இயற்கையின் மடியில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதாலோ என்னவோ தன்னுடைய சுற்றுப்புறத்தை பசுமையாக வைத்துக் கொள்வதில் எப்போதும் மனிதர்களுக்கு ஒரு அலாதி பிரியம் உண்டு. எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் பசுமையை பார்க்கும்போது அது குறைந்து தான் போகிறது என்று கூட சொல்லலாம்.
முன்பெல்லாம் நம்முடைய சுற்றுப்புறங்கள் அனைத்தும் எப்போதும் பசுமையாக கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். தற்போது இட நெருக்கடியான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதால் அந்த இயற்கையின் அழகு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதிலும் நகரங்களில் வசிப்பவர்கள் கண்களில் பசுமையை பார்ப்பதே ஒரு மிகப்பெரிய வரமாய் மாறி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு ஏற்ப நாமும் சூழல்கள் எவ்வாறு மாறி இருப்பினும் இயற்கையை தன்னோடு இணைத்துக் கொள்ள புது புது யுக்திகளை கண்டுபிடித்து கொண்டு தான் இருக்கிறோம். அதுதான் புதிய வரவாய் நம்முடனே மெல்ல மெல்ல இணைந்து கொண்டு வரும் இந்த இயற்கையான தொங்கும் செடி வகைகள்.
செடிகள் வளர்ப்பதற்கான போதுமான இடவசதி இல்லாத போது நம்முடைய முதல் தேர்வாக இருப்பது இத்தகைய தொங்கும் செடி வகைகளே. இத்தகைய தொங்கும் செடி வகைகளை வளர்க்கும் போது அதற்கான இட பிரச்சினைகளையும் தாண்டி, அதனை பராமரிப்பதும் நமக்கு மிகவும் எளிதாக உள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த தொங்கும் செடி வகைகள் சிலவற்றினை இப்பதிவில் காணலாம்.
வீட்டில் செடி வளர்க்க வேண்டும் என்றாலே நம்முடைய முதல் தேர்வு இந்த மணி பிளான்ட் வகைகளாக தான் இருக்கும். சிறிய தண்டு பகுதியை ஒடித்து வைத்தாலும் அதனைப் பற்றிக் கொண்டு விறு விறுவென வளர்ந்து விடும். குறைவான சூரிய வெளிச்சம், குறைவான ஈரப்பதமே இதற்கு போதுமானது. நன்கு வளர்ந்து அது கீழே தொங்கும் போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்தச் செடியை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பதும் மக்களின் பரவலாக நம்பிக்கையாக உள்ளது.
மேஜை ரோஜாக்கள்(table rose ) பலவகையான வண்ணங்களில் கிடைக்கக்கூடிய ஒருவகையான செடி. தண்டு பகுதியை கிள்ளி மண்ணில் வைத்தாலே அதனைப் பற்றிக் கொண்டு நன்கு வளரும். இதற்கும் மிதமான சூரிய வெளிச்சம் இருந்தாலே போதுமானது. அதுவும் ஒரே தொட்டியில் பல வகையான வண்ணங்களை கலந்து வளர்க்கும் போது பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இத்தகைய மேஜை ரோஜாக்கள் மருத்துவ குணம் வாய்ந்ததாகவும், சரும பராமரிப்பிலும் பயன்படுகிறது.
பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் நீளமான இலைகளுடன் மிக அழகாக இருக்கக்கூடியது ஸ்பைடர் பிளான்ட் செடி வகைகள். இவை தொட்டியில் வைத்து இலைகள் கீழே தொங்கும் போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இதற்கும் மிதமான சூரிய வெளிச்சமே போதுமானது.
இலையின் மேல்புறம் பச்சை நிறத்திலும் இலையின் அடிப்புறம் ஊதா நிறத்திலும் இருக்கக்கூடிய இந்த வகை செடிகள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். இத்தகைய செடிகள் மிகவும் வேகமாக வளரக்கூடியவை. தண்டுப் பகுதியை மட்டும் கிள்ளி வைத்தாலே அதிலிருந்து வளரும் தன்மை உள்ளது. இச்செடிகளுக்கு மிதமான சூரிய வெளிச்சமும் மிதமான ஈரப்பதமும் தேவை.
பச்சை சிவப்பு வெண்மையான புள்ளிகளுடன் மூன்று வித வண்ணங்களில் இந்த வகை செடிகள் இருக்கும். இத்தகைய செடிகள் வளர்வதற்கு அதிகமான ஈரப்பதம் தேவை. சூரியனின் நேரடியான வெப்பம் படாத இடங்களில் இத்தகைய செடிகளை வளர்க்க வேண்டும். இச்செடிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக பலவித நிறங்களுடன் காணப்படும்.
பரோவின் வால் என்று அழைக்கப்படக்கூடிய இத்தகைய செடி வகைகள் அதிக சதைப் பற்றுள்ளவை. நீண்ட காலம் கூட தண்ணீர் இல்லாமல் இருக்கும். ஆனால் இதற்கு சூரியனது நேரடியான வெளிச்சம் தேவை. பார்ப்பதற்கு ஜடை பின்னல் போன்று, கவரக்கூடிய வகையில் உள்ளது இத்தகைய செடிகள்.
சிறிய குமிழிகளை (pebbles) போன்று இதன் இலைகள் இருக்கும். நீண்ட தொங்கும் தண்டுகளை உடைய செடியில் இருக்கும் இத்தகைய குமிழி போன்ற இலைகள் பார்ப்பதற்கு முத்துக்களை வரிசையாக தொடுத்து வைத்தார் போல் இருக்கும். இதுவும் வீட்டை அலங்கரிக்க கூடிய ஒரு முக்கிய செடி என்று சொல்லலாம். இந்தச் செடிகள் வளர்வதற்கும் மிதமான ஈரப்பதம் மற்றும் மிதமான சூரிய வெளிச்சமே போதுமானது.
குழந்தையின் கண்ணீர் என்று சொல்லக்கூடிய இத்தகைய செடிகள் பச்சை நிறத்தில் பேப்பரால் செய்யப்பட்ட சிறிய ரோஜாக்களை அடுக்கி வைத்தது போன்று பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மிகுந்த சதைப்பற்றுள்ள இத்தகைய தாவரங்கள் வீட்டை அழகு படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. இத்தகைய செடிகளுக்கு மிதமான ஈரப்பதமே போதுமானது.
வீடுகளில் இத்தகைய செடிகளை வளர்க்கும் போது நம்முடைய மனநிலையை மிகவும் இலகுவானதாக மாற்றுவதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. நம்முடைய சுற்றுப்புறத்தை நமக்கு தகுந்த மாதிரி மாற்றிக் கொள்வதன் மூலம் நம்முடைய மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளலாம் தானே!