

இயற்கை தன்னுடைய படைப்பில் பல ஆச்சரியங்களை வெளிப்படுத்தியுள்ளது. பறப்பதற்கு இறக்கைகள் வேண்டும். ஆனால், இறக்கைகளோ, பிரத்தியேக உறுப்புகளோ இல்லாமல் காற்றில் மிதந்து செல்கின்றன பறக்கும் பாம்புகள் (Flying Snakes). மரத்திற்கு மரம் தாவும் ஆசிய காடுகளில் இருக்கும் இந்த பாம்புகள் தற்காப்பிற்காக இல்லாமல் ஒரு தேர்ந்த விமானியை போல திட்டமிட்டு காற்றில் பயணிக்கின்றன. அத்தகைய பறக்கும் பாம்புகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
எப்படி இருக்கும் இந்தப் பாம்புகள்?
தரையில் வாழும் பாம்புகளை விட சற்று தட்டையான உடலமைப்பை கொண்டு, 70 முதல் 130 செ.மீ. நீளம் கொண்ட இந்த பாம்புகள் 'கொலுப்ரிட்ஸ்' (Colubrids) எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவை. பச்சை, மஞ்சள், ஆலிவ் அல்லது வெண்கல நிற பின்னணியில் கறுப்பு நிறக் கோடுகளுடன் காட்சியளிப்பதால் இவை மரக் கிளைகளுக்கு இடையே மறைந்திருக்க உதவுகிறது. பெரிய கண்களையும், தட்டையான தலையையும் கொண்டுள்ளதால் காற்றில் பறக்கும்போது இலக்கை துல்லியமாக கணிக்கின்றன.
எங்கே வாழ்கின்றன?
ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, தெற்கு சீனா, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த விசித்திர பாம்புகள் காணப்படுகின்றன. அடர்ந்த வெப்பமண்டலக் காடுகளே இவற்றின் விருப்பமான இருப்பிடமாக இருப்பதோடு தரையில் செல்வதை விட, மரங்களின் மேல் அடுக்குகளிலேயே இவை வாழ்நாளைக் கழிக்கின்றன.
என்ன சாப்பிடுகின்றன?
மரங்களில் வாழும் சிறிய ஓணான்கள், பல்லிகள், மரத் தவளைகள், சிறிய பறவைகள் அல்லது வௌவால்களை இவற்றை வேட்டையாடுகின்றன. காற்றில் பறக்கும்போது வேட்டையாடாமல், ஒரு மரத்தில் உணவு தீர்ந்தவுடன் அல்லது புதிய வேட்டை இடத்திற்குச் செல்லவே இவை பறக்கும் கலையைப் பயன்படுத்துகின்றன.
சிறகுகள் இல்லாமல் பறப்பது எப்படி?
விஞ்ஞானிகளுக்கு இறக்கைகள் இல்லாமல் காற்றில் இந்த பாம்புகள் மிதப்பது ஒரு புதிராகவே இருந்தது. மரத்திலிருந்து குதித்தவுடன், இந்த பாம்பு தனது விலா எலும்புகளைப் பக்கவாட்டில் விரித்து, உருளை வடிவிலுள்ள தனது உடலை ஒரு 'தட்டு' போலத் தட்டையாக மாற்றிக் கொள்கிறது. உடலைத் தட்டையாக்குவதன் மூலம், அதன் மேல், கீழ் பகுதிகளில் காற்றழுத்த வேறுபாடு உருவாகிறது. இது பாம்பின் வீழ்ச்சியைத் தாமதப்படுத்தி, காற்றில் மிதக்க உதவுகிறது. காற்றில் இருக்கும்போது, இந்தப் பாம்பு தரையில் ஊர்ந்து செல்வதைப் போலவே பக்கவாட்டில் நெளிந்து செல்கிறது. இது காற்றில் நிலைதடுமாறாமல் (Stability) இருக்கவும், திசையை மாற்றவும் உதவுகிறது என்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளாகும்.
இதற்கான எல்லைகள் என்ன?
இவ்வகை பாம்புகளால் பறவைகளைப் போல மேலே எழும்ப முடியாது. பாம்புகள் பறக்கின்றன என்று கூறினாலும் உண்மையில் இவை 'கிளைடிங்' (Gliding) அதாவது காற்றில் மிதந்து கீழிறங்கும் வேலையைத்தான் செய்கின்றன. அவை பயணிக்கும் தூரம் எவ்வளவு உயரத்தில் இருந்து குதிக்கின்றன என்பதைப் பொறுத்து அமைவதோடு, இவற்றின் பயணத்தை காட்டின் அடர்த்தி, காற்றின் வேகம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை தீர்மானிக்கின்றன.