
உலகின் எல்லா இடங்களிலும் எலிகள் வாழ்கின்றன. சில எலி இனங்கள் தரையிலும், சில பூமிக்கடியில் வளைகளிலும் மற்றும் சில மரங்களிலும் கூட வாழ்கின்றன. உலக அளவில் 60க்கும் மேற்பட்ட எலிகள் இனங்கள் உள்ளன. இவற்றில் பிரதானமாக பழுப்பு எலி மற்றும் கருப்பு எலி ஆகியவை முக்கிய இனங்களாகும்.
எலிகளின் கால்களில் ஐந்து விரல்கள் உண்டு. உடலில் முடி நிறைந்திருக்கும், மீசை உண்டு, கடினமான வால் உள்ளது. சுமாரான பார்வைத் திறன் உண்டு. மரம், பிளாஸ்டிக், அலுமினியம், காரீயம், தாமிரம் போன்றவற்றைக் கடிக்கும் அளவுக்குக் கூர்மையான பற்களும் இவற்றுக்கு உண்டு. தான் வாழும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு எலிகளின் நிறமும் எடையும் வேறுபடும். எலிகள் தினந்தோறும் அவற்றின் எடையில் ஐந்து முதல் இருபது சதவீதம் வரை சாப்பிடுகின்றன.
பார்வைக்கு எளிமையானவை போல் தோன்றினாலும், எலிகள் உண்மையில் மிகவும் நுட்பமான மற்றும் பல அடுக்கு தகவல் தொடர்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன. ஒலி, வாசனை, உடல் அசைவுகள், கூட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி, இந்தச் சிறிய உயிரினங்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன.
கடந்த 1998ம் ஆண்டில் முடிவடைந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு கம்போடியாவில் மில்லியன் கணக்கான வெடிக்காத வெடிமருந்துகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அன்றாட வாழ்க்கையில் மக்கள் அடுத்த நொடி நிச்சயமற்றது என்ற அச்சத்துடன் வாழ வேண்டியிருந்தது. அதேநேரம், கம்போடியாவில் இன்னும் நான்கு முதல் ஆறு மில்லியன் கண்ணிவெடிகள் மற்றும் வெடித்த பிற வெடிமருந்துகள் புதைக்கப்பட்டிருப்பதாக நிலக்கண்ணிவெடி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அபாயகரமான கண்ணிவெடிகளை அகற்ற எலிகளைப் பயன்படுத்த முடிவு செய்தது கம்போடியா அரசு. அதற்காக தான்சானியாவை தளமாகக் கொண்ட அப்போபோ நிறுவனத்தை அனுகியது. அவர்களிடம் தற்போது கண்ணிவெடிகளை மோப்பம் கண்டு அழிக்க 104 பயிற்சி பெற்ற எலிகள் உள்ளன. ஒரு எலிக்கு வெடியை கண்டுபிடிக்க ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படுகிறது.
கம்போடியாவில் (Cambodia) கண்ணிவெடிகளை இனங்காண்பதற்காக ரொனின் (Ronin) என அழைக்கப்படும் ஆப்பிரிக்க இன எலி பயன்படுத்தப்பட்டது. கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட எலி ஒன்று 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகளை மோப்பம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அது புதிய உலக சாதனை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்பிரிக்க ராட்சத எலியான ரொனின் 2021ம் ஆண்டு முதல் இதுவரை 109 கண்ணிவெடிகள் மற்றும் 15 வெடிக்காத வெடிமருந்துகளைக் கண்டுபிடித்துள்ளது. மேலும், ரோனினின் அற்புதமான பணி, 71 கண்ணிவெடிகளை மோப்பம் பிடித்து 2020ம் ஆண்டில் தங்கப் பதக்கம் பெற்ற ‘மகாவா’ என்ற எலியின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
போர்க்களங்களில் கைவிடப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் பிற ஆயுதங்களில் காணப்படும் ரசாயனங்களை முகர்ந்து பார்க்க எலிகளுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவற்றின் சிறிய அளவு காரணமாக, கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்யும் அளவுக்கு எலிகள் கனமாக இல்லை என்பது இதற்குக் காரணம்.
ஒரு டென்னிஸ் மைதானத்தின் அளவை எலிகள் சுமார் 30 நிமிடங்களில் சரிபார்க்க முடியும் என்று தொண்டு நிறுவனம் கூறுகிறது. அதேநேரத்தில் உலோகக் கண்டுபிடிப்பான் கொண்ட ஒரு மனிதன் அதே நிலத்தை சுத்தம் செய்ய நான்கு நாட்கள் ஆகலாம் என்கிறார்கள்.