
அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ உணவு தேவை. சில விலங்குகள் புல், இலை, காய் கனி போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளை உண்கின்றன. வேறு சில விலங்குகள் பிற மிருகங்களை அடித்துக் கொன்று தனக்கு உணவாக்கிக் கொள்கின்றன. இவை அனைத்திற்கும் மேலாக, வேறு சில உயிரினங்கள் தாம் உயிர் வாழ பிறரின் இரத்தத்தை குடித்தே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இரத்தத்திலுள்ள புரோட்டீன் மற்றும் இரும்புச் சத்து போன்றவையே அவற்றுக்குப் போதுமானதாக உள்ளன. இரத்த உறிஞ்சி என்றாலே நம் ஞாபகத்திற்கு வருபவை கொசுவும் மூட்டைப் பூச்சியும்தான். இவற்றைத் தவிர, வேறு ஒரு வகையான சிறு கூட்டம் உள்ளது. இரத்தம் உறிஞ்சுவதற்கு சாதகமாக, கூர்மையான பற்கள், உறிஞ்சு குழல் (sucker) மற்றும் ஹீட் சென்சார் போன்ற பிரத்யேக அமைப்புகளும் இவற்றின் உடல்களில் உள்ளன. அப்படிப்பட்ட ஐந்து உயிரினங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. வேம்பையர் பேட் (Vampire Bat): உருவத்தில் சிறியதாக, சுறுசுறுப்பாக இரவில் சுற்றித் திரியும் வௌவால் இது. மத்திய மற்றும் சவுத் அமெரிக்கப் பகுதிகளில் இவற்றைக் காணலாம். மற்ற பறவை அல்லது மிருகத்தின் உடலில் ஒரு சிறிய இடத்தைக் கீறி அதன் வழியாக மெதுவாக இரத்தத்தை உறிஞ்சிவிடும். அதன் வாயிலிருந்து வரும் எச்சில், இரத்தம் உறைந்து விடாமல் பார்த்துக்கொள்ள உதவி புரியும்.
2. ஸீ லேம்பிரே (Sea Lamprey): மீன் போன்ற இந்த விலங்கிற்கு தாடைகள் கிடையாது. இதற்கு சிறிய பற்களுடன் கூடிய வட்ட வடிவ வாய் உண்டு. இது மற்ற மீன்கள் மீது ஒட்டுண்ணி போல் சாய்ந்து கொண்டு, இரத்தத்தையும், மற்ற திரவங்களையும் உறிஞ்சி எடுத்துக்கொள்ளும். இரத்தத்தை இழக்கும் மீனைக் கொன்று விடாமல் காயப்படுத்தி விட்டுவிடும். ஏரி, நதி, கடல் என எல்லா நீர்நிலைகளிலும் இதைக் காணலாம்.
3. வேம்பையர் கிரௌண்ட் ஃபின்ச் (Vampire Ground Finch): களப்பாகோஸ் (Galapagos) என்னும் தீவுகளில் வசித்து வரும் சிறிய பறவை இது. பல நேரங்களில் இது தாவர விதைகள் மற்றும் சிறு பூச்சிகளைப் பிடித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும். கோடை காலங்களில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்போது, மற்ற கடற் பறவைகளை அலகினால் கொத்தி அவற்றின் இரத்தத்தை உறிஞ்சி பசியாற்றிக் கொள்ளும். ஆரம்ப காலங்களில் மற்ற பறவைகளின் இறகுகளுக்குள் வாழும் உண்ணி போன்ற பாராசைட்களை கொத்தித் தின்று கொண்டிருந்த இந்தச் சிறு பறவைகள், நாளடைவில் இரத்தம் உறிஞ்சும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டன எனவும் கூறப்படுகிறது.
4. லீச் (Leech): தமிழில் அட்டை எனப்படும் இந்த விலங்கு, இரத்தம் உறிஞ்சுவதில் திறமைசாலி. தெளிந்த நீரோடைகளில் வாழ்ந்து வரும் இந்த அட்டை மனிதர்கள் மற்றும் பிற விலங்குகள் மீது வலுவாக ஒட்டிக்கொண்டு, தன் உறிஞ்சி (Sucker) மூலம் தேவையான அளவு இரத்தத்தை உறிஞ்சிய பின்னே கீழே விழும். இதன் வாயிலிருந்து உற்பதியாகி வரும் ஒரு வகை இரசாயன திரவம், இரத்தம் கெட்டியாகி விடாமல் பாதுகாத்து வாய்க்குள் செல்ல உதவும்.
சில வகை லீச்கள் தற்போதும் மருத்துவத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அறுவை சிகிச்சைக்குப் பின் இரத்த ஓட்டம் சீராக இம்மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
5. கன்டிரு ஃபிஷ் (Candiru Fish): இந்த சிறிய வகை கேட்ஃபிஷ் அமேசான் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன. இது பெரிய சைஸ் மீன்களின் செவுள்களின் (Gills) உட்புகுந்து இரத்த நாளங்களின் வழியே தேவையான இரத்தத்தை உறிஞ்சி குடித்துவிடும். இச்சிறிய வகை மீனைப் பற்றி பல வகையான அதிர்ச்சி தரும் கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில் பல உண்மையல்ல, கட்டுக்கதையென்று நம்பப்படுகிறது. நிஜத்தில் கடல் வாழ் உயிரினங்களில் இதுவும் ஒரு அங்கம், அவ்வளவுதான்!