
இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ரயில் பாதைகளில் ஆயிரக்கணக்கான வனவிலங்குகள் அடிபட்டு சாகின்றன. 2017-18 மற்றும் 2020-21 காலகட்டங்களில் மட்டும் 73 யானைகள், நான்கு சிங்கங்கள் உட்பட 63,000 விலங்குகள் ரயில்களில் அடிபட்டு இறந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், இவை பதிவு செய்யப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கைதான். உண்மையான இறப்பு எண்ணிக்கை, குறிப்பாக ஊர்வன, பறவைகள், சிறிய பாலூட்டிகள் போன்ற சிறிய விலங்குகளின் இறப்பு பதிவு செய்யப்படாமல் இருக்கலாம்.
யானைகள், சிங்கங்கள், சிறுத்தைகள், இந்தியக் காட்டெருமைகள் போன்ற பெரிய விலங்குகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகின்றன. அதேசமயம் மான்கள், காட்டுப்பன்றிகள், கரடிகள், கழுதைப்புலிகள் மற்றும் எண்ணற்ற சிறிய உயிரினங்கள் ரயிலில் அடிபட்டு இறப்பது வெளி உலகத்திற்கு தெரியாமல் இருக்கின்றன.
அசாம், மேற்கு வங்காளம், உத்தரகாண்ட், ஒடிசா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ரயில் பாதைகள் யானை வழித்தடங்கள் வழியாகச் செல்கின்றன. இதனால் தண்ணீர், உணவு அல்லது பருவ கால இடத்தேர்வு போன்ற காரணங்களால் தண்டவாளங்களைக் கடக்க வேண்டிய நிலைமை யானைகளுக்கு ஏற்பட்டு அதன் காரணமாக இறக்க நேரிடுகின்றன. குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிங்கங்கள் ரயில்களில் அடிபட்டு சாகின்றன.
நவீனமயமாக்கப்பட்ட ரயில்வே சேவைகளால் அதிகரித்த ரயில் வேகம் காரணமாக விலங்குகள் தண்டவாளங்களை விரைவில் கடக்க முடியாமல் போகிறது. ரயில்களில் இருந்து வீசப்படும் உணவுக் கழிவுகளால் ஈர்க்கப்பட்ட விலங்குகள் தண்டவாளத்தின் அருகே வருகின்றன. தண்டவாளங்களின் அருகே அதிகமாக வளர்ந்திருக்கும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் ரயில் ஓட்டுநர் இருவருக்கும் பாதையை மறைக்கின்றன.
ஜப்பானின் குரைக்கும் ரயில்: வனவிலங்குகளை ரயிலில் அடிபடாமல் பாதுகாப்பதற்கு ஜப்பான் ஒரு புதிய முறையை கண்டறிந்துள்ளது. ஜப்பானின் கிராமப்புறங்களில் ரயில் தண்டவாளங்களில் மான்கள் அடிக்கடி சுற்றித் திரிகின்றன. இவை ரயிலில் மோதி இறக்க நேரிடுகின்றன. இதனால் விலங்குகள் இறப்பு, ரயில்களுக்கு சேதம் மற்றும் தாமதமாக வந்து சேருவது போன்ற பிரச்னைகள் அங்கே உருவாகின.
ஜப்பானின் ரயில்வே தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் விலங்குகளை பயமுறுத்துவதற்கான ஒரு அமைப்பை உருவாக்கி குரைக்கும் ரயிலை உருவாக்கினர். அதாவது ரயில்களில் நாய் குரைப்பது போன்ற ஸ்பீக்கர்களையும், மான்கள் கத்துவது போன்ற ஸ்பீக்கர்களையும் பொருத்தினர். மான்களின் கவனத்தை ஈர்க்க மான் கத்துவதை போன்ற சத்தத்தை மூன்று வினாடிகள் ஒலிக்க விடுகின்றனர். அதைத் தொடர்ந்து நாய் குரைப்பது போன்ற சத்தம் ரயிலில் இருந்து 20 வினாடிகள் வரை ஒலிக்கும். ஏனென்றால், மான்கள் இயற்கையாகவே நாய்களைக் கண்டு பயப்படும் என்பதால் இந்த சத்தத்தைக் கேட்ட மான்கள் தண்டவாளத்தின் அருகே வர பயப்படும்.
ஜப்பானின் இந்தப் புதுமையான குரைக்கும் ரயில் புத்திசாலித்தனமான பொறியியல் சாதனம் மட்டுமல்ல, ரயில்களில் வனவிலங்குள் மோதுவதைத் தவிர்க்க மனிதாபிமானமுள்ள பயனுள்ள உத்தியாகும். உலகளாவிய கவனத்தை ஈர்த்த இந்தப் புதுமையான அறிமுகம் உலகின் பல பகுதிகளில் அறிமுகப்படுத்த வேண்டும். வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்தியாவிலும் இதுபோன்று யானைகள், காட்டுப்பன்றிகள், பல்வேறு வகையான மான்கள் போன்றவற்றை தண்டவாளத்தின் அருகே வர விடாமல் தடுக்க புலி, சிறுத்தையின் உறுமல் போன்றவற்றை ஒலிக்கச் செய்யுமாறு ரயில்கள் வடிவமைக்கப்படலாம். வனவிலங்குகள் அருகாமையில் கண்டறியப்படும்போது மட்டும் இந்த ஒலிகள் பயன்படுத்தப்படும். இந்த முறையை வனவிலங்கு சாலைப் பகுதிகளில் வாகனங்கள் செல்லும் இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வனவிலங்குகளின் உயிர்களை பாதுகாக்கலாம்.