
ஒவ்வொரு மனிதனுக்கும் இரவில் 8 மணி நேர தூக்கம் என்பது மிகவும் முக்கியம். அப்படித் தூங்கினால்தான் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் காணப்படும். நல்ல உறக்கத்திற்கு உங்கள் வீட்டு படுக்கையறையில் சில செடிகளை வளர்க்கலாம். அந்த வகையில் படுக்கையறையில் வளர்ப்பதற்கேற்ற 8 செடிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. பீஸ் லில்லி எனப்படும் அமைதி அல்லி: அமைதி அல்லி என்பது ஒரு அழகான படுக்கையறையில் வைத்துக்கொள்ள உகந்த செடியாகும். இது மந்தமான இடத்தை மகிழ்விக்கும் குறைந்த பராமரிப்புள்ள செடியாகும். இது அடர் பச்சை வண்ணத்தில் இருக்கும். இதன் கண்ணாடி போன்ற இலைகள், அதன் வெள்ளை மலர்கள் உங்களுக்கு அமைதியான மனநிலையை ஏற்படுத்தி கவலைகளைக் குறைத்து நிறைந்த தூக்கத்தை வரவழைக்கின்றன. அமைதி அல்லி செடிகள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றல்களை கொண்டு வருகின்றன. அறைகளுக்கு கூடுதலாக வெளிச்சத்தையும் கொண்டு வருகின்றன.
2. பாஸ்டன் ஃபெர்ன் (Boston Fern): பாஸ்டன் ஃபெர்ன் என்பது பசுமையான செடியாகும். இது வீட்டில் உள்ள சைலென் மற்றும் ஃபார்மால்டிஹைட் என்ற மாசுக்களை அகற்றும் தன்மை கொண்டது. இது மறைமுக சூரிய ஒளியிலேயே செழித்து வளரும். இந்த செடியானது அதிக ஈரப்பதத்தை தக்கவைத்து வறட்சியை நீக்குகிறது.
3. ஆரோஹெட் எனப்படும் அம்புக்குறிச் செடி (Arrow Head): அம்புக்குறி செடியின் இலைகள் அம்புக்குறி போன்ற வடிவில் இருப்பதால் இப்பெயர் பெறுகின்றன. இது பசுமை மற்றும் பழுப்பு வண்ணங்களில் இருக்கும். இது இயற்கையில் காற்றை சுத்தப்படுத்தும். இது வீடுகளில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. அலங்கார செடியாக பெரிதும் வளர்க்கப்படுகின்றன.
4. மான்ஸ்டெரா (Monstera): மான்ஸ்டெரா செடி பச்சைப்பசேலென, பளபளப்பான எளிதில் வளர்க்கக்கூடிய இதய வடிவ கிழிந்த இலைகளைக் கொண்டதாகும். அது இந்தச் செடிக்கு கூடுதல் அழகு சேர்த்து வீட்டை பணக்காரத் தோற்றத்திற்கு மாற்றிவிடும். இந்த வகைச் செடிகள் காற்றின் தரத்தை மேம்படுத்துகின்றன.
5. அரிக்கா பால்ம் (Areca Palm): அரிக்கா பால்ம் என்பது மற்றொரு அழகியச் செடி. சிறிய நீளமான இலைகளைக் கொண்ட செடியாகும். இரவில் கூட ஆக்ஸிஜனை வெளியிடும் அரிய வகை தாவரங்களில் ஒன்று. சிறந்த காற்று சுத்திகரிப்பு செடியாகும். இது வீட்டுக்கு அழகான தோற்றத்தைத் தரும்.
6. ஸ்நேக் ப்ளான்ட் எனப்படும் பாம்புச் செடி: பாம்புச் செடியின் இலைகள் பாம்பு போல் நீண்டிருக்கும். இது காற்றில் இருந்து தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உறிஞ்சி பார்மால்டிஹைடு மற்றும் பென்சீன் போன்ற விஷங்களை நீக்குகிறது. பல ஆண்டுகள் கூட இந்தச் செடி சூரிய ஒளி இல்லாமல் வளரும். பல்புகள் அல்லது வெளிச்சம் தரும் மற்ற பொருட்களிடம் இருந்து தனக்குத் தேவையான ஒளியை இது எடுத்துக்கொண்டு வளரும்.
7. அதிர்ஷ்ட மூங்கில்: அதிர்ஷ்ட மூங்கில் செடிகள் மிகவும் சிறிய வகை வீட்டுச் செடிகள் ஆகும். இதை நீங்கள் வளர்ப்பது மிகவும் எளிது. அது தானாகவே அழகாக வளரும். இது உங்கள் வீட்டில் ஒரு இதமான சூழலை உருவாக்கும். இது உங்கள் வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
8. இசட் இசட் தாவரம்: குறைவான ஒளியிலும் நன்றாக வளரக்கூடியது இசட் இசட் தாவரம். இதற்குத் குறைவான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. இதன் இலைகள் வட்டமாகவும், கண்ணாடி போன்றும் தோற்றமளிக்கும். அவை காற்றை சுத்தம் செய்யக்கூடியவை. உங்கள் படுக்கையறைக்கு பளிச் தோற்றத்தை தரும். இதமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்.