
இக்ஸோரா (Ixora) என்பது வெட்சி பூ என்ற தமிழ் சொல்லுக்குப் பெயர். இது ரூபியாசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் செடி ஆகும். சிவப்பு அல்லது வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்களில் சிறிதளவு தேனுடன் கொண்ட பூக்களை உடைய சிறு தாவரம் அதன் பூ.
'மரங்களின் தீ பிழம்பு' என செல்லமாக அழைக்கப்படுகிறது . பெருவாரியான மக்களால் 'இட்லி பூ' எனவும் அழைக்கப்படும். இது குல்லை, செச்சை, செங்கொடுவேரி, சேதாரம் போன்ற பல தமிழ் சங்க கால பெயர்களால் அறியப்படுகிறது. இந்தி மொழியில் இதன் பெயர் 'ருக்மணி', பெங்கால் மொழியில் 'ரங்கன்' என்று அழைக்கப்படுகிறது.
உலகின் வெப்ப மண்டல நாடுகளில் பலவற்றில் காணப்படும் இவ்வினத்தில், 500 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. நல்ல சூரிய ஒளி இருந்தால் மட்டுமே பூக்கும் பூ இது. ஒரு பூங்கொத்தில் 60 க்கும் மேற்பட்ட பூக்கள் இருக்கும். சூரிநாம் நாட்டின் தேசிய மலர் இந்த இட்லிப்பூ தான். இதன் அழகிற்காக பல வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதனை வீட்டில் வளர்க்கும் போது அது வீட்டை சுற்றி இருக்கும் மாசுபட்ட காற்றை சுத்தம் செய்து நல்ல காற்றை சுவாசிக்க நமக்கு உதவுகிறது.
அந்த காலங்களில் மன்னர்கள் போருக்கு செல்லும்போது, இந்த பூவை சூடிக்கொண்டு செல்வார்களாம். இந்த பூவை வைத்து சென்றால் கட்டாயம் வெற்றி கிடைக்கும் என்றும் நம்பினார்களாம். அதனால்தான், இந்த பூவை 'வெற்றி பூ' என்றும் சொல்வார்கள். இந்த பூவை வீட்டில் வைத்து வளர்ப்பவர்களுக்கு, வெற்றி தானாக தேடி வரும். அத்துடன் வாசலில் இதனை வைத்து வளர்க்கும்போது மகாலட்சுமியே வாசம் செய்வதுபோல என்பதால் இதனை அதிர்ஷ்ட பூ என்கிறார்கள்.
இட்லி பூ எனும் வெட்சிப் பூ 12 வருடங்கள் பலன் தரும் செடி. தமிழகத்தில் திருச்சி பகுதியில் 500 ஏக்கரில் பயிராகும் பூ. திருச்சி மனச்சநல்லூர், மணி கண்டம், ஆண்டநல்லூர் பகுதியில் அதிகமாகக் விளைகிறது. இந்த பகுதியில் தினமும் 50-60 கிலோ பூக்கள் பறிக்கப்படுகின்றன. காலையிலும் மாலையிலும் பூக்கள் பறிக்கப்படுகின்றன. ஒரு செடி 1 முதல் 8 வருடங்கள் பலன் தருகிறது. இங்கு பறிக்கப்படும் பூக்களில் பெரும் பகுதி திருச்சி ரெங்கநாதர் மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்கிறது. மற்ற பூக்கள் விற்பனைக்கு செல்கின்றன.
அழகிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் வளர்க்கப்படும் இட்லிப்பூ பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதன் பூ, வேர், இலை என அனைத்தும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக சொரியாசிஸ், ஆஸ்துமா, நீரிழிவு, அல்சைமர், அல்சர், பசியின்மை, இரத்தத்தை சுத்தப்படுத்த என பல மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
சிறிதளவு வெட்சி பூ , நீர் (தேவையான அளவு), சிறிதளவு பனங்கற்கண்டு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்பு இதனை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவந்தால் காய்ச்சல், உடல் அசதி, சோர்வு ஆகியவை குணமாகும். சளியை கரைத்து வெளியேற்றும். ரத்தம் கலந்து சளி வெளியேறும் பிரச்னையை தீர்க்க கூடியது. இதற்கு காரணம் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி இம்பிளமென்ட்ரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
வெட்சி பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதை மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வெள்ளைப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை சரியாகும். ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் சாப்பிட புற்றுநோய் வராமல் தடுக்கும். வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாக இது விளங்குகிறது.
வெட்சி பூவை நீர் விடாமல் அரைத்து 300 கிராம் அளவு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் (அரை லிட்டர்) இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து தைல பதத்திற்கு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இந்த தைலத்தை சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மேல் பூச்சாக பூசி வந்தால் சரும நோய்கள் குணமாகும். எக்ஸிமா என்ற சரும பிரச்சனைக்கு இந்த தைலம் மிகச்சிறந்தது. சருமத்தில் ஏற்படும் அரிப்பு சரியாகும். தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகை போக்கி முடிக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கிறது.
வெட்சி பூ இலைகளை பசையாக்கி அடிபட்ட வீக்கம் உள்ள பகுதியில் பற்றுப் போட்டால் வீக்கம் வற்றிப்போகும். மூட்டு வலி மறையும், தசை சிதைவு, நரம்புகளில் சிதைவு, ரத்த நாளங்களில் ஏற்படும் சிதைவு ஆகியவற்றை சரிசெய்யும் அற்புத மருந்தாக இந்த பசை விளங்குகிறது. இட்லிப்பூ இலைகளை தண்ணீரில் போட்டு வைத்தால் தண்ணீர் குளிர்ச்சியாவதுடன் , தண்ணீரையும் சுத்தப்படுத்த உதவும் என்கிறார்கள்.