இயற்கையின் அதிசயங்கள் ஏராளம். அதில் ஒன்று பறவைகள். சுற்றுச்சூழல் காத்து உலகின் இயக்கத்துக்கு முக்கியக் காரணியாக விளங்கும் பறவை வகைகளில் மட்டுமல்ல, அவற்றின் வாழ்க்கை முறையிலும் ஆச்சரியங்கள் ஏராளம் புதைந்து கிடக்கின்றன. அப்படி ஆச்சரியப் பறவைகளில் ஒன்றுதான் உழவாரக் குருவி. உழவாரன் (Swift) பறவை என்றும் அழைக்கப்படும் இது, அபோடிடே (Apodidae) என்ற பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதில் ஒரு வகைதான் கொண்டை உழவாரன்கள் (Crested Treeswift). சிறிய, மிக அழகான பறவை. ஆனால். நீண்ட வாலுடன் சற்றே அதிக விரிவான வில் போன்ற இறகு அமைப்பைக் கொண்டு. கறுப்பும், சாம்பல் நிறமும் கொண்ட உடலுடன் இதன் அழகு நம்மைக் கவரும். அமர்ந்திருக்கும்போது இதன் நீண்ட வால் கத்திரி போலக் குறுக்காக காணப்படும். இவை இந்தியாவில் பொதுவாக திறந்தவெளியாக உள்ள மலைவாழ் சுற்றுச்சூழல்களில் அதிகம் காணப்படுகின்றன. பெரும்பாலும் இந்தப் பறவைகள் 365 மீட்டருக்கு (1,198 அடி) மேற்பட்ட உயரத்தில் உள்ள பகுதிகளில் வாழ்கின்றன.
பார்ப்பதற்கு தூக்கணாங்குருவி போன்று காணப்படும். ஆனால், இது பறந்து கொண்டே அதன் உணவைப் பிடிக்கும் திறமை கொண்டது. சின்னச் சின்னப் பூச்சிகள், கொசுக்கள், தட்டான்கள் போன்றவற்றைப் பறந்து செல்லும்போதே பிடித்து உண்ணும். அதற்கேற்றாற்போல அதன் வாய் விரிந்திருப்பது சிறப்பு. இதில் ஆண் பறவைக்கு கன்னத்தில் ஒரு சிவப்புத் திட்டு இருக்கும்.
எந்நேரமும் பறந்து கொண்டிருக்கும் இப்பறவை மரக் கிளைகளின் நுனியில் அமரும்; கூடும் வைக்கும். ஒருவித கடூர ஒலி எழுப்பிக்கொண்டு காட்டு மரங்களின் இடையே, திறந்த வெளிகளில் பறந்து இரை தேடும். கிளைகள் ஊடே சிறு விமானம் மிதப்பது போன்ற எண்ணத்தைத் தரும். அதன் பறக்கும் திறன் நம்மை வியக்க வைக்கும்.
பொதுவாக, கூடு என்றால் இணைப் பறவைகள் இரண்டுமே கூட்டிற்குள் இருக்கும் அளவிற்கு இடம் வேண்டும். மழை, வெயிலிலிருந்து காக்கும் அளவிற்கு பொந்துபோல கட்டியிருக்கும் என்றுதான் நினைப்போம். அதற்கு மாறாக இந்த கொண்டை உழவாரன் பறவைகள், அடைகாத்து குஞ்சு பொரிக்க வேண்டிய ஒரு முட்டை மட்டும் வைக்க போதுமான அளவு இடத்துடன் இந்தக் கூட்டைக் கட்டுகிறது என்பது ஆச்சரியம் தருகிறது.
மரத்தின் மெல்லிய பட்டை மற்றும் இறகுகளைக் கொண்டு தனது எச்சிலையும் சேர்த்துக் குழைத்து உலர்ந்த கிளை நுனியில் ஒரு சிறிய கிண்ணம் போன்ற அமைப்பை உருவாக்கி அதனுள் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கிறது. கோப்பை வடிவில் மிகச் சிறியதாய் இருக்கும் அக்கூட்டில் ஒரே ஒரு நீல நிற முட்டை இட்டு ஆண், பெண் பறவைகள் இரண்டும் அடைகாக்கிறது. அடைகாத்து குஞ்சுபொரித்து, குஞ்சுப்பறவை அந்த சிறிய கூட்டை விட்டு விழாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வதுடன் மற்ற பறவைகள், விலங்குகளிடமிருந்து காப்பாற்றி இரையூட்டி ஒற்றை வாரிசை வளர்க்கின்றன இந்த அழகுப் பறவைகள்.
இந்தியாவில் மட்டுமின்றி, இலங்கை, பூட்டான், நேபாளம், வியட்நாம், கம்போடியா, லாவோஸ், சீனா போன்ற பல நாடுகளில் காணப்படும் குறைந்த அளவிலான இந்தப் பறவையை சமீபத்தில் சேலம் ஏற்காடு மலையில் பறவை ஆர்வலர்கள் கண்டு மகிழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.