
வெப்பத்தை தாங்க முடியாத சில விலங்கினங்கள், வெப்பநிலை சாதாரண நிலைக்குத் திரும்பும் வரை தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள வெவ்வேறு வகையான வழிமுறைகளைக் கடைபிடித்து வருகின்றன. 8 வகையான விலங்குகள் வெப்பத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்கின்றன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஆப்பிரிக்கன் லங்ஃபிஷ்: ஆப்பிரிக்கன் லங்ஃபிஷ் வறட்சியை சமாளிக்க தன்னைத் தானே மண்ணுக்குள் புதைத்துக் கொள்ளும். பின் சளி போன்ற ஒரு திரவத்தை உற்பத்தி செய்து கூடு ஒன்றை கட்டிக்கொள்ளும். அதனுள் செயலற்ற நிலையில் நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்துவிடும். இப்படி நான்கு வருடங்கள் வரை கூட இந்த மீனால் உயிருடன் இறந்த மாதிரி இருக்க முடியும். திரும்பவும் நீர் வரத்து வந்த பின் சகஜ நிலைக்குத் திரும்பிவிடும்.
2. பாலைவன ஆமைகள்: இவை, பாலைவனப் பிரதேசத்தில், உச்சக்கட்ட வெப்பத்தை சமாளிக்க, குழிகளைத் தோண்டி அதற்குள் அசைவின்றி அமர்ந்து கொள்ளும். இதன் மூலம் உடலின் சக்தியையும், நீர்ச்சத்தையும் குறையாமல் பாதுகாத்துக் கொள்ளும்.
3. நத்தைகள்: ரோமன் நத்தை போன்ற தரையில் வாழும் நத்தைகள், கோடையில், தங்கள் உடலிலிருந்து சுரக்கும் சளி போன்ற திரவத்தால் கூட்டை சீல் வைத்து அடைத்தது போல் மூடிக்கொண்டு உள்ளே இருந்து கொள்ளும். இம்முறை, உடலின் சக்தியையும், நீர்ச்சத்தையும் சேமித்து வைக்க உதவும்.
4. முதலைகள்: தெளிவான ஆஸ்திரேலியன் நீர் நிலைகளில் வாழும் முதலைகள், கோடையில், அருகில் உள்ள ஆற்றுப் படுகைகளில் குழிகளைத் தோண்டி அதற்குள் அசைவின்றிப் படுத்துக் கொள்ளும். மறுபடி மழை பெய்து ஆறுகளில் தண்ணீர் சேரும்போது வெளியில் வரும்.
5. சாலமன்டெர்: நீர் நிலைகள் வறண்டுவிடும்போது, சலாமன்டெர்கள் தரையில் குழிகளைத் தோண்டி அதற்குள் அசைவின்றி அமர்ந்துகொள்ளும். குழிகளுக்கு வெளியில் மீண்டும் சூழ்நிலைகள் ஈரப்பதம் பெறும்போது அவை வெளியில் வந்து சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள ஆரம்பிக்கும்.
6. ஸ்பேட்ஃபுட் டோட் (Spadefoot Toad): ஸ்பேட்ஃபுட் டோட் போன்ற பாலைவனத் தவளைகள், மண்ணைத் தோண்டி குழி பறித்து அதற்குள் உட்கார்ந்து கொள்ளும். மீண்டும் எப்பொழுது மழை வரும், வாழ்க்கை சீராகும் என எண்ணிக்கொண்டு நாட்களைக் கழிக்கும்.
7. ஹெட்ஜ்ஹாக் (Hedgehog): உச்சக்கட்ட வெப்பத்தின் தாக்கத்தினால் உண்டாகும் அழுத்தத்தை சமாளிக்கவும், உடலின் நீரிழப்பைத் தடுக்கவும், ஹெட்ஜ்ஹாக் குழிக்குள் பதுங்கி அசைவற்ற உறக்க நிலைக்குச் சென்றுவிடும்.
8. மண்புழு (Earthworm): இது உலர்ந்த மண்ணில் மிக ஆழமாக குழிகளைத் தோண்டி அடிப் பகுதிக்குச் சென்றுவிடும். சளி போன்றதொரு திரவத்தை உற்பத்தி பண்ணி, தனது உடலைச் சுற்றி ஈரப்பதத்தை உண்டுபண்ணிக் கொண்டு அசைவின்றி உறங்க ஆரம்பித்து விடும்.