
காட்டிலும் சரி, வீட்டுத் தோட்டங்களிலும் சரி, கிளிகளின் கிக்கீ சத்தத்தைக் கேட்டு ஆனந்திக்கிறோம்.
ஆனால் அவை பற்றிய அதிசய உண்மைகளை நாம் அறிந்திருக்கிறோமா?
சந்தேகம் தான்!
எடுத்துக்காட்டிற்கு ஒன்று. கிளியின் அதிக பட்ச ஆயுள் எவ்வளவு தெரியுமா?
நூறு ஆண்டுகள்! எழுபது, எண்பது வருடங்கள் என்பதெல்லம் பெரிய அளவில் உள்ள கிளிகளுக்கான சாதாரண ஆயுள் காலம்!
ஆயிரம் மிருகக்காட்சிசாலைகளில் 1,30,000 கிளிகளை ஆரய்ந்ததில் 217 கிளி வகைகளின் ஆயுட்காலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஃபிக் பேரட் இரண்டு வருடத்திலிருந்து 30 வருடங்கள் வரை வாழ்கின்றன. மற்ற பல வகைகள் மூளை பெரிதாக இருக்க இருக்க அதிக ஆண்டுகள் வாழ்கின்றன!!
சரி, அவை நாம் பேசுவதைப் புரிந்து கொள்கிறதா?
புரிந்து கொள்ள முடியாது என்பதே பெரும்பாலோருடைய பதில்.
ஆனால் அவை நாம் பேசுவதைப் புரிந்து கொள்கின்றன!
அவை நம்மிடம் ‘சாரி’ என்று கூடச் சொல்கின்றன.
கிளிகள் தமக்குள் ஒன்றுடன் ஒன்று சைகை தொடர்பு மொழியில் கூட பேசுகின்றன.
மனிதர்களுடன் வாழும் போது அவை தமது சூப்பர் மூளை திறனை உபயோகித்து மனிதன் பேசும் மொழியைப் புரிந்து கொள்கின்றன.
போஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுத் துறை பெண்மணியான ஐரீன் பெப்பர்பெர்க் (IRENE PEPPERBERG) லைவ் சயின்ஸ் பத்திரிகைக்குப் பல தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
பெப்பர்பெர்க் வளர்க்கும் கிளிக்கு அலெக்ஸ் என்று பெயர். அலெக்ஸுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் நன்கு தெரியும். அந்த வார்த்தைகள் சுட்டிக் காட்டும் பொருள்கள், செயல்கள், வண்ணங்கள் ஆகியவற்றை அது சரியாகப் புரிந்து கொள்கிறது. ஒரு பொருளைத் தந்தால் அதன் வடிவம், வண்ணம், அந்தப் பொருள் எதனால் உருவாக்கப்பட்டது போன்ற அனைத்து விஷயங்களும் அதற்கு அத்துபடி. பெரியது, சிறியது, அதே மாதிரி உள்ளது, வேறு மாதிரியாக உள்ளது இவை அனைத்தையும் அது உணர்கிறது.
ப்யூஜெட் ஸவுண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணைப்பேராசிரியரான எரின் கால்பெர்ட் ஒய்ட் (Erin Colbert-White, Associate Professor, University of Puget Sound) “கிளிகள் நிச்சயமாக அனைத்து பொருள்களைச் சுட்டிக் காட்டும் வார்த்தைகளை உணர்கின்றன” என்கிறார்.
“தாங்கள் கற்ற வார்த்தைகளை திறமையுடன் சமயத்திற்கேற்றபடி அவை பயன்படுத்துவது பிரமிப்பை ஊட்டும்” என்று கூறும் அவர், "நீங்கள் அறைக்குள் நுழைந்து அதைப் பார்த்து ஹலோ என்றால் பதிலுக்கு அதுவும் ஹலோ என்று சொல்லும்” என்கிறார்!
பெப்பர்பெர்க்கின் ஒரு அனுபவம் இது: ஒரு சமயம் குறும்புக்கார ஆப்பிரிக்கப் பறவையான அலெக்ஸின் மூக்கில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு காபி கோப்பையை அவர் பிடுங்கினார். அவருக்குக் கோபம் வந்தது. ஏன் இதை எடுத்தாய் என்று கோபத்துடன அவர் கூறினார். பின்னர் அலெக்ஸ் வருத்தப்படக் கூடும் என்று எண்ணிய அவர் ஐ ஆம் சாரி என்றார். பதிலுக்கு அலெக்ஸும் ஐ ஆம் சாரி என்றது.
அன்றிலிருந்து எப்போதெல்லாம் பெப்பர்பெர்க் அலெக்ஸின் குறும்புத்தனங்களைச் சுட்டிக் காட்டுகிறாரோ அப்போதெல்லாம் அது ஐ ஆம் சாரி என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டது.
அன்போடு அதனிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல ஆரம்பித்தபோது அதுவும் பதிலுக்கு ஐ லவ் யூ சொல்ல ஆரம்பித்தது.
மனிதரின் மொழியை விலங்குகளும் பறவைகளும் புரிந்து கொள்கின்றனவா என்ற இந்த ஆராய்ச்சி ஐம்பது வருட காலமாகத் தொடர்கிறது. ஆனால் இன்னும் முழுமையாக வெற்றி கண்டபாடில்லை.
ஆனால் பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்று இனி பாட வேண்டிய அவசியம் இல்லை. (எம்ஜிஆர் சரோஜாதேவி பணத்தோட்டம் கண்ணதாசன் பாடல்)
பேசுவது கிளியே தான்!