
பார்ப்பதற்கு பொம்மைபோல, காண்பவர்களை கவர்ந்து இழுக்கும் அழகோடு இருப்பவைதான் பாண்டா கரடிகள். பாண்டா வடிவ கரடி பொம்மைகள் எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முதன்மை விருப்பமாக உள்ளது. வெள்ளையும் கருப்பும் கலந்த அதன் நிறமும் கவரும் தன்மை கொண்டது. சிறப்பு வாய்ந்த பாண்டா கரடி இனம் தற்போது அழியும் தருவாயில் உள்ளது.
வேட்டையாடப்படுதல்:
பாண்டாக்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்றாலும் , வேட்டையாடுவது இன்னும் குறைந்தபாடு இல்லை. சீன அரசாங்கம் இதற்காக கடுமையான தண்டனைகளை விதித்துள்ள போதும் கூட வேட்டை தொடர்கிறது. பாண்டாவின் தோல் மற்றும் முடிகள் மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. கருப்பு சந்தையில் பாண்டாவின் தோலுக்கும் முடிக்கும் மிக அதிக விலை உள்ளது. இதனால் பேராசைப்பட்டு பாண்டா கரடிகளை வேட்டையாடி வருகின்றனர்.அழிவின் விளிம்பில் இந்த இனம் இருந்தாலும் வேட்டை நிற்கவில்லை.
இழந்து வரும் வாழ்விடங்கள்:
தற்போது சுமார் 1800 பாண்டாக்கள் மட்டுமே உயிருடன் இருப்பதாக விலங்கியல் ஆய்வாளர்கள் கணக்கிட்டு உள்ளனர். முன்பொரு காலத்தில் காட்டு பாண்டாக்கள், வியட்நாம், லாவோஸ் சீனா மற்றும் பர்மா ஆகிய நாடுகளில் இருந்தன. பாண்டாக்களின் முக்கிய உணவாக மூங்கில் தாவரங்கள் உள்ளன. மற்ற உணவுகளை எளிதில் சீரணிக்க இயலாது என்பதால், பாண்டாக்கள் மூங்கிலை மட்டுமே சார்ந்துள்ளன.
மூங்கில் காடுகள் அழிக்கப்படுவதால் பாண்டாக்களின் உணவுக்கான ஆதாரம் இல்லாமல் போய்விடுகிறது. தொடர்ச்சியாக காட்டில் உள்ள மரங்கள் வெட்டப்படுபதால் பாண்டாக்களின் வாழ்விடம் மிகவும் சுருங்கிவிட்டன. சீனாவை தவிர மற்ற சில நாடுகளில் பாண்டா கரடியினம் பெரும்பாலும் அழிந்துவிட்டது. இதற்கு வாழ்விடங்களை இழப்பது முக்கிய காரணமாக உள்ளது.
இடம்பெயர் இயலாமை:
மற்ற விலங்குகள்போல பாண்டாக்களால் தங்களது உணவுமுறைகளை மாற்றிக்கொண்டு வேறு வாழிடங்களில் வாழ முடியவில்லை. காடு அழிக்கப்படும்போது இன்னொரு காட்டிற்கு இடம்பெயரும் வழிமுறைகளை அவை அறியவில்லை. மூங்கில் காடுகள் தவிர வேறு காடுகளில் வசிக்கும் அளவிற்கு அதற்கு பரிமாணங்கள் இல்லை.
இனப்பெருக்க பிரச்னை:
பொதுவாக மற்ற கரடிகளைப்போல பாண்டாக்கள் பல குட்டிகளை போட முடிவதில்லை. இவை ஒரு குட்டியை மட்டுமே நல்ல ஊட்டத்தோடு பெற்றெடுக்கிறது. தாய் பாண்டாவின் உடலில் ஒரு குட்டியை சுமக்கும் அளவுக்குதான் சக்தி உள்ளது. ஒருவேளை இரு குட்டிகள் பிறந்தால், தாய் பாண்டா ஒரு குட்டியை கைவிட்டுவிடும். பாண்டாவால் ஒரு சமயத்தில் ஒரு குட்டிக்கு பால் கொடுக்கும் அளவிற்குதான் திறன் உள்ளது. இன்னொரு குட்டிக்கு பால் போதாது. அவற்றிற்கு போதுமான ஊட்டச்சத்துகளும் கிடைக்காது. எனவே இரண்டு குட்டிகளுக்கு உணவளிக்க இயலாமல் கைவிட்டுவிடும் நிலையை அடைகிறது.
கைவிடப்பட்ட பாண்டா குட்டியை மனிதர்கள் வளர்த்தாலும், அந்த குட்டிகளால் இனப்பெருக்கம் செய்ய இயலாது. ஒரு ஆண் பாண்டாவை, பெண் பாண்டாவுடன் ஒன்றாக கூண்டில் அடைத்து வைத்தாலும், பல ஆண்டுகள் ஆனாலும் அந்த பெண் பாண்டாவை, ஆண் தனது துணையாக ஏற்கும் என்ற உறுதி இல்லை.
பாண்டாக்கள் தங்கள் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கும். மனிதர்களால் வளர்க்கப்படும் பாண்டாவை, மற்ற பாண்டா கரடிகள் ஏற்றுக்கொள்வதில்லை. அந்த பாண்டாவை மற்ற பாண்டாக்கள் ஒன்று கூடி கொன்றுவிடும்.
பாண்டாக்களின் எண்ணிக்கையை உயர்த்த மற்ற விலங்குகள் வசிக்கும் காடுகளில் விடுவதும் முறையானது ஆகாது. மற்ற விலங்குகள் பாண்டாவை எளிதில் கொன்றுவிடும். பாண்டாக்களை பாதுகாக்க அவற்றிற்கு என்று தனியான முங்கில் காடுகள் வளர்க்கப்பட வேண்டும்.