
எறும்புகள் என்றாலே அவை சிறிய அளவில்தான் இருக்கும் என நம்மில் பெரும்பாலானோர் நினைத்திருப்போம். ஆனால், உலக அளவில் மிகப்பெரிய அளவில் உள்ள ராட்சச எறும்புகளும் வசிக்கின்றன என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? தமது உடல் அமைப்பு மற்றும் குணாதிசயங்களால் வித்தியாசப்படும் எட்டு வகை எறும்புகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
டயனோபோனெரா ஜைஜாண்டியா (Dinoponera gigantea): இந்த வகை எறும்பு மிகப் பெரிய உடல் அமைப்பைக் கொண்டது. இந்த வகை எறும்பு சுமார் 33 மில்லி மீட்டர் வளரக் கூடியது. இந்த வகை எறும்புகளை அமேசான் காடுகளில் காணலாம்.
மிர்மெசியா ப்ரெவினோடா (Giant bulldog ant): இந்த வகை அரிய எறும்புகளை நாம் ஆஸ்திரேலியாவில் காணலாம். இந்த எறும்பு வகை சுமார் 37 மில்லி மீட்டர் நீளமாக வளரும் தன்மை கொண்டது. இதன் பெரிய உடல் அமைப்பு மற்றும் இதன் கீழ்த்தாடையின் அமைப்பு இதை வித்தியாசமான எறும்பாகக் காட்டுகிறது. வேட்டையாடுவதில் மிகச் சிறந்ததாக இவை கருதப்படுகின்றன.
காம்போ நோடஸ் கிகாஸ் (Giant forest ant): தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்ற இந்த வகை எறும்புகள் 38 மில்லி மீட்டர் வரை வளரும். இவை பெரும்பாலும் தேனை உணவாக விரும்பும். இந்த வகை எறும்புகள் தங்களை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள பெரும்பாலும் இரவிலேயே காணப்படும்.
பாராபோனேரா க்ளாவேடா (Bullet ant): இந்த வகை எறும்பு தேள் போல் கொட்டும் பண்பைப் பெற்றது. மத்திய மற்றும் தென் அமெரிக்க மழைப் பிரதேசங்களில் இவற்றைப் பார்க்கலாம். இது கடிக்கும்போது மிகவும் வலி ஏற்படுத்தக்கூடியதால் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
டோரிஸ் க்வீன் (African driver ant queens): இந்த வகை எறும்புகளை டிரைவர் எறும்புகள் என்று அழைப்பார்கள். இவை கூட்டம் கூட்டமாகக் காணப்படும். கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா பகுதிகளில் இவற்றைக் காணலாம்.
மெடாபேல் எறும்புகள் (Matabele ants): இந்த வகை எறும்புகள் 25 மில்லி மீட்டர் நீளம் வரை வளரும். இவை கூட்டம் கூட்டமாகத் தாக்கும் குணம் கொண்டவை.
ராட்சத அறுவடை எறும்புகள் (Largest harvester ants): இந்த வகை எறும்பு தனது மிகப் பெரிய அமைப்பினால் தனித்தன்மையுடன் விளங்குகிறது. ராணி எறும்புகள் இன்னும் பெரிய அமைப்பைக் கொண்டதாக இருக்கும். இவற்றின் வாழ்க்கை ஒழுங்குமுறை கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.
பறக்கும் எறும்புகள் (Flying ants): இந்த வகை எறும்புகள் அழிந்து வரும் இனமாகக் கருதப்படுகின்றன. இந்த எறும்புகளுக்கு இறகுகள் உண்டு. இந்த எறும்புகள் வெப்பமான பகுதிகளில் மட்டுமே காணப்படும்.