

விவசாயத்தில் ரசாயன உரங்களின் பயன்பாடு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக நபர்களுக்கு உணவளிக்கும் தன்மையை இது அதிகரித்தது. இத்தகைய செயற்கை ரசாயனங்கள் பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி விளைச்சலை அதிகரிக்கிறது. இருப்பினும், இவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மனிதர்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் போன்றவை கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
ரசாயன உரங்களின் நன்மைகள்: பயிர்களுக்குத் தேவையான அனைத்துவிதமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் தாவரங்களுக்கு வழங்கும் தன்மை இந்த உரங்களுக்கு உண்டு. இது பயிரின் வளர்ச்சியை ஊக்குவித்து விளைச்சலை அதிகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட விளைநிலத்துக்குத் தேவையான குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களை ரசாயன உரங்கள் மூலம் கொடுக்க முடியும். இதனால் விவசாயிகள் தங்களின் பயிர் தேவையை அறிந்து பயன்படுத்த இது அனுமதிக்கிறது.
மேலும், இவை உடனடியாக சந்தையில் கிடைப்பதால், இயற்கை உரங்களைப் போல நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. அதேசமயம், விவசாயிகளுக்கு எளிதாகவும் கிடைக்கிறது. இதனாலேயே பல விவசாயிகளின் முக்கியத் தேர்வாக ரசாயன உரங்கள் இருக்கின்றன. அதேநேரம், இவை விலை குறைவாகவும் விவசாயிகளுக்குக் கிடைப்பதால், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட வழிவகை செய்கிறது.
ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகள்: ரசாயன உரங்களை அதிகமாக நிலத்தில் பயன்படுத்துவதால், மண்ணின் தன்மை மாறிவிடுகிறது. தொடர்ந்து இவற்றைப் பயன்படுத்தும்போது மண்ணின் அத்தியாவசிய நுண்ணுயிர்களின் சமநிலை சீர்குலைகிறது. அதிகப்படியான உரப் பயன்பாடு நீர்நிலைகளை மாசுபடுத்தக் கூடும். இது நீரில் வாழும் பூச்சிகள் மற்றும் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் நீர் நிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்படலாம்.
ரசாயன உரங்களின் பயன்பாடு கிரீன்ஹவுஸ் வாயுக்களை அதிகம் வெளியேற்றுகின்றன. இது காலநிலை மாற்றத்துக்கு வழிவகுக்கும். மேலும், இந்த வகை உரங்களால் விவசாயிகளுக்கு சுகாதார அபாயங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, ரசாயன உரங்கள் பயிர்களுக்கு நல்லதா கெட்டதா என்ற கேள்விக்கு தீர்க்கமான பதிலை கூறி விட முடியாது. இவை விவசாயிகளுக்கு எளிதாகக் கிடைத்து உற்பத்தித் திறனை அதிகரிப்பதால் உலக மக்களுக்கு நன்மையாக இருந்தாலும், அவற்றின் முறையற்ற பயன்பாடு சுற்றுச்சூழலுக்கும் மண்ணின் ஆரோக்கியத்துக்கும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, இவற்றை வயல்வெளிகளில் அதிகம் பயன்படுத்தாமல் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
கிரி கணபதி