
பொதுவாக, மனிதர்களைப் போலவே பறவைகளும் விலங்குகளும் கண்களை மூடிக்கொண்டுதான் உறங்கும். யானைகள், பசுக்கள், சிங்கங்கள் போன்றவை தூங்குவதற்காக எப்போதும் இரு கண்களையும் மூடுகின்றன. பாம்புகள் மற்றும் மீன்களுக்கு கண் இமைகள் இல்லாததால் பாதுகாப்புக்காக இரண்டு கண்களையும் திறந்து வைத்தே தூங்கும். அதேபோல, சில நீர்வாழ் பாலூட்டிகள் மற்றும் பறவைகள் தூக்கத்தின்போது ஒரு தனித்துவமான முறையைப் பின்பற்றுகின்றன. மூளையின் ஒரு பாதி மட்டும் ஓய்வெடுக்கும். அதேவேளையில் மற்றொரு பாதி விழிப்புடன் இருப்பதால் கண்ணைத் திறந்து கொண்டு தூங்குகின்றன. எந்தெந்த மிருகங்கள் கண்களைத் திறந்து கொண்டே தூங்கும் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. பெங்குயின்கள்: வாத்துகள், பெங்குயின்கள் போன்றவை ஆபத்தில் இருக்கும்போது அல்லது இடம்பெயரும்போது ஒரு கண்ணை மட்டும் திறந்து தூங்கும். இவை பெரும்பாலும் குறுகிய இடைவெளியிலேயே உறங்குகின்றன. பொதுவாக, நின்றுகொண்டே அவை தூங்குகின்றன. அதனால் அவற்றால் குறைவான நேரமே தூங்க முடியும். குளிரான சீதோஷ்ண நிலையில் அவை ஓய்வெடுக்கும்போது கூட அரை விழிப்புடன் இருப்பது அவசியம். தங்களைத் தாக்க வரும் எதிரி விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள அரைக் கண்கள் மூடி, அரைக் கண்களைத் திறந்து கொண்டு நின்று கொண்டே தூங்குகின்றன.
2. ஒட்டகச்சிவிங்கிகள்: இவை மிகக் குறைவான நேரம் நின்று கொண்டே தூங்கும். அவை திறந்தவெளி வாழ்விடங்களில் வசிப்பதால் பிற மிருகங்களிடமிருந்து எந்த நேரமும் ஆபத்தை எதிர்நோக்குகின்றன. எனவே, அவற்றால் கண்களை முழுமையாக மூடி உறங்க முடியாது. கண்களை திறந்து கொண்டே தூங்குவதுதான் அவற்றிற்கு ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழியாகும்.
3. வெள்ளை சுறாக்கள்: பெரிய வெள்ளை சுறாக்களுக்கு கண்களைப் பாதுகாக்கும் கண்ணிமைகள் உண்டு. ஆனால், தூங்கும்போது அல்லது ஓய்வெடுக்கும்போது கண்கள் திறந்த நிலையில்தான் இருக்கும். அவை தொடர்ந்து சுவாசிக்க இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அவை உறங்கும்போது கூட அவற்றின் மூளைப் பகுதி சுறுசுறுப்பாக இயங்கும். கண்களும் திறந்த நிலையில் இருக்கும். சுற்றுச்சூழலில் வரும் ஆபத்துகளை எதிர்கொண்டு தம்மை தற்காத்துக்கொள்ள இது உதவுகிறது.
4. டால்ஃபின்கள்: இவை தூங்கும்போது பாதி மூளை விழித்திருக்கும். டால்பின்கள், சீல்கள் போன்ற கடல் பாலூட்டிகள் பாதி கண்களைத் திறந்து வைத்துக் கொண்டுதான் தூங்குகின்றன. அவை தமது மூளையின் பாதிப் பகுதியை எச்சரிக்கையாக வைத்திருக்கின்றன. இவை தூங்கும்போது மூளையின் ஒரு பகுதி ஓய்வில் இருக்கும். இன்னொரு பகுதி விழித்திருக்கும். இதனால் பாதிக் கண்கள் திறந்திருக்கும். அவை விழிப்புடன் இருக்கவும், தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து சுவாசிப்பதற்கும் இந்த நிலை உதவுகின்றது.
5. முதலைகள்: முதலைகள் பெரும்பாலும் ஒரு கண்ணைத் திறந்து தண்ணீருக்கு அடியில் தூங்குகின்றன. தன்னை தாக்க வரும் பிற மிருகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை பற்றிய விழிப்புடன் இருப்பதற்காக ஒரு கண்ணை மட்டும் திறந்து வைத்து தூங்குகின்றன.
6. மரத்தவளைகள்: இவை தம்மை வேட்டையாடுபவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கவும் கண்களை முழுமையாகத் திறந்தோ அல்லது பாதியளவு திறந்தோ தூங்கும்.
7. குதிரைகள்: குதிரைகள் கண்களைத் திறந்து கொண்டு குறுகிய இடைவெளியில் தூங்கும். தேவைப்பட்டால் இவை தப்பியோடத் தயாராக இருக்கின்றன. இதேபோல, பல காட்டு விலங்குகள் ஓய்வெடுக்கும்போது வேட்டையாடுபவர்கள் அல்லது தங்கள் சூழலில் உள்ள அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க தங்கள் கண்களைத் திறந்து வைத்து உறங்குகின்றன. வீட்டு விலங்குகளில், குறிப்பாக சில நாய் இனங்களும் தூக்கத்தின்போது கூட கண்களைத் திறந்து வைத்திருக்கும்.
விலங்குகள் கண்களைத் திறந்து கொண்டு தூங்குவது என்பது பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் உடலியல் சூழல்களில் விழிப்புடனும் பாதுகாப்பாக இருக்கவும், ஓய்வை விழிப்புணர்வுடன் சமநிலைப்படுத்தவும் உதவும் முக்கியமான ஒரு பரிணாம தழுவலாகும்.