உலகின் மிகவும் பழமையான பறவை இனம் ஒன்றில் ஒரு பறவை 74 வயதில் முட்டையிட்டிருக்கிறது. அந்த பறவை பற்றிப் பார்ப்போம்.
நாம் அன்றாடம் பார்க்கும் காக்கை போன்ற பறவைகள் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை வாழலாம். ஆனால் காட்டில் வாழும் பல பறவைகள் 100 வயது வரையில் கூட வாழும். ஒவ்வொரு இனமும் குறிப்பிட்ட சில ஆண்டுகள் காலம் வாழும். ஆனால் காட்டில் உள்ள பறவைகளைவிட சரணாலயங்களில் இருக்கும் பறவைகளின் செயல்பாட்டை நம்மால் தொடர்ந்து கவனிக்க முடியும். அதாவது எப்போது முட்டையிடும், எத்தனை வயதாகிறது போன்றவற்றை நம்மால் கவனிக்க முடியும். அந்தவகையில், அல்பாட்ராஸ் இனத்தைச் சேர்ந்த லேசன் அல்பாட்ராஸ், பறவை ஒன்று நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஹவாய் தீவில் உள்ள மிட்வே அடோல் தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் முட்டையிட்டுள்ளது.
இந்த பறவையின் பெயர் விஸ்டம். இது இட்டுள்ள முட்டை 60வது முட்டையாக இருக்கும் இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். நீண்ட சிறகுகள் கொண்ட லேசன் அல்பட்ரோஸ் கடற்பறவைகள் வாழ்நாள் முழுவதும் துணையுடன் இணைந்திருக்கும். அது வருடத்திற்கு ஒரு முட்டை இடும்.
இந்த இனத்தின் பெற்றோர்கள் மாறி மாறி சுமார் 7 மாதங்கள் முட்டையை அடைகாக்கின்றன. குஞ்சு பொரித்து ஐந்து முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு கடலுக்குப் பறக்கும். இந்த பறவைகள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை கடலுக்கு மேல் பறந்து கணவாய் மற்றும் மீன் முட்டைகளை உண்கின்றன.
தற்போது முட்டையிட்டுள்ள இந்த விஸ்டம் பறவை 1956ம் ஆண்டு ஒரு வயது பறவையாக இந்த சரணாயத்திற்கு வந்தது. இதுவரை சுமார் 30 குஞ்சுகளைப் பொரித்திருக்கும்.
விஸ்டம் அதன் துணை பறவையான அகேகாமாய் உடன் சேர்ந்து முட்டையிட்டு வந்தது. ஆனால், அந்த பறவையை 2006ம் ஆண்டிலிருந்து காணவில்லை. ஆகையால் இதன்பின்னர் வேறு துணையுடன் சேர்ந்து முட்டையிட்டு வருகிறது. இந்த இன பறவையின் ஆயுட்காலம் 68 ஆகும். ஆனால், 74 வயதான விஸ்டம் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில், தற்போது ஒரு முட்டையையும் இட்டிருக்கிறது. இது குஞ்சு பொரிக்க 7 மாதக் காலம் அடைகாக்க வேண்டும். பின் இதனை சில காலம் வளர்க்கும் பொறுப்பும் விஸ்டமிற்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.