
குரங்குகள் பொதுவாக கனி, இலை, பூ முதலியவற்றை சாப்பிடும். இன்னும் சில வகை குரங்குகள் பூச்சி, சிலந்தி, தேள், பல்லி, ஓணான், தவளை முதலியவற்றையும் சாப்பிடும். உணவுக்கேற்ப இவற்றின் பற்களும் அமைந்துள்ளன. மனிதனைப் போல இவற்றிற்கும் 32 பற்கள் உண்டு. முன்பற்கள் வெட்டி கடிக்கவும், கோரப்பல் குத்தி கடிக்கவும் பயன்படுகிறது.
எல்லா குரங்குகளை விடவும் கொரில்லா பெரியது. மேற்கு ஆப்பிரிக்காவில் பூமத்திய மண்டலத்தில் உள்ள நெருக்கமான காடுகளில் வசிக்கும் இந்த வகை கொரில்லாக்கள் ஐந்தரை அடி உயரம் இருந்தாலும் 420 பவுண்டு எடை உடையதாக இருக்கும். பெண் கொரில்லாக்களை விட, ஆண் கொரில்லாக்கள் பெரியது. அது குடும்பத்துடன் சுற்றித் திரியும். இதன் தோள்பட்டைகள் அகலமாய் இருப்பதிலிருந்து இதன் வலிமை அதிகம் என்பதை உணரலாம்.
கொரில்லாவின் முகம் கருப்பு, வாய் அகலம், பற்கள் பளிச்சென்ற வெண்மை நிறத்தில் இருக்கும். முகத்தில் முடியிராது, காதுகள் சிறியவை, முழு வளர்ச்சியடைந்த கொரில்லாவை உயிரோடு சிறைப்படுத்த முடியாது என்கின்றனர். கொரில்லாக்கள் நிமிர்ந்த பின் கால்களை தேய்த்துத் தேய்த்து நடக்கும். ஆனால், சாதாரணமாக கை விரல்களை உள்ளடக்கி விரல் நுனிகளை அடிக்கடி தரையில் ஊன்றி நடக்கும். மரங்களில் வசிக்கும் குரங்குகளின் அடிகளுக்கும், தரையில் நடக்கும் மக்களின் அடிகளுக்கும் நடுத்தரமாக இதன் அடி அமைந்திருக்கிறது. காலின் பெருவிரல் மற்ற விரல்களோடு சேர்ந்திடாமல் சற்று பிரிந்திருக்கும். சிம்பன்சியை விட இதன் உருவம் மக்கள் உருவம் போலிருக்கும்.
இதன் மூக்குக்கு நடுத்தண்டு உண்டு. மூக்கு துவாரங்கள் மிகவும் அகலமாக இருக்கின்றன. கைகளும், கால்களும் குள்ளமாகவும், அகலமாகவும் காணப்படுகின்றன. மரத்தை விட்டு இறங்கி தரையில் நடக்கும் வழக்கத்தால் இவற்றின் குதிகால் வளர்ந்திருக்க வேண்டும் என்கிறார்கள். இவற்றின் தசைகள் பெரும்பாலும் மக்களுடைய தசைகளைப் போல் இருக்கின்றது.
கண் குழிகளுக்கு மேல் உள்ள வரம்பு கட்டு முன் வந்திருப்பதால் முகம் சற்று விகாரமாக இருக்கிறது. இவ்விலங்குகள் மற்ற பிராணிகளோடு சமாதானமாகவே வாழ்கின்றன. மரத்தின் மேலே குரங்குகள் இருந்தாலும், அதன் நிழலிலே மானும் காட்டுப் பசுவும் வந்து அது உதிர்க்கும் பழம் முதலியவற்றை சாப்பிடுகிறது. குரங்குகளுக்கு முக்கியப் பகை மனிதன் மற்றும் சிறுத்தைதான். இவை பாம்பை கண்டால் பெரிதும் அஞ்சும்.
கிபன் வகை குரங்கு ஒரே பெண் குரங்குடன்தான் வாழும். இந்தக் கூட்டங்கள் தத்தமக்குரிய பகுதியிலேயே வசிக்கும். மற்றொன்றுக்குரிய இடத்தில் புகுந்தால் சண்டை நடப்பதுண்டு. நல்ல பழத் தோட்டத்தைக் கண்டால் அதை பற்றிக்கொள்ள குரங்கு கூட்டங்கள் போட்டியிடுவதுண்டு. இரையைத் தேடி இவை இடம் பெயர்ந்து செல்வதும் உண்டு. இதுபோல், ஒவ்வொரு குரங்கும் அதன் தனித்தன்மையோடு காட்டில் வாழ்ந்து வருகின்றன. சுற்றுலா தலங்கள், விலங்குகள் பூங்கா போன்றவற்றிற்கு செல்லும்பொழுது இவற்றை அச்சுறுத்தாமல் இருக்க நாமும் பழக வேண்டும். குழந்தைகளுக்கும் அதை கற்றுத் தர வேண்டும்.