குட்டி போடாது.. முட்டையிட்டுப் பால் கொடுக்கும்! அறிவியலையே வியக்க வைக்கும் அபூர்வ உயிர் எது?

amazing creature Echidna
amazing creature Echidna
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on: 

இயற்கையின் படைப்பில் வியக்கத்தக்க பல உயிரினங்களில் எகிட்னாவும் (Echidna) ஒன்று. இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், பறவைகளைப்போல முட்டையிடும் பழக்கம் கொண்டது. ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியா காடுகளில் காணப்படும் இவை, தற்காப்பிற்காகத் தன் உடல் முழுவதும் முட்களைக் கொண்டுள்ளன. தோற்றத்தில் முள்ளெலியைப் போலவும், செயல்பாட்டில் எறும்புண்ணியைப் போலவும் இருக்கும் . சிலர் இதன் தோற்றத்தை வைத்து “மூங்கில் யானை” என்று வேடிக்கையாக அழைப்பதுண்டு

முட்டையிடும் பாலூட்டி: உலகில் முட்டையிடும் பாலூட்டிகள் இரண்டு மட்டுமே. ஒன்று பிளாட்டிபஸ் (Platypus), மற்றொன்று இந்த எகிட்னா. இவை குட்டி போடாமல், முட்டையிட்டு, குஞ்சு பொரித்த பிறகு அதற்குப் பால் கொடுக்கின்றன. இதன் உடல் முழுவதும் முள்ளெலியைப் போன்ற கூர்மையான முட்கள் இருக்கும். எதிரிகளிடமிருந்து தப்பிக்க இது ஒரு பந்து போலச் சுருட்டிக்கொள்ளும். இதன் மூக்கு நீண்ட குழாய்போல இருக்கும். இதற்குப் பற்கள் கிடையாது, ஆனால் நீண்ட பிசுபிசுப்பான நாக்கு உண்டு. கால்கள் நிலத்தைத் தோண்டுவதற்கு ஏற்ற வலுவான நகங்களைக் கொண்டது.

உணவு: எறும்புகள் மற்றும் கறையான்களை தனது நீண்ட நாக்கை நிலத்தடிப் புற்றுக்குள் விட்டு, பிடித்து அப்படியே விழுங்கிவிடும். இவை காடுகள் முதல் புல்வெளிகள் வரை பல்வேறு சூழல்களில் வாழும் திறன்கொண்டவை. 15 முதல் 40 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. எகிட்னாவின் குட்டிகள் ‘பக்ல்’ (Puggle) என்று அழைக்கப்படுகின்றன. முட்டை பொரிந்தவுடன் குட்டிகள் தாயின் வயிற்றுப் பையிலேயே வளரும். இவற்றின் மூளை உடல் எடையோடு ஒப்பிடுகையில் பெரியது மற்றும் மிகவும் சுறுசுறுப்பானது.

இதையும் படியுங்கள்:
இரைச்சலில்லா உலகம் கேட்போம்!
amazing creature Echidna

இவற்றில் இரண்டு வகை உண்டு:

1.குட்டை மூக்கு எகிட்னா: மற்ற வகைகளைவிட இவை அளவில் சிறியவை, ஆனால் கடுமையான தட்பவெப்ப நிலையைத் தாங்கி வாழும் திறன் கொண்டவை.

2.நீண்ட மூக்கு எகிட்னாக்கள்: இவற்றில் மூன்று வகைகள் உள்ளன. சர் டேவிட் நீண்ட மூக்கு எகிட்னா, கிழக்கு நீண்ட மூக்கு எகிட்னா, மேற்கு நீண்ட மூக்கு எகிட்னா.

எகிட்னாக்கள் தங்களை வேட்டையாட வரும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள வியக்கத்தக்க சில நுட்பங்களைக் கொண்டுள்ளன.

முட்கள் நிறைந்த கவசம்: எகிட்னாவின் உடல் முழுவதும் கெரட்டின் என்ற புரதத்தால் ஆன கூர்மையான முட்கள் மூடியிருக்கும். எதிரி தாக்க வரும்போது, எகிட்னா உடனடியாக ஒரு பந்து போலச் சுருட்டிக்கொள்ளும். இதனால் அதன் மென்மையான வயிறு மற்றும் முகம் மறைக்கப்பட்டு, எதிரிக்குக் குத்தும் முட்கள் மட்டுமே தெரியும்.

அதிவேகமாக நிலத்தில் புதைந்து கொள்ளுதல்: ஆபத்தை உணர்ந்தால், இவை நின்ற இடத்திலேயே மிக வேகமாக நிலத்தைத் தோண்டித் தங்களை உள்ளே இறக்கிக் கொள்ளும். நிலத்திற்கு மேலே அதன் முட்கள் மட்டுமே தெரியும் படி தட்டையாக அமர்ந்துகொள்ளும்.

மறைந்து வாழும் குணம்: இவை பகல் நேரத்தைவிட இரவு நேரங்களில் உலாவவே விரும்புகின்றன. பாறைகளுக்கு இடையே உள்ள இடுக்குகள், மரப்பொந்துகள் அல்லது அடர்ந்த புதர்களில் இவை ஒளிந்து கொள்ளும். இவற்றின் உடல் நிறம் காய்ந்த இலைகள் மற்றும் மண்ணோடு ஒன்றிப் போவதால், எதிரிகளின் கண்ணில் எளிதில் படாது.

கூர்மையான உணர்திறன்: எகிட்னாவின் மூக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான மின்-உணர்விகள் (Electroreceptors) உள்ளன. இதன் மூலம் எதிரி விலங்குகள் அசைவதால் ஏற்படும் மிகச்சிறிய மின் சமிக்ஞைகளைக்கூட இவை முன்கூட்டியே உணர்ந்து தப்பித்துச் சென்றுவிடும்.

இதையும் படியுங்கள்:
சைஸை பார்த்து எடை போடாதீங்க! சிங்கத்தையே முறைக்கும் இந்த 'குள்ள' நாயின் பின்னணி என்ன?
amazing creature Echidna

எகிட்னா இயற்கையின் விசித்திரமான மற்றும் அபூர்வமான படைப்பாகும். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு முட்டையிடுவது என்பது உயிரினப் பரிணாம வளர்ச்சியின் ஒரு பெரும் அதிசயம். தற்காப்புத் திறனும், அமைதியான வாழ்வியலும் கொண்ட இந்த உயிரினங்கள், இன்று மனிதச் செயல்பாடுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இத்தகைய அரிய வகை உயிரினங்களைப் போற்றிப் பாதுகாப்பது, மிகவும் அவசியமாகும்.

logo
Kalki Online
kalkionline.com