
இரட்டைக் குழந்தைகளை கவனித்து பார்த்தால் அவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரி உடை, அலங்காரம், விளையாட்டுப் பொருட்கள் என்று வாங்கி கொடுப்பார்கள். இதனால் அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கிறது என்பதை இப்பதிவில் காண்போம்.
எந்த இரட்டை குழந்தை பிறந்தாலும், அவர்களுக்கு ஒரே மாதிரி பெயர் வைப்பது, ஒரே மாதிரி உடை அணிவித்து ஷூ வரையிலும் ஒரே மாதிரி போட்டு விடுவது, ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில், ஒரே ஆசிரியரிடம் படிக்க வேண்டும். இருவரும் ஒரே நண்பர்களுடன் பழக அனுமதிப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக இருவரையும் ஒரே மாதிரி இயல்புடன் வளர்ப்பதற்குத்தான் பெற்றோர்கள் முனைகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் அவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் கூட உற்றார், உறவினர் ட்வின்ஸ் என்று கூறுவதை பார்க்கலாம். மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் போதும் ட்வின்ஸ் என்றே அறிமுகப் படுத்துகிறார்கள்.
இதைக் கவனித்து வந்த இரண்டு பெண் குழந்தைகளும் வளர்ந்த உடன் அவர்களின் பெற்றோர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். ஏன் நாங்கள் இரட்டையர்களே ஆனாலும், வித்தியாசமான எண்ணம், விருப்பு, வெறுப்பு உடையவர்களாக இருக்க கூடாதா? எங்களுக்கென்று தனித்துவம் என்று எதுவும் இருக்காதா? ஒரே மாதிரிதான் செயல்பட வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று என்ன அவசியம் எங்களுக்கு? என்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க முற்பட்ட பொழுதுதான் பெற்றோர்கள் விழித்துக் கொண்டார்கள்.
பிறகு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடியான உடைகளை அவர்களையே அழைத்துச்சென்று வாங்கித் தருவது, இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பிடித்தமான புத்தகங்கள், ஒருவருக்கு வரைவது மற்றும் ஒருவருக்கு பரதநாட்டியம் ஆடுவதில் நாட்டம் என்று கண்டறிந்து, அதற்கான ஆசிரியர்களிடம் அழைத்துச் சென்று பயிற்சி கொடுக்க ஆரம்பித்தனர்.
ஒரு பெண் ஆடுவதிலும் படம் வரைவதிலும் சிறந்தவளாக, இன்னொரு பெண் ஆங்கிலத்தில் கவிதை புனைவதில் சிறந்தவனாக தேர்ச்சி பெற்று இருவரும் வெவ்வேறு மாநிலங்களில் சட்டப்படிப்பு, பேஷன் டெக்னாலஜி என்று படித்து வருகிறார்கள்.
இதனால் பெற்றோர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அவரவரின் வேலைகளை, தேவைகளை அவரவர்களே நிறைவேற்றிக் கொள்கிறார்கள். எந்த பார்ட்டி, ஃபங்க்ஷனுக்கு செல்வதாக இருந்தாலும் வித்தியாசமான முறையில் உடை அணிந்து அவர்கள் விருப்பம்போல் நடந்து கொள்கிறார்கள்.
இப்படி எங்களின் தனித்தன்மையுடன் இயல்பாக செயல்படுவதால் மனதிற்கு தாங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடிந்த நிம்மதியும், பெரு மகிழ்ச்சியும் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். இன்னும் கூறப்போனால் சிறுவயதில் எங்கள் இருவரையும் பார்த்து ஒருவர் அம்மா மாதிரியே இருக்கிறார். ஒருவர் அப்பா மாதிரியே இருக்கிறாள் என்று பிரித்து பேசுவார்கள்.
அதோட விட்டுவிடாமல் உனக்கு அம்மாவை பிடிக்குமா, அப்பாவை பிடிக்குமா? என்று இருவரிடமும் மாற்றி மாற்றி கேள்வி கேட்பார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லி வருவதற்குள் எங்களுக்கும் போதும் போதும் என்று ஆகிவிடும்.
உலகத்திலே இரட்டை குழந்தைகள் என்றால் மிகவும் அதிசயம் போன்ற ஒரு நிகழ்வாக நினைத்து நடத்துவதுதான்.
நாங்கள் பள்ளியில் படித்து வரும் பொழுது ஒருவர் அதிகமாக மதிப்பெண் வாங்குவோம். அடுத்தவர் குறைவாக வாங்குவோம். அதை என் பெற்றோர்கள் உயர்வு தாழ்வு என்று வித்தியாசப்படுத்தி பார்க்க மாட்டார்கள். ஒப்பிட்டுப் பார்ப்பது என்பதே கடுகளவும் இல்லாது இருந்ததால், எங்கள் இஷ்டம்போல் படித்து நல்ல மதிப்பெண் பெற்று எங்களின் விருப்பம் போலவே எண்ணியதை படிக்கவும் வழி வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்காக நாங்கள் எங்கள் பெற்றோருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இரண்டாவது பிள்ளை குடும்பத்தில் தோன்றியதும் சகோதரர் போட்டியும் பிறந்து விடுவதை அறிவோம். பெற்றோரின் அன்பு நமக்கு பூரணமாக கிடைக்காதோ என்று எண்ணி பெற்றோரின் கவனத்தை தன் பக்கம் திருப்ப ஒருவரையடித்தல், பேசுதல், பொருளை எடுத்து வைத்துக்கொள்ளுதல் போன்ற நிகழ்வுகள் மூத்த குழந்தையிடம் ஆரம்பிப்பது உண்டு.
இரட்டை குழந்தைகளிடம் அது போன்ற பிரச்னைகள் ஏற்படுவது இல்லை என்றாலும், மேலே கூறிய விருப்பு, வெறுப்புகள் அதிகமாக இருப்பதை காணமுடிகிறது.
இதையெல்லாம் நன்றாக அவர்களுடன் ஒட்டி ,உறவாடி பழகும் போதுதான் புரிந்துகொள்ள முடிகிறது என்பது உண்மை. ஆதலால் இரட்டைக் குழந்தைகளுடன் பேசும் பொழுது நாமும் நாகரிகம் அறிந்து பேசவேண்டும் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.