வீட்டிற்கு யாராவது தெரிந்த நெருங்கிய உறவினர் வந்தால் வீட்டுப் பக்கம் கொஞ்சம் இடம் இருந்தால் கூட அதைப் பார்த்துவிட்டு ஏதோ ஒரு முருங்கையோ தென்னை மரத்தை நட்டு வையுங்கள். தேவையான போது பயன்படுத்தலாம் என்று அறிவுரை கூறுவார்கள். அதைக் கேட்டு வளர்த்தவர்களும் அதிகமானோர் உண்டு. அப்படி வீட்டிற்கு பயன்பெறும் வகையில் வீட்டு தோட்டத்தில் எந்தெந்த மரங்களை வளர்க்கலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.
முருங்கையை போத்தாகவும், விதையாகவும் நடலாம். செடி முருங்கையை நட்ட ஆறு மாதங்களில் முருங்கைக்காயை அறுவடை செய்யலாம். போத்துக்களாக நட்டால் ஆறிலிருந்து எட்டு மாதத்திற்குள் முருங்கைக்காயை அறுவடை செய்யலாம். ஒரு மரம் ஏழு வருடம் வரை பயன் தரும். ஆறாவது வருடம் முடிந்து ஏழாவது வருடத்தில் புது போத்து நட்டால் இன்னும் அதிகமான பயன்களை தொடர்ந்து பெறலாம். வருடம் முழுவதும் முருங்கை மரத்தை கவாத்து செய்ய வேண்டும். இரண்டு அல்லது மூன்று மீட்டர் உயரத்தில் மரத்தை வெட்டி விட்டால் புது மொட்டுக்கள் உண்டாகும்.
புதுமொட்டுக்கள் உண்டானால் பூக்கள் அதிகமாக பூக்கும். ஜூலை - செப்டம்பர் மாதம் மற்றும் மார்ச் -ஏப்ரல் மாதங்களில் முருங்கைக்காயில் அதிகமாக மகசூளைப் பெறலாம். முருங்கை எல்லா வகை மண்ணிலும் வளர்க்கலாம். வண்டல் மண் பகுதியில் நன்கு வளரும். ஜூன் ஆகஸ்ட் மாதங்கள் நடுவதற்கு ஏற்றதாகும். முருங்கையில் இலை, காய், பூ ,பிசின் போன்றவை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றன. முருங்கைக்காய் சாம்பாரை ருசிக்காதவர் எவரும் உளரோ?
கருவேப்பிலையை ஜூன் ஆகஸ்ட் மாதங்களில் நடுவதற்கு ஏற்றவாறு பயிர் செய்ய வேண்டும். ஒரு வருட வயதுள்ள நாற்றுக்களை வாங்கி நட வேண்டும் . அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் கறிவேப்பிலை நன்றாக வளரும். எல்லா நிலங்களிலும் வளர வல்லது என்றாலும் வண்டல் மண் பகுதியில் நன்கு செழித்து வளரும் தன்மையுடையது. 20 முதல் 25 வருடம் வரை கருவேப்பிலை மரத்தில் இருந்து பலன்களை அனுபவிக்கலாம். இரண்டு அல்லது மூன்று மாத இடைவெளியில் கருவேப்பிலையை அறுவடை செய்யலாம். ஒரு மரத்திலிருந்து சுமார் 100 கிலோ எடையுள்ள இலைகளை ஒரு வருடத்தில் கிடைக்கும்படி செய்கிறது. இதை நடவு செய்ய 3 x 3 மீட்டர் இடைவெளியில் 45 × 45×45 சென்டிமீட்டர் ஆழம், அகலம், நீளமுள்ள குழியில் நட வேண்டும்.
தென்னையின் எல்லா பாகங்களும் உபயோகப்படுத்தப்படுவதால் இதை கல்பவிருட்சம் என்று அழைக்கின்றோம். வீட்டு தோட்டத்தில் நீங்காது இடம் பெறுவது தென்னை. பொதுவாக இது எல்லா வகை மண்ணிலும் நன்கு வளரும். தென்னையில் நெட்டை, குட்டை மற்றும் வீரிய ரகங்கள் உள்ளன. ஒன்பது முதல் 12 மாதங்கள் வயதுள்ள தென்னை நாற்றுக்களை ஒரு மீட்டர் அகலம் 1 மீட்டர் நீளம் 1 மீட்டர் அளவுள்ள குழிகளில் நட வேண்டும். பொதுவாக தென்னை மரத்துக்கு 15 அடியில் இருந்து 25 அடிவரை இடைவெளி விட்டு நட வேண்டும். தென்னை சுமார் 60 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். ஒரு மரத்திலிருந்து சுமாராக வருடத்திற்கு 60 -லிருந்து 90 காய்கள் வரை அறுவடை செய்யலாம்.
வடிகால் வசதி உள்ள எல்லா மண் வகைகளிலும் நன்கு வளர்வது நெல்லி. நன்கு வளர்ந்த மரங்களில் இருந்து 150 முதல் 200 கிலோ எடையுள்ள காய்கள் வரை ஒரு வருடத்திற்கு கிடைக்கும். காய்களில் வைட்டமின் சி என்ற சத்துப் பொருள் இருப்பதால் இது மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. இரட்டை மரங்களாக வீட்டில் வளர்ப்பது நல்லது.
இந்த மரத்தை ஒட்டுக்கள் மூலமாக இனப்பெருக்கம் செய்யலாம். ஒட்டு செடியே வீட்டில் வளர்க்க ஏற்றது. ஒரு வருடம் முடிந்த செடியை நடவு செய்யலாம். இவ்வகை மரங்களை வீட்டின் முன் நடுவதால் எல்லா காலங்களிலும் பசுமையாக இருக்கும். நன்கு வளர்ந்த மரங்கள் 8 முதல் 10 ஆண்டுகளில் இருந்து பலன் கொடுக்க ஆரம்பிக்கும். ஒரு மரத்திலிருந்து சுமார் 50 முதல் 80 கிலோ எடை உள்ள பழங்கள் கிடைக்கும்.
மா வை பொதுவாக எல்லா இடங்களிலும் பயிரிடலாம். வெயில் பாங்கான பகுதிகளில் சுமார் 750 மில்லி மீட்டர் மழை உள்ள பகுதிகளிலும் நன்கு வளரும். வீட்டுத் தோட்டத்தில் மாமரங்களை வளர்ப்பதால் ஐந்தாவது வருடத்தில் இருந்து நல்ல பலன் தர ஆரம்பிக்கிறது. பொதுவாக 10×10 மீட்டர் இடைவெளியில் ஒரு கன மீட்டர் குழிகளில் ஒட்டு செடிகளை நட வேண்டும்.
பலா மரங்கள் நட்ட இரண்டு முதல் மூன்று வருடங்களுக்குள் காய்க்க ஆரம்பிக்கின்றன. பலா செடிகளை அகல மற்றும் ஆழமுள்ள குழிகளில் மழைக்காலங்களில் நடவு செய்ய வேண்டும். ஒரு மரத்திலிருந்து வருடம் தோறும் சுமார் பத்து முதல் 30 பழங்கள் வரை அறுவடை செய்யலாம்.
பப்பாளி , சீதா , ராமர் சீதா, கொய்யா, சாத்துக்குடி , எலுமிச்சை, வாழை போன்ற மரங்களை வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் இடத்திற்கு தகுந்தவாறு வளர்த்து பயன்பெறலாம். இந்த மரங்கள் அனைத்தையும் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் போது இதன் வேர்கள் வீட்டின் அஸ்திவாரத்தில் படாதவாறு வளர்ப்பது மிக அவசியம். வாஸ்து முறைப்படி, இதனால் வீட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.