
பழங்குடியினர் மற்றும் கிராமப்புற மக்கள் மட்டுமே தவளைகளைச் சாப்பிடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. முதலாம் உலக நாடுகளின் மக்களிடையே இது ஒரு சுவையான உணவாகும். பிரெஞ்சு, சீனா, வியட்நாம் சமையலில் விரும்பப்படும் இறைச்சியாக தவளை இருக்கிறது. தவளை இறைச்சியினை விரும்பி உண்ணும் நாடுகளில், தவளைகளின் உற்பத்தியும், எண்ணிக்கையும் மிகவும் குறைந்து விட்டதால், மூன்றாம் உலக நாடுகளான லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இறைச்சிக்காக தவளைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
தற்போது, இந்தோனேசியா தவளைக் கால்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 142 மில்லியன் தவளைகளை இந்நாடு ஏற்றுமதி செய்கிறது. தாய்லாந்து, சீனா, மலேசியா, பிரேசில் மற்றும் பல நாடுகளும் தவளைக் கால்களை ஏற்றுமதி செய்கின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தவளைக் கால்கள் பிரபலமாக உள்ளன, ஆனால் பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் அவை அதிகத் தேவையில் உள்ளன.
தவளைகளின் இறைச்சி தேவையால் பல தவளை இனங்கள் தற்போது காணாமல் போய்விட்டது. மேலும், தவளைகளில் பல இனங்கள் அரிதாகிவிட்டன. இருப்பினும், தவளை இறைச்சித் தேவையை முழுமையாக்க ஒரு சில நாடுகள் தவளைப் பண்ணைகளை அமைத்துள்ளன. இருப்பினும், பெரும்பாலான தவளைகள் காடுகளிலிருந்து பிடித்துக் கொண்டு வரப்படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியா தவளை கால்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இருந்தது. ஆனால், இந்தியா 1987ம் ஆண்டில் இறைச்சிக்கான தவளை வணிகத்தைத் தடை செய்தது. 1990ம் ஆண்டில் வங்கதேசமும் இதைத் தடை செய்தது. இந்தத் தவளை இறைச்சி வணிகம் அனைத்துத் தவளை இனங்களையும் பாதிக்காது. இது பெரிய இனங்களை மட்டுமே குறி வைக்கிறது. இந்தியாவில், இலக்கு வைக்கப்பட்ட இனங்களாக, இந்தியக் குளத் தவளை (Indian Pond Frog), இந்திய மிடாத் தவளை (Indian Bull Frog), ஜெர்டன்ஸ் மிடாத் தவளை Jerdon’s Bull Frog) போன்றவை இருக்கின்றன.
பொதுவாக, தவளைகள் ஒரு இயற்கை பூச்சிக்கொல்லியாகும். அவை ஏராளமான பூச்சிகள், மெல்லுடலிகள் மற்றும் நமது பயிர் உற்பத்தியைச் சேதப்படுத்தும் உயிர்களைச் சாப்பிடுகின்றன. மேலும், தவளை பெரியதாக இருந்தால், அது அதிகப் பூச்சிகளை உண்ணும். இது மட்டுமல்ல, தவளைகள் தண்ணீரைச் சுத்தம் செய்ய நமக்கு உதவுகின்றன.
இந்தியாவின் சுற்றுச்சூழலிலிருந்து தவளைகளைப் பிடித்து ஏற்றுமதி செய்தபோது, பூச்சிகளின் எண்ணிக்கை கணிசமாகப் பெருகி, பயிர் சேதம் அதிகரித்து விட்டன. இந்தியாவில் இந்தப் பிரச்னை மிகவும் கடுமையானதாக மாறியதால், பயிர் சேதத்தால் ஏற்படும் வருவாய் இழப்பானது, தவளைக்கால் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயை விட மிக அதிகமாக இருந்தது. வங்கதேசத்திலும் இந்நிலையே ஏற்பட்டது. வேளாண்மையை முக்கியமாகக் கொண்ட பிற நாடுகளிலும் இதேதான் நடக்கும்.
தவளை வணிகம் தடை செய்யப்பட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் தவளைகளின் எண்ணிக்கை மீண்டும் உயிர் பெற்றுள்ளது. உலகில் தவளை இறைச்சிக்கான விருப்பங்கள் அதிகரிக்கும் நிலையில், இந்தியாவில் மட்டுமின்றி, பல நாடுகளில் தவளைகள் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு வணிகப்படுத்தப்படலாம். தவளைகள் நமது சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு முக்கியமான உயிரினமாகும். அவற்றை வணிக நோக்கத்துடன் பார்க்கத் தொடங்கினால், வேளாண்மைத் தொழில் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.