
சிங்கம், பூனை பேரினத்தைச் சேர்ந்தது. இந்தப் பேரினத்திலேயே, புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு இதுவாகும். ஆண் சிங்கம் 150 முதல் 250 கிலோ வரை எடையும், பெண் சிங்கம் 120 முதல் 150 கிலோ எடை கொண்டதாகவும் உள்ளது. இந்த விலங்கு ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அடர்ந்த காடுகளை சிங்கம் விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர் காடுகளில் வாழ்வதையே அதிகம் விரும்புகின்றன. சிங்கங்களின் ஆயுட்காலம் 10 முதல் 14 ஆண்டுகள் ஆகும். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 ஆண்டுகள். பெண் சிங்கங்களின் ஆயுட்காலம் 16 ஆண்டுகள் ஆகும்.
சிங்கத்தின் உடல் பாகங்கள் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதனால், கள்ளச் சந்தையில் சிங்கத்தின் உடல் உறுப்புக்கள் அதிக லாபத்திற்கு விற்பனையாவதாலும், சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் சிங்கத்தின் எலும்புகள், பற்கள் மற்றும் தோள்கள் உள்ளிட்ட அனைத்துமே கோடிக்கணக்கில் பணம் ஈட்டி தரும் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாகவே சிங்கங்கள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுகின்றன.
சிங்கங்கள் வழக்கமான பண்ணை விலங்குகள் அல்ல. ஆனால், ஆயிரக்கணக்கான சிங்கங்கள் அவற்றின் எலும்புகள் மற்றும் பிற உடல் பாகங்களுக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அவை மருத்துவ ரீதியாக வேலை செய்கின்றன என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், இந்த விலங்குகள் குறுகிய, கொடூரமான துன்ப வாழ்க்கையைக் கொண்டுள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் சிங்க விற்பனை ஒரு கவர்ச்சிகரமான பிசினஸ். சிங்க எலும்புகளுக்கு இங்கே வருடம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 1,500 சிங்கங்கள் வரை கொல்லப்படுகின்றன. பின் அதன் எலும்புகள் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக இங்கே 200 முதல் 400 சிங்க நிறுவனங்கள் உள்ளன.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ஆப்பிரிக்காவில் சுமார் 2,00,000 காட்டு சிங்கங்கள் இருந்தன. இன்று, மதிப்பீடுகளின்படி 20,000 முதல் 25,000 வரை காட்டு சிங்கங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. தற்போது உலகில் இரண்டு வகையான சிங்கங்கள் உள்ளன. ஆப்பிரிக்க சிங்கங்கள், ஆசிய சிங்கங்கள் ஆசிய சிங்கங்கள். ஆப்பிரிக்க சிங்கங்களை விட எடையிலும் உருவத்திலும் சற்று சிறியவை. ஆப்பிரிக்க சிங்கங்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் பல நாடுகளில் வசிக்கின்றன. ஏறத்தாழ அவற்றின் எண்ணிக்கை 24,000.
ஆனால், ஆசிய சிங்கங்கள் இந்தியாவில், அதுவும் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே உள்ளன. சொற்ப எண்ணிக்கையில் வாழும் இந்த சிங்கங்கள் உலகில் எங்குமே இல்லை. ஒரு காலத்தில் துருக்கி, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் பரவி வாழ்ந்து வந்த இந்த சிங்கங்கள் இன்று இந்தியாவின் கிர் காடுகளுக்குள் அடங்கிவிட்டன. ஈராக் நாட்டில் வாழ்ந்த கடைசி ஆசிய சிங்கம் 1918ம் ஆண்டும், ஈரான் நாட்டில் வாழ்ந்த கடைசி ஆசிய சிங்கம் 1941ம் ஆண்டும் வேட்டையாடப்பட்டு விட்டன.
சிங்கங்கள் அவற்றின் வரலாற்று வாழ்விடப் பரப்பில் 90 சதவிகிதத்துக்கும் மேலாக அழிந்து விட்டன. ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியிலும், ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளிலும் கூட அவை சுற்றித் திரிந்தன. ஆனால், இப்போது பெரும்பாலும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளன. இந்தியாவில் ஒரு சிறிய எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது.
தென்னாப்பிரிக்காவின் வணிக ரீதியான சிங்க இனப்பெருக்கம் முடிவுக்கு வர வேண்டும் என்று அதற்கு எதிராக பல்வேறு இயக்கங்கள் சிங்க இனத்தை காப்பாற்ற போராடி வருகின்றன. அதன் எதிரொலியாகத்தான் சிங்க இனத்தைக் காப்பாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த ஆகஸ்ட் 10ம் தேதி உலக சிங்கம் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது.