
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ம் நாளன்று, ‘உலக மூங்கில் நாள்’ (World Bamboo Day) கடைப்பிடிக்கப்படுகிறது. உலக முங்கில் அமைப்பு, 2009ம் ஆண்டில் தாய்லாந்து, பாங்காக் நகரில் முதல் உலக மூங்கில் மாநாட்டை ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில், உலகெங்கிலும் உள்ள முங்கில் ஆர்வலர்கள், வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை ஒன்றிணைத்தது. அதில் மூங்கிலைக் கொண்டாட ஒரு சிறப்பு நாளை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2009ம் ஆண்டு, செப்டம்பர் 18ம் நாளன்று நடைபெற்ற 8வது உலக மூங்கில் மாநாட்டின்போது, பங்கேற்பாளர்கள் அன்றைய நாளான, செப்டம்பர் 18ம் நாளையே உலக மூங்கில் நாளாகக் கடைப்பிடிப்பது என்று அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் உலக மூங்கில் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தில் மூங்கிலின் முக்கியப் பங்கு குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அதன் விரைவான வளர்ச்சி மற்றும் பல்துறைத் திறனுக்காக அங்கீகரிக்கப்பட்ட மூங்கில், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான வளத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு மரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும். இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இன வகை மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன. மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் அதிக அளவு பருமன் 1 சென்டி மீட்டரிலிருந்து 30 சென்டி மீட்டர் வரை இருக்கும்.
மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு மரம். ஒரே நாளில் 250 சென்டி மீட்டர் (98 அங்குலம்) கூட தக்க சூழ்நிலையில் வளருவதாகத் தாவரவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒரு மூங்கில் மரத்தின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அது 60 அடி உயரம் வரை வளரும் காலமே 59 நாட்கள்தான். கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும். எனவே, மலைச்சரிவுகளும், மிக வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்ற இடங்களாக இருக்கின்றன.
சீனா, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, நேபாளம், பங்களாதேஷ், கோஸ்டிரிக்கா, கென்யா ஆகிய நாடுகள் மூங்கில் உற்பத்தியில் முன்னணி நாடுகளாக இருக்கின்றன. இந்தியாவில் 156 வகை மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள் முதலிடம் பெற்றிருக்கின்றன. மூங்கிலின் வேர் நிலத்தை ஓர் அடிக்கு மேல் பற்றிக் கொண்டிருக்கும். மூங்கில் ஒன்றோடொன்று இணைந்து வளரும் தொகுப்பு 6 கியூபிக் மீட்டர் வரை இருக்கும்.
மூங்கில் மற்ற தாவரங்களை விட அதிக கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி அதிக ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. இது பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஆதரிக்கிறது. மூங்கில் அறுவடைக்குப் பிறகு மீண்டும் நடவு செய்யாமல் மீண்டும் வளரும், காடழிப்பு அபாயத்தைக் குறைத்து, சீரழிந்த நிலத்தை மீட்டெடுக்க மூங்கில் வளர்ப்பு உதவுகிறது.
கட்டுமானம், கைவினைப்பொருட்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மூங்கில், கிராமப்புற வாழ்வாதாரத்தையும் நிலையான தொழில்களையும் ஆதரிக்கிறது. மூங்கில் கலை, இசை மற்றும் சடங்குகளில், குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க கலாசாரங்களில் முக்கியமானதாக இடம் பெற்றுள்ளது.
பொதுவாக, மூங்கில் குடிசை வீடுகள் கட்டுவதில் மரமாகவும், கட்டடம் கட்டும் தொழிலிலும், கைவினைப் பொருட்கள் செய்யவும், சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்களிலும் மிக முக்கியப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 1500 பயன்களுக்கு மேல் தரக்கூடிய மூங்கில் மரத்திலிருந்து இன்றும் கூட பல பயன்களைப் பெற முடியும் என்று வேளாண் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியாவில் வளர்க்கப்படும் மூங்கிலில் 40 சதவீதம் மரக்கூழ் செய்யவும், காகிதத் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மற்றவை ஒன்று சேர்க்கப்படாத பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இளம் மூங்கில் குருத்துகள், இலைகள் ஆகியன பாண்டா, சிவப்பு பாண்டா, மூங்கில் லெமூர் விலங்குகளின் முதன்மையான உணவாகும். எலிகளும் இவற்றின் பழங்களை உண்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலக மூங்கில் நாளுக்கு கருத்துரு ஒன்று உருவாக்கப்பட்டு, அதனடிப்படையில் மூங்கில் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2025ம் ஆண்டுக்கான கருப்பொருளாக, ‘அடுத்த தலைமுறை மூங்கில்: தீர்வு, புதுமை மற்றும் வடிவமைப்பு’ தரப்பட்டிருக்கிறது. இந்தக் கருப்பொருள் மாணவர்கள், புதுமையாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் மூங்கிலைப் பயன்படுத்துவதற்கான நவீன, ஆக்கப்பூர்வமான மற்றும் நிலையான வழிகளைக் கண்டறிய ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கழிவுகளைக் குறைத்தல், நகர்ப்புற வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் நட்புப் பொருட்கள், பசுமை கட்டடக்கலை, பேக்கேஜிங் மாற்றுகள் மற்றும் தொழில்நுட்பம் போன்ற சமகால தீர்வுகளில் மூங்கிலை ஒருங்கிணைப்பதில் இந்தக் கருப்பொருள் முக்கியத்துவம் அளிக்கிறது.