவை பொதுவாக மழைக் காடுகளில் மெதுவாக நகரும் தண்ணீருக்கு அருகில் வாழ்கின்றன. மரங்களில் தங்கி அரிதாகவே வனப்பகுதிக்கு கீழே இறங்குகின்றன. இவை பெரும்பாலும் அமெரிக்காவில் வாழும். மேலும் பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், டயானா மற்றும் பெரு போன்ற நாடுகளிலும் இருக்கின்றன. தென் அமெரிக்காவில், கடற்கரையில் உள்ள பிற தீவுகளிலும் வாழுகின்றன.
4. உணவு முறை: இவை இரவு நேர மாமிச உண்ணிகள். முதன்மையாக பூச்சிகள், சிலந்திகள், கிரிக்கெட்டுகள், அந்துப் பூச்சிகள் போன்றவற்றை உண்ணுகின்றன. மேலும், இவை வாரத்துக்கு ஒருமுறை தங்கள் தோலை உதிர்க்கும் பழக்கம் கொண்டவை. பின்னர் அவற்றை உண்ணும்.
5. இனப்பெருக்க நடத்தை: இந்தத் தவளைகள் ஒரு சுவாரஸ்யமான இனப்பெருக்க உத்தியைக் கையாளுகின்றன. அவை நீர் ஆதாரங்களுக்கு மேலே உள்ள மரங்களில் முட்டையிடுகின்றன. குஞ்சு பொரிக்கும்போது அவை கீழே உள்ள தண்ணீரில் விழுகின்றன. பெண் தவளை 2500 முட்டைகள் வரை இடுகிறது. 24 மணி நேரத்தில் குஞ்சு பொரிக்கும். ஆரம்பத்தில் சாம்பல் நிற டாட்போல்கள் தண்ணீரில் உள்ள டெட்ரிடஸை (சிதைந்த அல்லது மரித்துப் போனவற்றை) உண்ணும். டாட்போல்கள் நாணய அளவிலான தவளைகளாக உருமாற்றம் பெறுவதற்கு இரண்டு மாத காலம் ஆகும். வயது வந்த தவளைகளாக உருமாற்றம் ஆகும் வரை அவை தனது வளர்ச்சியைத் தண்ணீரிலேயே தொடர்கின்றன.
6. பால் போன்ற விஷம்: இவற்றின் தோலிலிருந்து பால் போன்ற வெள்ளையான பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தன்னை வேட்டையாடுபவர்களை தடுக்கக்கூடிய நச்சுக்கள் கலந்து இருக்கும். துர்நாற்றம் வீசக்கூடியது மற்றும் விஷத்தன்மை வாய்ந்தது. இதில் தனது இரையைப் பிடிக்கக்கூடிய நச்சுக்கள் கலந்துள்ளன. இந்த சுரப்பு மனிதர்களின் சருமத்தில் பட்டால் எரிச்சலை ஏற்படுத்தும்.
7. வண்ண மாறுபாடு: அமேசான் பால் தவளைகள் அவற்றின் வழக்கமான பச்சை மற்றும் கருப்பு நிறத்துடன் கூடுதலாக அவற்றின் சூழலை பொறுத்து பல்வேறு வண்ண மாறுபாடுகளைக் கொண்டிருக்கும். இவை ஒரு உருமறைப்பாக செயல்படுகின்றன. தங்களை வேட்டையாட வரும் உயிரினங்களிடமிருந்து மறைத்துக்கொள்ள உதவுகின்றன.