சிரிப்புக்கு பின்னால் இருந்த பெரும் சோகம்: விவேக் நட்ட ஒரு கோடி மரங்களின் நிஜ பின்னணி!

Actor Vivek tree plantation
Actor Vivek tree plantation
Updated on

"ஒரு கலைஞன் என்பவன் வெறும் கைதட்டலுக்காக மட்டும் வாழ்பவனா? அல்லது அவன் மறைந்த பிறகும் ஒரு தலைமுறைக்குத் தேவையான ஆக்சிஜனைத் தருபவனா?"

இந்தத் கேள்விக்குத் தமிழ் சினிமா தந்த சிறந்த விடை: சின்னக் கலைவாணர் நடிகர் விவேக்.

தென்னிந்தியாவையே வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் இந்த வெயிலில், சாலையோரம் ஒதுங்க ஒரு மர நிழல் கிடைக்காதா என ஏங்கும் ஒவ்வொரு வழிப்போக்கனின் மனசாட்சியும் இன்று விவேக் என்கிற மனிதனின் செயலை நினைவு கூரும். நாம் அவரை இதுபோன்ற ஒரு வெயில் காலத்தில்தான் இழந்தோம். அவரது நினைவு நாள் கடந்து போயிருக்கலாம். ஆனால், அவரது நினைவுகள் இந்தத் தகிக்கும் வெயிலில் அவர் நட்டுச் சென்ற பல லட்சக்கணக்கான மரக்கன்றுகள் மூலமாக, ஒரு பசுமையான எதிர்காலத்திற்கான நம்பிக்கையை இன்றும் நமக்குள் விதைத்துக் கொண்டிருக்கின்றன.

மனதின் குரல்

விவேக் நடித்த 'விசில்' படத்தில் ஒரு சுவாரஸ்யமான காட்சி வரும். மற்றவர்களின் மனக்குரலை (Mind Voice) கேட்கும் அபூர்வ சக்தி அவருக்குக் கிடைக்கும். அப்போது எதிரே வரும் ஒரு பெண்மணி, "என்ன வெயில் இது..." என்று தன் மனதிற்குள் புலம்புவார். அந்த நகைச்சுவை காட்சி இன்று நிஜமாகவே நமக்குப் பொருந்துகிறது.

ஒருவேளை இன்று நமக்கு மக்களின் 'மனதின் குரலை' கேட்கும் சக்தி கிடைத்தால், "தாகம் எடுக்குதே!", "ஒரு நிழல் கூட இல்லையே!" என்ற கோடிக்கணக்கான மக்களின் ஆதங்கங்கள்தான் நம் காதுகளைத் துளைக்கும். மக்களின் அந்த நிசப்தமான வேதனைகளை அன்றே உணர்ந்தவர் விவேக். அதனால்தான், வெறும் கைதட்டலுக்காக மட்டும் வாழாமல், அடுத்த தலைமுறைக்குத் தேவையான ஆக்சிஜனைத் தரும் 'சிந்தனை மரமாக' அவர் மாறினார்.

விவேக்கின் நகைச்சுவை என்பது வெறும் கேலி அல்ல; அது ஒரு சமூக விழிப்புணர்வு. 'சிங்கம்' படத்தில் ஒரு காட்சியில் ரவுடிகளைப் பார்த்து அவர் கேட்பார்: "கவர்மென்ட் மரம் வளர்ப்போம், மரம் வளர்ப்போம்னு சொல்லுது... அதை விட்டுட்டு இந்தத் தேவையற்ற 'புதரை' வளர்க்குறீங்களேடா!" இந்த வசனம் நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டது என்றாலும், அதற்குப் பின்னால் "மரம் வளர்ப்பது அரசின் வேலை மட்டுமல்ல, அது ஒவ்வொரு குடிமகனின் கடமை" என்ற ஆழமான செய்தி ஒளிந்திருக்கிறது. சிரிப்புச் செடியை நட்டுக்கொண்டே, நம் மனங்களில் ஒரு பசுமை வனத்தை வளர்த்ததுதான் விவேக் பாணி!

இதையும் படியுங்கள்:
நெத்திப்பொட்டை வைத்து சில பயனுள்ள டிப்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க!
Actor Vivek tree plantation

ஒரு கோடி கனவு

அப்துல் கலாம் ஐயாவின் மீது அவர் வைத்திருந்த பற்று, அவரை ஒரு சமூகத் தூதுவனாக மாற்றியது. இந்திய சினிமா வரலாற்றில் ஒரு நடிகர், தன் ரசிகர்களை மரம் நடும் ஒரு மக்கள் இயக்கத்தில் இணைத்தது விவேக் அவர்களால் சாத்தியமானது.

அவர் நட்டுச் சென்ற அந்த மரக்கன்றுகள் அனைத்தும் இன்று மரமாகி நிழல் தருகின்றனவா என்ற உத்தரவாதம் நம்மிடம் இல்லை என்றாலும், ஒரு பசுமையான மாற்றத்திற்கான விதையை அவர் ஒவ்வொருவர் மனதிலும் நட்டுச் சென்றிருக்கிறார். இன்று 40 டிகிரி வெயிலின் உச்சத்தில் தவிக்கும்போதுதான், அவர் காட்டிய அந்தப் பசுமைப் பாதையின் அவசியத்தை உலகம் உணர்கிறது.

மௌனமான நந்தவனம்

விவேக்கின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும் சோகங்களைச் சுமந்தது. தன் ஒரே மகனை இழந்த போதும், அந்தத் துயரத்தை வெளியே காட்டாமல் உலகுக்காகச் சிரிப்பை விநியோகித்த மகா கலைஞன் அவர். தன் ஆழ்ந்த சோகத்தைத் தணிக்கத்தான் அத்தனை மரக்கன்றுகளை நட்டாரோ என்னவோ? ஒவ்வொரு மரக்கன்றும் அவருக்கு ஒரு குழந்தையைப் போலத்தான் இருந்தது.

நிஜமான 'பேர் சொல்லும் பிள்ளை'

உன்னால் முடியும் தம்பி என்றொரு திரைப்படம் வந்தது. அதில் ஒரு முதியவர் மரம் நட்டுக் கொண்டிருப்பார். "உனக்குத்தான் வயதாகிவிட்டதே, இதன் பலனை நீ அனுபவிக்கப் போவதில்லையே, அப்புறம் ஏன் இதைச் செய்கிறாய்?" என்று கேட்கும்போது, அவர் ஒரு அற்புதமான பதிலைச் சொல்வார்:

"நான் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்யவில்லை; எனக்குப் பின்னால் வரும் என் சந்ததி இந்த நிழலில் இளைப்பாற வேண்டும் என்பதற்காகச் செய்கிறேன்!"

இதையும் படியுங்கள்:
1 ஆம் எண் புயல் முதல் 11 ஆம் எண் புயல் வரை... எச்சரிக்கை விடும் எண்கள்! தெரிஞ்சுக்கோங்க...
Actor Vivek tree plantation

இந்தத் தத்துவத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் விவேக். அவர் நட்டுச் சென்ற ஒவ்வொரு மரக்கன்றும் அவர் 'பேர் சொல்லும் பிள்ளையாக' நிற்கின்றன. அந்த ஒரு கோடி என்ற இலக்கை விவேக் என்ற ஒற்றை மனிதனின் சுமையாக விட்டுவிடாமல், நம் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு மரக்கன்றை நட்டு, அதை ஒரு குழந்தையைப் போலப் பராமரித்தாலே போதும்.

"நாம் நடும் ஒரு மரம், அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் ஆகச்சிறந்த சொத்து."

இனிமேல் நீங்கள் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கும்போது கவனித்துப் பாருங்கள்... அந்த இலைகளின் அசைவில் விவேக்கின் அந்தத் சிரிப்பு நிச்சயம் ஒலிக்கும்!

இந்தக் கோடை வெயிலின் தாகத்தைத் தணிக்கவும், நம் எதிர்காலத் சந்ததியினருக்குக் குளிர்ந்த காற்றைப் பரிசளிக்கவும் ஆளுக்கொரு மரம் நடுவோம்.

logo
Kalki Online
kalkionline.com