
சில குழந்தைகளைப் பார்க்கும்பொழுதே அவர்களின் குறைபாடுகளை கண்டுபிடித்து விட முடியும். ஆனாலும், அவர்களைக் கையாள்வது சற்று கடினமாக இருக்கும். அதனைப் பற்றிய விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.
சில குழந்தைகள் நேருக்கு நேராக நம் கண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். எவ்வளவு பேசினாலும் பதில் சொல்ல மாட்டார்கள். பேச்சும் தெளிவாக வராது. அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதில்தான் குறியாக இருப்பார்கள். ஏதாவது ஒரு விஷயம் பிடித்திருந்தால் அதையே எப்பொழுதும் செய்ய விரும்புவார்கள். சில நேரங்களில் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வார்கள். பாத்திரம், பண்டங்களை எடுத்துப் போட்டு உடைப்பது, கண்ணாடிப் பொருட்களை எடுத்து வீசுவது, எந்த இடத்திலும் படுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் பண்ணி அழுவது, தூங்கவும் சில நேரங்களில் தாமதப்படுத்துவது என்று சிரமப்படுத்துவார்கள்.
இதனால் பள்ளியிலும் ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்க்க சொல்லி அறிவுறுத்துவார்கள். அதற்கான ஸ்பெஷல் ஆசிரியர்களை நியமித்து தனி வகுப்புகள் நடத்துவார்கள். இதில் பிரச்னை என்னவென்றால் பெற்றோர்களும் மனம் தளர்ந்துப் போவதுதான். நம் குழந்தை மற்றவர்களோடு சேர்ந்து படிக்க முடியாமல், இதுபோல் ஓர் இடத்தில் படிக்கவேண்டி இருக்கிறதே என்று நொந்து போகின்றவர்களும் உண்டு.
முதலில் அவர்கள் மனதை தைரியமாக வைத்துக்கொண்டு, குழந்தையை எப்படி எல்லாம் கையாள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். அதை அந்த ஆசிரியர்களே நிதானமாக சொல்லியும் கொடுக்கிறார்கள்.
கல்வி கற்பதில்தான் அவர்களுக்கு சிரமங்கள் அதிகம் ஏற்படுகிறது. வாசிக்கவும், எழுதவும் சங்கடப்படுவார்கள். எனக்குத் தெரிந்த ஒரு பையன் எழுதுவதில் பிரச்னை வைப்பது இல்லை. ஆனால், பேசவும், படிக்கவும் முடியாமல் சிரமப்படுவான். வீட்டில் நன்றாகப் படித்து, சொல்வதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாமல், பரீட்சையில் குறிப்பாக நேரத்திற்குள் எழுத முடியாமல் அவற்றை விட்டு விட்டு வருவது உண்டு. அவர்கள் சொல்வது ஒன்றாக இருந்தால், இவன் செய்வது வேறாக இருக்கும்.
திறமைகள், ஆற்றல்கள் சீராக இல்லை என்றாலும், எழுதுவதில் ஒருவிதமான திருத்தம் இருக்கும். அது வெளிப்படையாக நன்றாகத் தெரியும். அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான். எந்தக் குழந்தைகளுடனும், சக மாணவர்களுடனும் ஒத்துப்போகாமல் ஏதாவது ஒரு சச்சரவு ஏற்பட்ட வண்ணம் இருக்கும். இதனால் தனிமையை நாடுவார்கள். கவனங்கள் வேறு எதிலாவது திசை திரும்பிவிடும். ஒரு குழப்பமான நிலையை உணர்ந்து, எதையும் சரியாக செய்ய முடியாமல் தவிப்பார்கள்.
இதை உணர்ந்த பெற்றோர்கள் அவர்களுக்கு எந்தப் பாடம் அதிகமாகப் பிடிக்கிறதோ அதை அதிகமாகப் படிப்பதை முதலில் உற்சாகப்படுத்தி, பின்னர் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒவ்வொரு பாடமாக சிறிதளவு படிப்பதற்கு ஊக்கப்படுத்தினார்கள். அதேபோல், வீட்டிற்கு வந்துபோகும் அனைவருக்கும் வணக்கம் சொல்வது, கண்ணை நேராக வைத்துப் பார்த்து பேசுவது, போகும்பொழுது கையசைத்து வாயால் டாட்டா சொல்ல வைப்பது, அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் இடத்தில் இவனையும் அமர வைத்து அதைக் கேட்குமாறு செய்வது என்று சில மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்தனர். இப்பொழுது அவர்கள் வீட்டிற்கு நாம் சென்றால் நம்மை வரவேற்று வழியனுப்பி வைக்கிறான்.
அவனுக்குப் பிடித்த இடத்தைத் தேர்ந்தெடுத்து அவன் எந்த இடத்தை சொல்கிறானோ அந்த இடத்தில் அவனை அமர வைத்துப் படிக்க வைக்கிறார்கள். இதனால் கவனம் சிதறாமல் இருப்பது நடக்கிறது. அவனுடைய சக தோழர்களுடன் முன்பெல்லாம் சேர்ந்து விளையாட மாட்டான். இப்பொழுது சிறிது நேரம் விளையாட ஆரம்பிக்கிறான். சில பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதால் பய உணர்வு குறைந்து போயிருக்கிறது. இவை அனைத்தும் பயிற்சியாளர்கள் கொடுத்த ஊக்குவிப்பால் விளைந்த நன்மைகள்.
மாபெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் நாவன்மை உடையவரான வின்ஸ்டன் சர்ச்சில், உலகில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படும் மைக்கேல் பிலிப்ஸ் ஆகியோர் ஆட்டிசம் தாக்கத்திற்கு உள்ளானவர்கள்தான். அவர்கள் படைத்த உலக சரித்திரத்தை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். ஆட்டிசம் என்பது ஒரு சிறு குறைபாடு. அதை பெற்றோர் முறியடித்து குழந்தைகளை சாதனை படைக்க வைக்கலாம் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
ஆதலால் இதுபோல் குறைபாடு உள்ள குழந்தைகளை பெற்றோர் அதிகமான மனப்பயிற்சியும், நிதானமும், பொறுமையும் கொண்டு அந்தக் குழந்தைகளை கையாள வேண்டியது அவசியம். அப்படியே கையாண்டும் வருகிறார்கள். அந்த, ‘முயற்சி நன்றாகத் திருவினை ஆக்கும்’ என்பதே நல்ல அணுகுமுறைதான்.