
சர்வ சாதாரணமாக நம் வீட்டைச் சுற்றிலும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய வகை விலங்கு அணில். ராமர் பாலம் கட்டிய காலத்தில் அவருக்கு சிறிய அளவில் உதவி புரிந்தது முதல் இன்று விதை பரவல் மூலம் பெரிய மரங்கள் வளரக் காரணமாக இருப்பது வரை பல வகையில் உதவி புரியக்கூடியது அணில். அணில் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
1. அணில்கள் குளிர் காலத்திற்குத் தேவைப்படும் தாவர வகைக் கொட்டைகள் போன்ற உணவுகளை தரையில் குழி தோண்டி மறைத்து வைக்கும் குணமுடையது. பல நேரங்களில் அது மறைத்து வைத்த இடத்தை மறந்து விடுவதால் அந்த விதை முளைத்து மரமாக வளர்ந்துவிடும். அணிலின் உதவியால் இவ்வாறு செழித்தோங்கி வளர்ந்து வரும் மரங்கள் பூமிக்கு ஒரு வரப்பிரசாதமாகிவிடும்.
2. அணிலின் கூர்மையான முன் பக்கத்துப் பற்கள் இடைவிடாது வளர்ந்துகொண்டே இருக்கும். அவற்றை தனக்குத் தேவையான அளவில் வைத்துப் பராமரிக்க, அணில் எந்த நேரமும் மரப்பட்டை, கிளை, ஒயர், பிளாஸ்டிக் பைப் போன்ற எதையாவது கடித்துக் கொரித்துக்கொண்டே இருக்கும். இப்பழக்கத்தை அதன் குறும்பு என நாம் நினைப்பது தவறு.
3. மரத்தின் மீது கூடு கட்டி மரங்களிலேயே சுற்றித் திரியும் அணில்களையே நாம் பார்த்திருப்போம். இதைத் தவிர்த்து, தரைக்கடியில் குழிகளைத் தோண்டி அதற்குள் வாழ்ந்து வரும் ஒரு கூட்டமும் இருக்கிறது. குழிக்குள் பெட் ரூம், பேபி ரூம், உணவு சேமிப்பு அறை என பல பிரிவுகளும் உண்டு. இந்த வகை அணில்கள் மரத்தில் ஏறி சுற்றித் திரிவதை விட, தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளித்து வாழ்ந்து வருபவை.
4. அடர்ந்த முடிகளுடைய அணிலின் அழகிய வால் அதற்குப் பல வகையில் உதவி புரியும் உபகரணமாக உள்ளது. குதித்தோடும்போது உடலை சம நிலையில் நிறுத்தவும், உடலுக்குள்ளிருந்தே உருவாக்கப்பட்ட கதகதப்பான போர்வை போலவும், மழை நேரங்களில் சிறிய வகை குடை போல செயல்படவும் வால் உதவி புரிகிறது.
5. அணில் புத்திசாலித்தனமும் தந்திரமும் உடைய விலங்கு என்றும் கூறலாம். அது ஏதாவதொரு தாவரக் கொட்டையை குழிக்குள் பதுக்கி வைக்க முயலும்போது யாராவது அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் கொட்டையைப் புதைத்து விட்டது போல் பாசாங்கு செய்யும். ஆனால், நிஜத்தில் அதை வேறொரு இடத்தில் கொண்டு போய் பதுக்கிவிடும்.
6. பறக்கும் அணில் எனக் கூறப்படும் ஒரு வகை அணில் நிஜத்தில் பறவையைப் போல் பறப்பதில்லை. அதன் முன்னங்கால் மற்றும் பின்னங்காலுக்கு இடையில் தோலினாலான ஒரு மடல் போன்ற அமைப்பு உண்டு. அணில் குதிக்கும்போது இந்த மடல் போன்ற அமைப்பு பாராசூட் போல விரிந்து அதை ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு காற்றில் சறுக்கிக் கொண்டு சென்றடைய உதவுகிறது. சில நேரம் 90 மீட்டர் தூரத்தைக் கூட இவ்விதத்தில் அணில் கடந்துவிடும்.
7. அணிலின் கணுக்கால்கள் சுழல்வது போன்ற அமைப்பு கொண்டுள்ளதால், அவற்றின் உதவியால் மரப் பட்டைகளைப் பற்றிக் கொண்டு மரங்களின் எந்த திசையிலும் உறுதியுடன் ஏறவும் இறங்கவும் முடியும்.
8. அணில்கள் சிறப்பான கற்றல் திறனும் கொண்டவை. இதன் காரணமாகவே மனிதக் கூட்டம் நிறைந்த நகரங்களிலும், கூடு கட்டத் தகுந்த இடத்தில் கூடு கட்டியும், பறவைகளுக்கு வைக்கும் உணவை தானும் பகிர்ந்து உண்டும், தனக்கான வாழ்வை சிறப்பாக அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
9. அபாயத்தை உணரும்போது எச்சரிக்கை குரல் எழுப்பியும் வாலசைவு மற்றும் உடல் மொழி மூலம் செய்தியை மற்ற அணில்களுக்கு தெரிவித்தும் தனது இனத்தைக் காக்கும் குணம் கொண்டது அணில்.
10. குழி அணில்கள் குளிர் காலத்தில், குளிர் கால உறக்கம் (Hybernation) கொள்வது வழக்கம். மரத்தில் வாழ்பவை தங்கள் கூட்டிலேயே தங்கி, பதுக்கி வைத்த உணவை உட்கொண்டு காலத்தை கழிக்கும்.