
தென் அமெரிக்காவை சேர்ந்த ஒட்டக வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு லாமா (Llama). வீட்டு விலங்காக வளர்க்கப்படும் லாமா, ஆண்டீய மலைத்தொடரை ஒட்டி வாழும் இன்காக்கள் முதலான இனக்குழுக்களால் சுமையேற்றிச் செல்லப் பயன்படுத்தப்படுகிறது. இவ்விலங்கு முடி மற்றும் இறைச்சித் தேவைகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. ஸ்பானியர்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்பு, ஆண்டியன் கலாசாரங்கள், பொருளாதாரங்கள் மற்றும் மதச் சடங்குகளில் லாமாக்கள் முக்கியப் பங்கு வகித்தன. தற்போது, உலகம் முழுவதும் 3 மில்லியன் லாமாக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தென் அமெரிக்காவில் உள்ளன.
லாமா, ‘கிளாமா’ என்ற அறிவியல் பெயர் கொண்ட இவ்விலங்கு, ஒரு வளர்ப்பு விலங்கு. நீண்ட மெல்லிய கழுத்து கொண்ட இதன் உயரம் 1.70 முதல் 1.80 மீட்டர் வரை மாறுபடும். இதன் எடையானது, பாலினம் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து 130 முதல் 205 கிலோ வரை இருக்கும்.
இவ்விலங்கின் ரோமங்கள் அடர்த்தியானவை மற்றும் பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்து பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். லாமாக்கள் மந்தைகளாகக் கூடி வாழ்வன. பொதுவாக, இவற்றின் மயிரிழையானது மென்மையாகவும் லனோனின் இல்லாமலும் இருக்கும். இவை புத்திசாலி விலங்குகளாகும். பல வேலைகளைச் சில முறை சொல்லிக் கொடுத்தவுடன் கற்றுக்கொண்டு செய்யும். பொதி சுமக்கும் லாமாக்கள் தங்கள் உடல் எடையில் 20 முதல் 30 சதவிகிதம் வரை தூக்கிக் கொண்டு பல மைல்கள் நடக்கவல்லன.
லாமாக்கள் தாவரங்களையே முதன்மை உணவாக உட்கொள்கின்றன. முன்பெல்லாம் புதர்கள் மற்றும் மூலிகைகள் என்று சத்துகள் மிகுந்த உணவை விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. தற்போது, கிடைக்கக்கூடிய தாவர உணவுகளைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை மற்ற விலங்குகளைப் போல அடிக்கடி தண்ணீரை உட்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவை உண்ணும் உணவின் மூலம் தங்களுக்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுக் கொள்கின்றன. இருப்பினும், லாமாக்கள் நீர் நிரம்பிய குளம், ஆறுகளை அடையும்போது, ஒரு நேரத்தில் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கின்றன.
லாமாக்கள் ஒப்பீட்டளவில் விரைவாகப் பாலியல் முதிர்ச்சியை அடைகின்றன. பெண்கள் வாழ்க்கையின் முதல் வருடத்திலிருந்து இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கலாம். அதேவேளை, ஆண்கள் 3 வயது வரை காத்திருக்க வேண்டும். கோடையின் பிற்பகுதிக்கும், இலையுதிர் காலத்தின் தொடக்கத்திற்கும் இடையில் நடைபெறும் இனச்சேர்க்கை காலத்தில், ஒவ்வொரு ஆண் லாமாவும், தனது குழுவில் உள்ள பல பெண் லாமாக்களுடன் பாலுறவு கொள்கின்றன.
லாமாக்கள் மற்ற நான்கு கால் விலங்குகளைப் போலல்லாமல், ஏறக்குறைய 350 நாட்கள் வரை கருவுற்றிருக்கின்றன. மேலும், 10 கிலோ எடையுள்ள ஒரு கன்றுக் குட்டியைப் ஈணுகின்றன. லாமா குட்டிகளுக்கு 4 மாதங்களுக்குத் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. மற்ற விலங்குகளைப் போலல்லாமல், தாய் லாமா தனது நாக்கு மிகவும் குறுகியதாக இருப்பதால், பிறக்கும்போது, தனது குழந்தைகளை நக்குவதில்லை. மாறாக, ஒலிகள் மற்றும் அரவணைப்புகளை வெளியிடுகிறது. அதன் மூலம் குட்டி லாமா அதன் பாதுகாப்பை உணர்ந்து கொள்கிறது.
குட்டிகள் போதுமான அளவு வளர்ந்தவுடன், அவை சுதந்திரமாகி, தாங்களாகவே உணவைத் தேடி மேய்ச்சலுக்குச் செல்கின்றன. லாமாக்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை வாழலாம். நல்ல சூழ்நிலையில் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. இந்த லாமாக்கள் அமெரிக்கா தவிர, கனடா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்க அளவில் இறைச்சி மற்றும் கம்பளி தயாரிப்புக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன.