
உலகளவில் பூமிக்கு 'ஜியா' என்று பெயர். இதிலிருந்து வந்ததுதான் "ஜியாகரபி" என்ற சொல். பூமியின் காந்தப்புலம் சூரியனில் இருந்து வரும் உயர் ஆற்றல் துகள்களின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு எதிராக ஒரு கவசமாக செயல்படுகிறது. இது பூமியிலிருந்து 60000 கிமீ தொலைவு விண்வெளி வரை நீண்டுள்ளது. பூமி அதன் அச்சில் சுழலும் வேகம் மணிக்கு 1674 கிலோமீட்டர். பூமியின் சுற்றளவு பூமத்திய ரேகையைச் சுற்றி அளவிடப்படுகிறது, இது 40,075.017 கிமீ (24,901.461 மைல்) ஆகும்,
பூமி தன் அச்சில் சுற்றும்போது அசைந்தாடும். இந்த அசையும் தன்மைக்கு "நியுடேஷன்" என்று பெயர். பூமி சூரியனிடமிருந்து ஏற்படும் புவியீர்ப்பு காந்த சக்தியினால் இந்த அசைவு ஏற்படுகிறது. இந்த நியுடேஷன் என்ற தியரியை 1728 ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் பிரேட் கண்டுபிடித்து தெரிவித்தார்.
சனி கிரகத்தைச் சுற்றி அமைந்துள்ள வளையங்களைப் போலவே, பூமிக்கும் ஒரு காலத்தில் வளையங்கள் இருந்திருக்கலாம் என்பதற்கான சான்றுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வல்லுநர்களின் கருத்துப்படி, சுமார் 45 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய குறுங்கோள் (ஆஸ்டிராய்டு) பூமியுடன் கிட்டத்தட்ட மோதியுள்ளது. அதன் விளைவாக ஏற்பட்ட கழிவுகளைக் கொண்டதொரு வளையம் பூமியை சுற்றி உருவாகியுள்ளது. இவ்வாறு உருவான வளையங்கள் 'டெப்ரிஸ் ரிங்' எனப்படும். இவை, பூமியின் காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
நாம் வாழும் பூமியின் நிலத்திற்கு கீழே 50 கிமீ போனால். அப்போது அங்குள்ள வெப்பம் 1200 சென்டிகிரேட் ஆக இருக்கும். இது மிக கடினமான பாறைகளைக் கூட உருகச்செய்துவிடும். பூமியின் உள் மையமானது கிரகத்தின் மேற்பரப்பைவிட மெதுவாக சுழல்வதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (யுஎஸ்சி) விஞ்ஞானிகள் பூமியின் உள் மையமானது கிரகத்தின் மேற்பரப்பை விட மெதுவாக சுழல்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது, நிலத்தடி ஆராய்ச்சி கிரக இயக்கவியல் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. மேலும், பூமியின் காந்தப்புலத்தின் நிலைத்தன்மை மற்றும் இரவு பகலின் காலம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளது.
இது சுமார் 40 ஆண்டுகளில் முதல் முறையாக பூமியின் மேலோட்டத்தை விட மெதுவாக நகர்கிறது. பூமியின் உட்புற மையமானது நமது கால்களுக்குக் கீழே 4,800 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஆராய்ச்சியாளரான ஜான் விடேலும் அவருடன் சில ஆராய்ச்சியாளர்களும் இணைந்து இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
இவர்கள் ஆய்வுக்காக தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள தெற்கு சாண்ட்விச் தீவுகளைச் சுற்றி 1991 மற்றும் 2023 க்கு இடையில் பதிவுசெய்யப்பட்ட 121 தொடர்ச்சியான பூகம்பங்களை ஆய்வு செய்தனர்.
மேலும், 1971 மற்றும் 1974 க்கு இடையில் நடத்தப்பட்ட சோவியத் அணுசக்தி சோதனைகள் மற்றும் உள் மையத்தின் பிற ஆய்வுகளிலிருந்து பிரெஞ்சு மற்றும் அமெரிக்க அணுசக்தி சோதனைகளின் தரவுகளையும் பயன்படுத்தினர். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பூமியின் உட்கரு வேகம் குறைய தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான் விடேல் கூறுகையில், "பூமியின் காந்தப்புலத்தை உருவாக்கும் சுற்றியுள்ள திரவ வெளிப்புற மையத்தின் இயக்கத்தாலும், மேலோட்டமான பாறை மேன்டில் உள்ள அடர்த்தியான பகுதிகளிலிருந்து வரும் ஈர்ப்பு விசையாலும் உள் மையத்தின் சுழற்சியின் வேகம் குறைகிறது" என்கிறார்.
நாசா விஞ்ஞானிகள் ஜப்பானின் டோஹோ பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில்தான் பூமியின் ஆயுட் காலம் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் கம்ப்யூட்டர் பல்வேறு வகையான கணித மாடல்களை தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி பூமியின் ஆயுட் காலம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். இதில், 1 பில்லியன் ஆண்டுகளுக்குள் பூமியில் ஒரு உயிர்கள் கூட வாழ முடியாத நிலை வரும் என்று கூறியுள்ளனர். பூமியில் ஏற்படும் தீவிர காலநிலை மாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் காரணமாக பூமியில் உயிர்கள் நிலைத்து இருப்பது சாத்தியமற்றதாகவிடும்.
பூமியில் உயிர்கள் அழிவதற்கு சூரியனே காரணமாக இருக்கும். சூரியனின் வெப்ப நிலை கடுமையாக அதிகரிக்கும் எனவும் இதன் ஆற்றல் பூமி மட்டும் இன்றி அதனை சுற்றியுள்ள கோள்களை அழிக்கும் அளவுக்கு தீவிரம் அடையும் என்கிறார்கள்.