
நொச்சி தாவரம் என்பது மூன்று அல்லது ஐந்து கூட்டிலைகளை எதிரடுக்கில் பெற்ற சிறு மரம் ஆகும். தமிழகமெங்கும் நீர் வளம் உள்ள இடங்களில் இது தானே வளரும் இயல்புடையது. இதில் கருநொச்சி என்ற வகை மிகவும் அரிதாகக் காணப்படும். இதன் இலைகள் வெகுட்டல் மனம் உடையன.
நொச்சி இலை குடிநீர் பல்வேறு வகையான வலி, ஜுரங்களைக் கட்டுப்படுத்தும். குளிர், ஜுரம் ஆகியவற்றைத் தணிக்கும். நொச்சி இலை குடிநீர் காய்ச்சி அந்த நீரைக் கொண்டு குழந்தை பிறந்ததும் தாயை குளிக்க வைக்கலாம். அந்த வேது தண்ணிர் உடல் வலியைப் போக்கும்.
நொச்சி இலையை வேக வைத்து நீராவி பிடித்தால் வியர்வை உண்டாகி ஜுரம் விரைவில் தணியும். உடல் வலியும் போகும். நொச்சி இலையை உலர்த்தி தலையணை உறைக்குள் திணித்து அதனை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டால் தலைவலி, பீனிசம் ஆகியவை குணமாகும். இந்த இலையுடன் சுக்கு சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி விரைவில் நீங்கும்.
நொச்சி இலைச் சாற்றில் எண்ணெய் காய்ச்சி தலையில் தேய்த்து தலைக்குக் குளித்து வந்தால் கழுத்தில் ஏற்பட்டிருந்த நெறிக்கட்டு நாளடைவில் நீங்கும். நொச்சி இலையுடன் பாதி அளவு மிளகு சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு காலை, மாலை சாப்பிட்டு வர குளிர் ஜுரம், உடம்பு வலி, கை கால் பிடிப்பு, செரியாமை ஆகியவை தீரும்.
மண்ணீரல் வீக்கங்களுக்கு நொச்சி இலையை அரைத்து பற்று போடலாம். வீக்கம், கீழ்வாயு ஆகியவற்றுக்கு இந்த இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்க குணம் காணலாம்.
நொச்சிப் பூ: நொச்சிப் பூவை நன்றாக உலர்த்திப் பொடித்து அதனுடன் கற்கண்டு சேர்த்து தேனில் கலந்து கொடுத்து வர, இரத்த வாந்தி, பேதி ஆகியவை தீரும்.
நொச்சி வேர் பட்டை: நொச்சி வேர்ப்பட்டையை உலர்த்திப் பொடித்து சிறிதளவு தேனில் கலந்து சாப்பிட்டு வர, வாத பிடிப்பு நரம்பு வலி, வயிற்று வலி ஆகியவை குணமாகும்.
பசுமை சுற்றுச்சூழலுக்கு உகந்த நொச்சி மரங்கள் மனித சமூகத்துக்கு பல்வேறு மருத்துவ குணங்களையும் வாரி வழங்குகிறது.