
ஒவ்வொரு வருடமும் கோடைக் காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. ‘போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயில் ஜாஸ்தி’ என்கிற கூற்றை நிறைய பேரிடம் கேட்க முடிகிறது? இதற்கு காரணம் யார்? நாம்தான். நாம் பயன்படுத்தும் ஏர்கண்டிஷனர்கள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாகனங்கள் கோடையில் வெப்பத்தை அதிகமாகக்குகின்றன. அதற்கான காரணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏர்கண்டிஷனர்கள்: பூமியில் சுற்றுச்சூழல் காரணிகளால் வெப்பமயமாதல் அதிகரித்துக்கொண்டே போகிறது. காடுகளை அழித்து, நகரங்களில் இருக்கும் மரங்களை வெட்டி கான்கிரீட் கட்டடங்களை அதிகரித்து, தொழிற்சாலைகள் அதிகரிப்பு போன்ற காரணங்களினால் பூமியின் வெப்பம் உயர்ந்துகொண்டே போகிறது. அத்துடன் இன்னொரு முக்கியக் காரணியாக மக்கள் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். ஏசி யூனிட்டுகள் அறைக்குள் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சி வெளியே தள்ளுவதன் மூலம் செயல்படுகின்றன. சுற்றியுள்ள காற்றில் வெப்பம் பரவுகிறது.
ஏராளமான வீடுகள் மற்றும் கடைகளில் ஏசிக்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் ஒட்டுமொத்தமாக வெப்பத்தை வெளியேற்றும்போது அவை வெளிப்புறக் காற்றில் சேர்ந்து சுற்றுச்சூழலை வெப்பமாக்குகிறது. நகரங்களில் தெருக்களில் செல்லும்போது சூடான அடுப்பின் மீது பயணிக்கும் உணர்வு வருகிறது.
ஏர் கண்டிஷனர்களும் குளிர்சாதனப் பெட்டிகளும் இயங்க மின்சாரம் தேவை. மின்சாரம் நிலக்கரி போன்ற எரி பொருள்களை எரிப்பதன் மூலம் வருகிறது. இவற்றை எரிப்பதால் பூமியின் வளிமண்டலத்தில் வெப்பத்தை தக்க வைக்கும் வாயுக்கள் வெளியாகி காலப்போக்கில் பூமி முழுவதும் வெப்பமடைகிறது. பழைய ஏசிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிருக்கும் பொருள்களை குளிர்விக்க சிறப்பு வாயுக்களை வெளியேற்றும்போது வளிமண்டலத்தில் அதிக வெப்பத்தை உண்டாக்குகின்றன. இதனால் வெப்பமயமாதல் பிரச்னை இன்னும் மோசமாகிறது.
வாகனங்கள்: தற்போது வாகனப் பயன்பாடும் பெருமளவு உயர்ந்து விட்டது. சர்வ சாதாரணமாக வீடுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருக்கிறார்கள். பெட்ரோல் அல்லது டீசலை பயன்படுத்தி வாகனங்கள் இயங்கும்போது அதாவது எரிபொருளை எரிக்கும்போது அவை சூடான வாயுக்களை வெளியிடுகின்றன. குறிப்பாக, அதிகப் போக்குவரத்து உள்ள பரபரப்பான சாலைகளில் சூடான வாய்ப்புகள் வெளியேறி அந்த சூழலை மேலும் வெப்பமாக்குகின்றன. அதிக வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில் சாலைகள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்கள் தரையில் அதிக வெப்பத்தை தக்க வைத்துக் கொள்கிறது.
வாகனங்கள் இயங்கும்போது அவற்றிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் பூமியின் வளிமண்டலத்தில் வெப்பத்தை தக்க வைத்து ஒட்டுமொத்த புவி வெப்பமடைதலுக்கும் காரணமாக அமைகிறது. மில்லியன் கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஏசி பிரிட்ஜ் மற்றும் வாகனங்களை இயக்கும்போது நகரம் முழுவதும் மிக மிக வெப்பமாகிறது. பூமியை முழுவதையும் வெப்பமயமாக்குகிறது.
காற்று மாசுபடுத்திகள்: காற்று மாசுபடுத்திகள் மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு சுற்றுச்சூழலை சூடாக வைத்திருக்கின்றன. இது உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது. இவை மனித ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கிறது. மேலும், ஓசோன் புகை மூட்டம், நுண்ணிய துகள் பொருள் மற்றும் அமில மழை உருவாக்கம் போன்ற சிக்கல்களுக்கும் பங்களிக்கின்றன.
அதீத வெப்பத்தின் விளைவுகள்: இதனால் கோடைக்காலத்தில் சில முதியவர்கள் அதீத வெப்பத்தைத் தாங்க முடியாமல் மரணத்தைக் கூட சந்திக்கிறார்கள். இளம் குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகள் வெப்பத்தினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிகளவு வெப்ப வெளிப்பாடு நீர் வடிகால்களையும் வெப்பமாக்குகிறது. நீர்நிலைகள் வெப்பமயமாவதால் அதில் வாழும் பலவிதமான நீர்வாழ் உயிரினங்களின் வளர்சிதை மாற்றம் மற்றும் இனப்பெருக்கத்தை பாதிக்கிறது.
எனவே, ஃபிரிட்ஜ், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் வாகனப் பயன்பாடுகளை குறைத்தால் அன்றி, கோடைக்காலத்தில் உயர்ந்து வரும் வெப்பத்தின் அளவைத் தடுக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.