
வெள்ளை மணலில் ஒரு பாலைவனமா? அது என்ன அதிசயம்? அது எங்கே உள்ளது என்று கேட்போருக்கு நியூமெக்ஸிகோவைத் தான் சுட்டிக் காட்ட வேண்டும்.
உலகின் அதிசய வெள்ளை மணல் பாலைவனம் நியூ மெக்ஸிகோவின் தென்மேற்கே துலாரோஸா படுகையில் 275 சதுர மைல் பரப்பளவில் காட்சி அளிக்கிறது. சான் ஆண்ட்ரஸ் மலைத்தொடருக்கும் சாக்ரமாண்டோ மலைக்கும் இடையே உள்ள இந்த மணல் பகுதி பத்து கோடி வருடங்களுக்கு முன்னால் இயற்கையால் உருவாக்கப்பட்ட அதிசய இடங்களில் ஒன்றாகும்.
உலகின் மிகப் பெரிய வெள்ளை மணல் படுகையான இதில் தான் ஜிப்ஸம் எனப்படும் கால்சியம் சல்பேட் அதிகம் இருக்கிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக இதன் பயனை அறிந்த மனித குலம் இதைப் பல்வேறு விதங்களில் பயன்படுத்தி வருகிறது.
எகிப்திய பிரமிடில் உள்ள நிலவறைகளில் வெளிப்பூச்சாக இதை எகிப்தியர் பயன்படுத்தினர். பழைய காலத்தில் கிரேக்கர்கள் செலினைட் என்று அறியப்படும் ஜிப்ஸம் துகள்களினால் பளபளக்கும் ஜன்னல்களை அமைத்துத் தங்கள் வீடுகளில் பொருத்தினர்.
நமது காலத்திலோ இந்த ஜிப்ஸத்தை பிளாஸ்டர், வால்போர்ட், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர்.
இந்த மணல் பகுதியின் அருமையை அறிந்த அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் இதை தேசியச் சின்னமாக அறிவித்து இதைப் பராமரிக்கும் பணியையும் ஃபெடரல் அரசே செய்யும் என்று அறிவித்தார்.
சான் ஆண்ட்ரஸ் மலைத்தொடரும் சாக்ரமாண்டோ மலையும் முன்னொரு காலத்தில் பூமி பொங்கி எழ அதிலிருந்து வெளியான மலைகளாகும்.
காலப்போக்கில் ஏற்பட்ட தொடர் மழைகளால் மலைத்தொடரில் இருந்த ஜிப்ஸம் கரைந்து நீரோடு கலந்து ஒரு ஏரியாக உருவானது. அந்த ஏரிக்குப் பெயர் ல்யூசிரோ (Lucero). சான் ஆண்ட்ரஸ் மலையின் அடிவாரத்தில் உள்ள இந்த ஏரி செலினைட் துகள்கள் மேற்பரப்பில் இருக்க எப்போதும் பளபளப்பாகக் காட்சி தருகிறது.
இந்த துகள்களைக் கைகளால் தேய்த்தால் கூடப் போதும். அது அப்படியே உதிர்ந்து விடும். இப்படிப்பட்ட துகள்கள் 50 அடி உயரம் வரை உருவாகி வெண்மணல் குன்றுகளாகக் காட்சி அளிக்கின்றன. ஆனால், காற்று இந்த குன்றுகளை அப்படியே இருக்க விடுவதில்லை.
இவற்றை நகர்த்திக் கொண்டே இருக்கின்றன. இந்தக் குன்றிலும் கூடத் தாவரங்கள் வளர்கின்றன! சுமார் நூறு வகையான தாவரங்கள் இங்கு காணக் கிடைக்கின்றன. ஸ்பெயின் தேசத்தவரால் யுக்கா எலாடா என்று பெயரிடப்பட்ட ஒரு தாவரம் மிகவும் வலிமையானது. இதன் இலைகளை எடுத்து பூர்வ குடி இந்தியர்கள் கயிறுகளையும், கூடைகளையும் தயாரித்தனர்.
இந்தத் தாவரத்தில் மட்டுமே காணப்படும் ஒரு அந்துப்பூச்சி இதன் மலர்களில் தனது முட்டைகளை இடுகிறது. மலரோடு இது வளர்ந்து மலர் மலரும் போது இது வெளிப்படுகிறது. இதுவும் ஒரு அதிசயம் தான்!
இங்கு மிருகங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
இந்தப் பகுதியை வணிக மயமாக்கி ஜிப்ஸத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதில் அமெரிக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. கண்கள் எட்டிய தூரம் மட்டும் வெள்ளை வெளேரென மணல் குன்றுகள் காட்சி அளிக்கும் இடம் உலகில் இது ஒன்றே தான்!