
அக்கரகாரம் என்னும் மூலிகைச் செடி கருமண் கலந்த கரை மண்ணில் நன்கு வளரும். அமிலத்தன்மை கொண்ட இது, ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மூலிகையாகும். தமிழ்நாட்டில் 1000 முதல் 1500 அடி வரை உயரமுள்ள மலைப்பிரதேசங்களில் இது பயிரிடப்படுகிறது. இந்திய மருத்துவத்தில் இது அதிக மதிப்பு உடையது. இதன் இலைகள் 15 சென்டி மீட்டர் நீளமானதாகவும் ஆரம்பத்தில் இளம் பச்சை நிறமாகவும் முதிர்ச்சியாகும்போது லேசான ஊதா நிறத்திற்கும் மாறிவிடும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிவப்பு புள்ளிகளுடன் காணப்படும். ஒவ்வொரு செடியிலும் சுமார் 7 முதல் 10 பூக்கள் வரை இருக்கும்.
இந்த மூலிகை செடியில் சல்லி வேர்கள் அதிகம் காணப்படும். வேர்கள் ஐந்து முதல் பத்து செண்டி மீட்டர் நீளமானதாக இருக்கும். இந்தியாவில் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்திரபிரதேசம் மாநிலங்களிலும் இது பயிரிடப்படுகிறது. இந்தச் செடி வேர்களில் இருந்து பெல்லிட் டோரின், பைரித்திரின் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இச்செடியை நட்ட ஆறு மாதத்தில் அறுவடை செய்யலாம். ஒரு மாத வயது உடைய நாற்றை நட வேண்டும். நர்சரியில் இது கிடைக்கும்.
இச்செடியின் இலைகள் பழுப்பு நிறமாக மாறி பூக்கள் காய்ந்து விடும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து காற்றோட்டம் உள்ள இடங்களை பரப்பி பத்து நாட்கள் உலர்த்தி மருத்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும். வேரில் இருந்து மெழுகு, மருந்து பொருள் செய்யப்படுகிறது. இது வாத நோய் நிவாரணத்திற்கும் நரம்பு தளர்ச்சி, காக்காய் வலிப்பு நோய்க்கும் உடனடி நிவாரணமாகும். இம்மூலிகை மூளையின் நரம்பு மண்டல வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. உமிழ் நீரைப் பெருக்கி தொண்டையில் ஏற்படும் உள்நாக்குப் பாதிப்பை சரியாக்கும்.
அக்கரகார வேரை வெறுமனே நாவில் இட்டு சுவைத்தால் உதடு மற்றும் நாக்கில் விறுவிறுப்பும் சிறு எரிச்சலும் உண்டாகும் தன்மை படைத்தது. சிறுஅக்கரகாரத்தை சற்றே அரைத்து ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு நன்கு கொதித்ததும் இதை போட்டு கால் லிட்டர் அளவில் தண்ணீர் வற்றியவுடன் எடுத்து ஆற வைத்து தினமும் அதில் சிறிது அளவு வாயிலிட்டு அதக்கிக் கொண்டு சற்று நேரம் வைத்திருந்து கொப்பளித்து உமிழவும். இப்படி தினமும் இரண்டு மூன்று முறை வீதம் மூன்று நாட்கள் கொப்பளித்து வந்தால் வாயில் உண்டான புண்கள், தொண்டை புண், பல் வலி, பல்லாட்டம் போன்ற பாதிப்புகள் விலகும். பற்களில் ஏற்படும் சொத்தை புழுத்தொல்லை பாதிப்பும் நீங்கிவிடும்.
அக்கரகார சூரணத்துடன் இந்துப்பு கலந்து எலுமிச்சை சாறு விட்டு நன்கு மைய அரைத்து அதை உள்நாக்கில் தடவி வந்தால் உள்நாக்கில் ஏற்பட்ட தொற்று பாதிப்புகளால் ஏற்பட்ட புண்கள், தொண்டைக் கட்டி பேச முடியாமல், தண்ணீர் பருக முடியாமல், உணவு உண்ண முடியாமல் இருப்பவர்கள் இதை செய்தால் சரியாகும்.
அக்கரகார சூரணத்தை மயங்கி விழுந்து பல் கட்டி கொண்டவர்களுக்கு மூக்கில் செலுத்தினால் உடனே மயக்க பாதிப்பு விலகி, சுயநினைவு அடைவார்கள். காக்கா வலிப்பு பிரச்னையும் விலகும். அக்கரகார பட்டையை சூரணம் செய்து அதில் சிறிது எடுத்து அரை லிட்டர் நீரில் கலந்து சுண்டக்காய்ச்சி மூன்றில் ஒரு பங்கு அளவில் வந்ததும் இறக்கி ஆற வைத்து பருகினால் அதிக தாகம், நாக்கு வறண்டு போகுதல் தலைவலி போன்ற பாதிப்புகள் சரியாகும். இந்த சூரணத்தை தேனில் கலந்தும் பனங்கற்கண்டு சேர்த்தும் தினம் இரு வேளை சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
உடலின் இயக்கத்துக்கும் மனதின் ஆற்றலுக்கும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் மூளை சரியாக இயங்காவிட்டால் சரியாக சிந்திக்க முடியாது. ஞாபக மறதி அதிகரிக்கும். உடலில் சோர்வு உண்டாகும். இது போன்ற நிலைகளில் மூளையின் ஆற்றல் சீராக அக்கரகார, வல்லாரை மருந்து உறுதுணை புரியும்.