
விவசாயத் துறையில் லாபம் ஈட்ட மற்றுமொரு சிறந்த வழி மலர் சாகுபடி. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அதிகம் தேவைப்படும் மல்லி, முல்லை, சாமந்தி, ரோஜா மற்றும் கஸ்தூரி உள்ளிட்ட பல வகையான பூக்கள் தான் பெரும்பாலும் சாகுபடி வரிசையில் முன்னணியில் நிற்கின்றன. பொதுவாக பூக்கள் அதன் நறுமணம் மற்றும் வண்ணங்களுக்காக மக்களிடையே அதிக வரவேற்பைப் பெறுகின்றன. அவ்வகையில் ஆர்க்கிட் மலர்களின் (Orchid Flowers) அழகிய வண்ணங்களும், அதீத நறுமணமும் சந்தையில் அதற்கான தேவையை உறுதிப்படுத்தியுள்ளது.
மற்ற மலர்களைப் போல் அல்லாமல், ஆர்க்கிட் மலர்களை சாகுபடி செய்வது சற்று கடினம். ஏனெனில் இவை மண்ணில் வளராது. மாறாக மரங்களின் பட்டை அல்லது தாவர மேற்பரப்பில் வளரும் தன்மை கொண்டவை. ஆகையால் ஆர்க்கிட் மலர் சாகுபடியை செய்ய விரும்பும் விவசாயிகள் பசுமைக் குடில் அமைத்தால் சிறப்பாக இருக்கும். அதிக முதலீடும், பராமரிப்பும் தேவை என்பதால் சந்தையில் ஆர்க்கிட் மலர்களுக்கு அதிக விலை கிடைக்கும். அதோடு இவை நீண்ட நாட்களுக்கு வாடாமல் இருக்கும் என்பதால், விவசாயிகளுக்கு கூடுதல் நன்மையை அளிக்கிறது.
திருவிழாக்கள், திருமண விழா மற்றும் மிகப்பெரிய உணவு விடுதிகளில் அலங்கார நோக்கத்திற்காக ஆர்க்கிட் மலர்கள் பெருமளவில் வாங்கப்படுகின்றன. வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல காலநிலையில் ஆர்க்கிட் மலர்கள் நன்றாக செழித்து வளரும். டென்ட்ரோபியம் (Dendrobium), வாண்டா (Vanda), சிம்பிடியம் (Cymbidium) மற்றும் ஃபாலெனோப்சிஸ் (Phalaenopsis) போன்ற ஆர்க்கிட் இனங்கள் இந்தியாவில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் இடங்களில் டென்ட்ரோபியம் ஆர்க்கிட் மலர், சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும்.
பசுமைக்குடில்:
பசுமைக்குடில் அமைக்க அரசு சார்பில் மானியங்கள் வழங்கப்படுவதால், ஆர்க்கிட் மலர் சாகுபடிக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பசுமைக்குடிலில் 18°C முதல் 28°C வரையிலான வெப்பத்தை பராமரிப்பது அவசியம். அதோடு 75% பசுமை நிழல் வலையுடன், காற்றின் ஈரப்பதம் 70% முதல் 80% வரை இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
வளர்ப்பு முறை:
ஆர்க்கிட் மலர்கள் பொதுவாக திசு வளர்ப்பு முறையில் வளர்க்கப்படுகின்றன. இதற்கு மண் தேவையில்லை என்பதால், ஒரு பூத்தொட்டியில் தேங்காய் உமி, கரி, செங்கல் துகள்கள், ஓடுகள் மற்றும் உடைந்த ஃபைபர் துண்டுகளை நிரப்பி ஆர்க்கிட் மலர்ச் செடியை வளர்க்கலாம். நடவு செய்த பின், 30 நாட்கள் கழித்து 20:10:10 என்ற விகிதத்தில் NPK உரத்தை இட வேண்டும். ஒவ்வொரு 2 மாத இடைவெளியிலும் இலைகள் மற்றும் மலர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க, ஜிபரெலிக் அமிலத்தை (GA3) 200 ppm என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.
மலர்களின் ஆயுட்காலம்:
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆர்க்கிட் மலர்ச் செடிகள் இருக்கும் பூத்தொட்டியை மாற்ற வேண்டும். பொதுவாக புதிய வேர்கள் வெளிப்படும் தருணம் தான் பூத்தொட்டியை மாற்றுவதற்கு சிறந்த நேரமாக கருதப்படுகிறது. மற்ற மலர்களைக் காட்டிலும் ஆர்க்கிட் மலர்களின் ஆயுட்காலம் அதிகம் என்றாலும், இதனை மேலும் நீட்டிக்க பிஎ 25 ppm கரைசலில் 24 மணிநேரம் மலர்களை ஊற வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் 13.5 முதல் 24.5 நாட்கள் வரை ஆர்க்கிட் மலர்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.
இதுதவிர 8 HQC 200 ppm மற்றும் 5% சுக்ரோஸ் கரைசலில் ஆர்க்கிட் மலர்களை ஊற வைத்தால் 30.5 நாட்கள் வரை வாடாமல் இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பரிந்துரைக்கிறது.
ஆர்க்கிட் மலர்கள் பொதுவாக 75% மொட்டாக இருக்கும் போதே அறுவடை செய்யப்படும். அப்போது தான் நீண்ட நாட்களுக்கு தளர்வடையாமல் இருக்கும்.