
ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) என்பது நீர் வேளாண்மையின் ஒரு துணைக்குழு ஆகும். மண் இல்லாமல் கனிம ஊட்டக்கூறுகளைக் கொண்ட நீர்ம வளர்ப்பூடகக் கரைசல்களைப் பயன்படுத்தி தாவரங்களை வளர்க்கும் ஒரு முறையாகும். நிலத்தடிச் செடிகளின் வேர்கள் மட்டுமேக் கனிம ஊட்டச்சத்துள்ள ஊடகத்தில் இருக்குமாறு வளர்க்கப்படுகிறது, அல்லது மண்ணிற்குப் பதிலாக மெருகேறிய பளிங்கு உருள்மணிகள் அல்லது கூழாங்கற்கள் போன்ற செயலற்ற ஊடகத்தைப் பயன்படுத்தி வேர்களுக்கு பிடிப்புத் தன்மை செய்யப்படுகிறது.
மண்ணில்லா விவசாயத்திற்கான ஊட்டச்சத்துக்கள் பல்வேறு மூல ஆதாரங்களிலிருந்து கிடைக்கின்றன. ஊட்டச்சத்துக்களும் வீணடிக்கப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல், மீன் கழிவுகள், வாத்துக் கழிவுகள் அல்லது சாதாரண உரம் போன்ற பிற சத்துக்களை ஊட்டச் சத்துக்களாக தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். தவிடு, தென்னை நார்ப் படுக்கை, கம்பளி முதலான பொருட்களும் ஊடகங்களாகப் பயன்படுத்தலாம்.
வேளாண் ஆராய்ச்சியாளர்கள், தாவரங்கள் தமக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நீரில் கரைந்துள்ள சில கரிம மூலகங்களை உறுஞ்சிப் பெற்றுக்கொள்வதை 19 ஆம் நூற்றாண்டுகளில் கண்டறிந்தனர். உண்மையில் தாவரங்கள் உறிஞ்சிப் பயன்படுத்தக்கூடிய நிலையில் ஊட்டச்சத்துகளை மாற்றிப் பேணுவதே மண்ணின் செயற்பாடு ஆகும்.
ஆகவே, நீரில் கரைந்த நிலையில் நேரடியாகத் தாவரத்தால் உறிஞ்சிப் பயன்படுத்தகூடிய நிலையிலான போசணை ஊடகத்தை வழங்குவது மண்ணின் பயன்பாட்டை இல்லாதாக்கும் என்ற சிந்தனையை வளர்த்தது. அதனை அடிப்படையாகக் கொண்டே ஹைட்ரோஃபோனிக்ஸ் கண்டறியப்பட்டது. இதனை நீரியல் வளர்ப்பு அல்லது மண்ணில்லா வேளாண்மை என்றும் குறிப்பிடுகின்றனர்.
அக்வாபோனிக்ஸ் (Aquaponics) என்பது வழக்கமான மீன் வளர்ப்பு மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் என்கிற நீரியல் தாவர வளர்ப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஒரு அமைப்பாகும். அக்வாபோனிக்ஸ் அமைப்பில், நீர்வாழ் விலங்குகளான மீன் போன்றவை வளரும் தொட்டியும், நீரியல் வளர்ப்புச் செடிகள் வளரும் தட்டுகளும் ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கும். இதில் நீரானது இடைவெளியின்றிச் சுழற்சி முறையில் மீன் தொட்டியின் மேல் இருக்கும் செடி வளரும் தட்டுக்குச் சென்று, பின் அங்கு இயற்கை முறையில் சுத்தகரிக்கப்பட்டுப் பின் மீண்டும் மீன் தொட்டிக்கு வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அக்வாபோனிக்ஸ் முறையிலான நீரியல் வளர்ப்பில் செடி வளர்க்க மண்ணில் செடி வளர்ப்பதற்குத் தேவைப்படும் நீரில் பத்தில் ஒரு பங்கு போதுமானது. மேலும் களையெடுப்பு, உரமிடல் ஆகிய வேலைகளும் கிடையாது. இது தவிரச் சுற்றுச்சுசூழல் மாசுபடுவதையும் இது வெகுவாகத் தடுக்கின்றது. எல்லாவிதமான தாவரங்களையும் வளர்க்க முடிந்தாலும், இந்த முறையில் முட்டைக்கோஸ், கீரை, தக்காளி, மணி மிளகு, ஓக்ரா போன்றவை வேகமாக வளரும். இதில் நீர்வாழ் உயிரினங்களான மீன், நத்தை, நண்டு, இறால் போன்றவை வளர்க்க முடியும்.
பொதுவாக மீனின் எஞ்சிய உணவும் மீனின் கழிவுகளிலிருந்து உண்டாகும் அளவுக்கு அதிகமான புரதச் சத்துக்களால் நீர் நஞ்சாவது என்பது மீன் வளர்ப்பின் முக்கியப் பிரச்சினை. இதேப் போன்று, நீரியல் வளர்ப்பின் பிரச்சனை என்பது வேளாவேளைக்கு உரமிட வேண்டும் என்பதாகும்.
இந்த இரண்டு முறையையும் இணைப்பதன் மூலம், மீனின் கழிவு, செடிக்கு உரமாகிறது, சுத்தமான நீரும் மீனுக்குக் கிடைக்கிறது. நீரில் உள்ள நுண்ணுயிரிகள், மீனின் கழிவை அம்மோனியாவாகவும், பின் அந்த அம்மோனியாவை நைட்ரேட்டாகவும் மாற்றுகின்றன. நைட்ரேட்ஸ் என்பது நைட்ரஜனின் வடிவம் ஆகும். அதைத் தாவரங்கள் ஊட்டமாக பெற்று, தமது வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்துகின்றன. இவ்வாறாக அக்வாபோனிக்ஸ் முறையில் ஒன்றின் குறை மற்றதற்கு நன்மையாக மாறுகிறது.