நம்முடன் இருக்கும் நம் அன்பிற்குரியவர்கள் அல்லது குடும்பத்தில் இருக்கும் ஒருவர் சோகமாக இருந்தால் அது நமக்கு மனதில் வலியை ஏற்படுத்தும். அதிலும் வாய் திறந்து காரணத்தை கூறாமல் சோகமாக இருப்பவர்களை உற்சாகப்படுத்தும் 6 அற்புதமான வழிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. பேசுவதைக் கேளுங்கள்: சோகத்தை அடுத்தவரிடம் கூறினால் அது பாதியாகக் குறைந்து விடும். ஆதலால், சோகமாக இருக்கும் நபரிடம் அச்சமயத்தில் பேசுவதோடு அவர் கூறுவதை கவனமாகக் கேட்க வேண்டும். முழுவதும் அவரை பேசவிட்ட பிறகே நீங்கள் பதில் கூற வேண்டும். ஒருவர் நாம் பேசுவதைக் கேட்கிறார் எனத் தெரியும் கணத்திலேயே அந்த நபரின் சோகம் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். அதேசமயத்தில் அவர், தனக்கு இதைப் பற்றி பேச விருப்பம் இல்லை என்று கூறிவிட்டால் அவரை தொல்லை செய்ய வேண்டாம்.
2. ஆறுதல் கூறுதல்: ஒருவர் சோகமாக இருக்கும்போது அவருக்கு ஆறுதல் தேவைப்படும் பட்சத்தில் வாய்மொழியாகவோ, உடல் மொழியாகவோ அதாவது கட்டிப்பிடித்தல், கையைப் பற்றிக் கொள்ளுதல் போன்ற செய்கைகளின் மூலம் அவருக்காக நாம் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக செய்யலாம். ‘பார்த்துக்கலாம்… இதுவும் கடந்து போகும்’ போன்ற வாசகங்கள் படங்களில் மட்டுமல்ல, உண்மை வாழ்க்கையிலும் ஒருவரை நன்றாக உணர வைக்க வல்லது.
3. அவர்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வது: சோகமாக இருக்கும் ஒருவரை உற்சாகப்படுத்த அவருக்குப் பிடித்த விஷயங்களை அவருடன் சேர்ந்து செய்வது, அதாவது அவர்களுக்குப் பிடித்த படத்தைப் பார்ப்பது அல்லது அவருக்குப் பிடித்த விளையாட்டை அவருடன் சேர்ந்து விளையாடுவது இப்படி எதுவாக இருந்தாலும் அதில் அவர்களையும் உட்படுத்த அவரது சோகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும்.
4. உணவு: உடலுக்கும் மனதிற்கும் உணவை போல் ஒரு அருமருந்து கிடையாது என்பதால், சோகமாக இருக்கும்போது அவருக்குப் பிடித்த வாய்க்கு ருசியான உணவுகளை வாங்கிக் கொடுப்பதோடு, அவருக்குப் பிடித்த இடத்திற்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தி சேர்ந்து சாப்பிட்டு சோகத்தை மறக்க உதவி செய்யலாம்.
5. பரிசுடன் கடிதம்: உங்களுக்குப் பிடித்த ஒருவர் சோகமாக இருக்கிறார் என்றால், அவருக்கு உங்களால் முடிந்த, அவருக்கு பிடித்த பொருளை வாங்கிக் கொடுக்கலாம். அது, அவர் சோகமாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமன்றி, அவருக்காக, அவருக்கு பிடித்த ஒரு உள்ளம் இங்கு இருக்கிறது என்பதை காண்பிப்பதற்காகவும் இதை செய்யலாம். இந்த பரிசுடன், உங்கள் மனதில் இருந்து எழுதிய குட்டி கடிதத்தையும் இணைக்கலாம்.
6. நம்பிக்கை: சோகமாக இருப்பவரிடம் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேச வேண்டும். தப்பித்தவறிக் கூட, ‘இதெல்லாம் ஒரு விஷயமா?’ என்று கேட்டு அவரது மனதை மேலும் காயப்படுத்தக் கூடாது. ‘இன்று இப்படி இருக்கிறது. ஆனால், கொஞ்ச நாள்ல இந்த நிலைமை மாறிடும்’ என்று உற்சாகப்படுத்தும் வார்த்தைகளைக் கூறி சோகமாக இருக்கும் நபரிடம் நம்பிக்கை விதைத்தால் சோகம் பனி போல விலகுவதைக் கண்கூடாகக் காணலாம்.
மேற்கூறிய 6 வழிகள் மூலம் சோகமான ஒரு நபரை உற்சாகப்படுத்த முடியும் என்பது அனுபவப் பூர்வமான உண்மை.