
உங்கள் வீட்டை நீங்கள் எவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருந்தாலும், கரப்பான் பூச்சி, எறும்பு, பல்லி போன்ற ஊர்வன இனத்தைச் சேர்ந்த சில வில்லத்தனமான எதிரிகள், கிடைக்கும் சிறு சிறு இடைவெளிகளுள் புகுந்து, வீட்டின் அதிகம் வெளிச்சம் இல்லாத பகுதிகளை ஆக்கிரமித்துக் கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதைத் தடுப்பதற்கு நாம் விழிப்புணர்வுடன் கையாள வேண்டிய 5 வகையான செயல்முறைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
உங்கள் சமையல் வேலைகள் அனைத்தும் முடிந்த பின், பயன்படுத்திய பாத்திரங்களை அங்குள்ள சிங்க்கில் எடுத்துப் போடுவது வழக்கம். கடாய் உள்ளிட்ட அந்தப் பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் எண்ணெய்ப் பிசுக்கு போன்றவை கரப்பான் பூச்சி, எறும்பு, ஃபுரூட் ஃபிளை போன்ற பூச்சிகளை சுலபமாகக் கவர்ந்திழுக்கும். அங்குள்ள ஈரப்பதமான
சூழலும் அவைகளுக்குப் பிடிக்கும். எனவே படுக்கச்செல்லும் முன் தினமும் பாத்திரங்களை கழுவி சுத்தம். செய்து, சிங்க்கையும் ஈரமின்றி துடைத்து வைப்பது அவசியம்.
உங்கள் செல்லப் பிராணிகளுக்காக வாங்கி வைத்திருக்கும் ப்ரோட்டீன் சத்து நிறைந்த உணவு களிலிருந்து வரும் ஒரு வகையான வாசனை, எலி மற்றும் பல வகையான பூச்சிகளை கவர்ந்திழுக்கும் குணம் கொண்டது. செல்லப் பிராணிகளுக்கு உணவளிப்பதை வீட்டிற்கு வெளியே வைத்து, அது உண்டு முடித்ததும் அதன் தட்டையும், சாப்பிட்ட இடத்தையும் உடனடியாக நன்கு சுத்தப்படுத்துவது அவசியம். பெட் அனிமல் உணவை சேமித்து வைக்கும் டப்பாவை இறுக மூடி வைப்பது எறும்பு போன்ற பல வகைப்பூச்சிகளின் வருகையைத் தடுத்து நிறுத்த உதவும்.
சமையல் அறையில் சமைத்து முடிக்கும்போது, அடுப்பு மற்றும் மேடை மீதும் சிந்தி சிதறிய உணவுப்பொருட்கள்
ஆங்காங்கே பரவிக் கிடக்கும். அது மட்டுமின்றி, டைனிங் டேபிளில் அமர்ந்து உணவு உட்கொள்ளும்போது மற்றும் சோபாவில் உட்கார்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிடும்போதும் அவை கண்டிப்பாக மேலும் கீழும் சிதறி விழுவதுண்டு. இதை ஸ்மெல் பண்ணிவிட்டு சாரை கட்டி வரும் எறும்புக்கூட்டம், உணவுப் பொருட்களை இழுத்துக்கொண்டு, சென்று மறையாமல், சோபாவின் இடுக்குகளுக்குள்ளேயே குடியிருந்து குடும்பம் நடத்த ஆரம்பித்துவிடும்.
நீங்கள் உங்கள் வீட்டின் பின்புற வராண்டாவில் காலி அட்டை டப்பா, பெயிண்ட் பாக்ஸ், தினசரி பத்திரிக்கைகள் போன்றவற்றை குவித்து வைத்திருப்பது சகஜம். புழக்கம் இல்லாத, சுத்தப்படுத்தாத, இருட்டான இடங்களில் குவிந்து கிடக்கும் வீணான சாமான்களையே சிலந்தி, சில்வர் ஃபிஷ், கரையான், கரப்பான் பூச்சி போன்றவை தேடிச்சென்று கூடுகட்டவும் குடியிருக்கவும் பயன்படுத்திக்கொள்ளும். எனவே, இந்த மாதிரியான சாமான்களை குவித்து வைக்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடத்தையும் லைசால் போன்ற சுத்திகரிப்பான் சேர்த்த நீரால் துடைத்துவிடுவது நலம்.
உங்கள் வீட்டு பூந்தொட்டிகளுக்கு அளவுக்கு அதிகமாக நீர் விடுவதும் ஆபத்தை விளைவிக்கும். குளிர்ச்சியான சூழல், பூஞ்சை கொசு, கொசு போன்ற பூச்சிகளின் உற்பத்திக்கு வழி வகுக்கும். பூந் தொட்டிகளை முறையாகப் பராமரிப்பதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியை தடுத்து நிறுத்தலாம்.
கதவிடுக்கு மற்றும் சுவரிலுள்ள வெடிப்பு போன்ற பூச்சிகளின் நுழைவிடங்களை அடைப்பது, பூச்சிகள் அதிகம் நடமாடும் இடங்களில் போரிக் ஆசிட் கலந்த சர்க்கரையை தூவி வைத்தல், டைனிங் மற்றும் சோபா உள்ள இடங்களில் வாக்யூம் போட்டு உணவுப் பொருட்களை அகற்றுதல், அடுப்பங்கரையை அசுத்தமின்றி அழகுற வைத்துப் பராமரித்தல் போன்ற செயல்கள் உங்கள் வீட்டை பூச்சிகளற்ற பூ வனமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.