
ஆப்பிரிக்காவில் தற்போது வெப்ப அலைகள் மிகவும் தீவிரமாக நீடிக்கிறது. பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக இந்த ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. வெப்ப அலைகள் அதிக வெப்பமாகவும், அது வீசும் காலம் நீண்ட நேரமாகவும் மாறி வருகிறது. இந்த ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மனிதர்களின் நடவடிக்கைகளே முக்கியக் காரணம் என்று எர்த் கம்யூனிகேஷன்ஸ் & என்விரான்மென்ட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் பசுமை மிகுந்த காடுகளை அழித்தது, விரைவாக நகரமயமாக்கலை ஏற்படுத்தியது, விவசாயத் தேவைகளுக்காக அடர்ந்த காடுகளை அழித்தது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை ஏற்படுத்தியது போன்ற மனிதர்களின் செயல்பாட்டு காரணங்களால் பசுமை இல்ல வாயு அதிகரித்து சுற்றுச்சூழலை மோசமாக மாற்றியுள்ளது.
இந்த சுற்றுச்சூழல் மாற்றங்கள், காலநிலைகளில் மாற்றம் செய்து கடுமையான வெப்ப அலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த காலநிலை மாற்றம் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை, விவசாயம் அழிதல், வெப்பம் தொடர்பான நோய்கள் அதிகரித்தல், அதிகரிக்கும் எரிசக்தி தேவைகள், அதிகரிக்கும் மின்சாரத் தேவைகள் ஆகிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளன.
1950ம் ஆண்டிலிருந்து 1979ம் ஆண்டு வரையில் வெப்பநிலை ஒரே அளவில் இருந்துள்ளது. பின்னர் 1984ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பசுமை இல்ல வாயு அதிகரிப்பால் வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்ததால் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலைகள் நீண்ட காலம் நீடிக்கிறது. இந்த வெப்ப அலைகள் தீவிரமாக நீடித்து தொடர்கதையானது.
சராசரியாக, ஒவ்வொரு பத்தாண்டு காலக்கட்டத்திலும் வெப்ப அலையின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து விட்டது. ஆய்வின்படி, பசுமை இல்ல வாயுக்கள் வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. இது வெப்ப அலை அதிகரிப்பில் சுமார் 70 சதவிகித காரணமாக உள்ளது. அதேவேளை இயற்கையினால் ஏற்பட்ட காலநிலை மாற்றம் 30 சதவிகித அளவில்தான் உள்ளது.
2014ம் ஆண்டிற்குப் பிறகு 2024ம் ஆண்டு வரை உள்ள தரவுகளை ஆய்வு செய்தபோது, சமீப காலத்தில் வெப்ப அலைகள் தொடர்ந்து தீவிரமாகி வருவதைக் கண்டறிந்துள்ளனர். 2024ம் ஆண்டு ஆப்பிரிக்காவின் காலநிலை அறிக்கையின்படி வெள்ளம், வறட்சி, வெப்ப அலைகளுடன் அதிக வெப்பநிலை கொண்ட இரண்டாவது ஆண்டாக இருந்தது. பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்கா கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டது. மேலும், அதன் சில பகுதிகளில் வெப்பநிலை 40 °C ஐ தாண்டியது.
ஆப்பிரிக்காவில் வெப்ப அலைகள் இதற்கு முன்னரும் ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும் தற்போதைய ஆராய்ச்சி தீர்க்கமான முடிவுகளை வழங்குகிறது. முந்தைய ஆராய்ச்சி பெரும்பாலும் தெற்கு அல்லது மேற்கு ஆப்பிரிக்கா போன்ற துணை சஹாரா பகுதிகளில் கவனம் செலுத்தியது.
வெப்ப அலைகளை அளவிடுவதற்கு வடக்கில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையும், தெற்கில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த அளவுகளில் துல்லியத் தன்மையை எதிர்பார்க்க இயலாது. ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு பகுதிகளில் மற்ற பகுதிகளில் தனித்துவமான காலநிலை நிலவுவதால் ஆய்வை முறைப்படி நடத்த பல மாதங்கள் தேவைப்படும்.
சமீபத்திய ஆய்வு பல்வேறு காலக்கட்டத்திலும், பிராந்தியங்களில் காலநிலையை மனதில் வைத்து, அதற்கேற்ற மாதங்களில் ஆய்வு செய்யப்பட்டது. மாறிவரும் காலநிலையை தடுக்கும் வகையில் மனிதர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.