பேரிடரின் பின்னணி என்ன?

Disaster
Disaster
Published on

நாம் எந்த அளவுக்கு நம் சுற்றுச் சூழலை அலட்சியப் படுத்தியிருக்கிறோம்; ஆணவத்துடன் புறக்கணித்திருக்கிறோம், மனிதாபிமானமற்ற அரக்கத்தனத்துடன் கையாண்டிருக்கிறோம் என்பதை சென்ற வருட பெருமழை நமக்கு, மிகுந்த வலியுடன் உணர்த்தியிருக்கிறது. 

பொதுநல உணர்வு குறைந்தபட்ச அளவில்கூட நம்மிடையே இல்லாததை இயற்கை நமக்கே சுட்டிக் காட்டி, மிகுந்த இழப்புக்குரிய பாடம் கற்பித்திருக்கிறது.  

‘தண்ணீரில்லை, தண்ணீரில்லை,’ என்று பதறி, பரிதவித்த நமக்காக குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்காவது நம் தாகத்தையும், பிற நீர்த் தேவைகளையும் பூர்த்தி செய்யுமளவுக்கு அப்போது கொட்டித் தீர்த்தது, மழை. ஆனால் இந்த மழைநீரை நம்மால் கணிசமான அளவாவது சேமிக்க முடிந்திருக்கிறதா? பெருமளவில் கடலுக்குதானே தாரை வார்த்திருக்கிறோம்.

பத்துப் பன்னிரண்டு வருடங்களாக சரியான அளவில் மழை பொழியவில்லை என்பதால் சில ஏரிகளும், குளங்களும் வறண்டுதான் போய்விட்டன. ஆனால், அந்த வறட்சி நிரந்தரமானது என்று தவறாகக் கணித்து அவற்றினால் நீர்ப்பயன் ஏதுமில்லை என்று அகம்பாவத்துடன், அந்தப் பகுதிகளில் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டுவிட்டோமே, இப்போது மழை நீர் அவற்றை நிரப்பி, அவற்றில் குடியேறியிருக்கும் நம்மையும் மூழ்கடித்திருக்கிறதே, இந்த அவலத்துக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்? இயற்கையின் போக்கை அனுமானிக்க இயலாத வகையில் காற்றையும், ஆகாயத்தையும் மாசுபடுத்தியதன் விளைவாகத்தான், அந்த மாசுகளால் அமுக்கிவைக்கப்பட்ட இயற்கை பீறிட்டுக் கிளம்பி நம்மைப் பழிவாங்கியிருக்கிறது! 

ஒரு கட்டத்தில் ஞானோதயம் பிறந்து, மழைநீர் வடிகால்களை அமைத்து நீரைச் சேமிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு சேமிக்கப்படும் நீர் நமக்கு பூமிக்கடியிலான நீர் ஆதாரத்தை அதிகரிக்கவும், பூமிக்கு மேலே வறட்சி தாக்கப்படும் பட்சத்தில் இந்த நீர் ஆதாரத்திலிருந்து நிவாரணம் பெறவும் இயற்கையுடன் நாம் நட்பாகக் கைகோத்த திட்டம் அது. ஆனால் அந்த வடிகால்களை முறையாக நாம் பராமரித்தோமா? சாலைகளில் பெருகும் மழை நீர் ஓடிவந்து குதூகலமாக பூமிக்கடியிலுள்ள வடிகால்வாய்களில் போய்ச் சேருவதற்கு நாம் அனுமதித்தோமா?

அந்த வாய்களை எல்லா குப்பைகளையும் போட்டு அடைத்து விட்டோம்; நீர் உள்ளே புக வழியில்லாமல் செய்துவிட்டோம். வழி கிடைக்காமல் திணறும் மழை நீர், சாலையிலேயே குளமாகத் தேங்கி நின்றுவிட்டது; திருவிழாவில் காணாமல் போன குழந்தைபோல பேதலித்து விழித்துக் கொண்டிருந்தது! குப்பைகள் போடவென்று சென்னை மாநகராட்சி அனேகமாக ஒவ்வொரு தெருவிலும் குப்பைத் தொட்டிகளை நிறுவியிருக்கிறது. அங்குபோய், கையிலிருக்கும் குப்பைகளைப் போட சோம்பல்பட்டுக்கொண்டு, போகிற வழியில், இந்தக் கால்வாய் வாய்க்குள் போட்டுவிட்டுக் கையைத் தட்டிக்கொண்டு போய்விடுகிறோம். 

இதையும் படியுங்கள்:
சூறாவளி தாக்கமும் அதன் விளைவுகளும்!
Disaster

இந்த அவலம் ஒரு பக்கம் என்றால், சில குடியிருப்புகளில் அவர்களுக்கான கழிவுநீர்ப் பாதையை இந்த மழைநீர் கால்வாயுடன் இணைத்திருப்பது மிகவும் கொடுமை! நல்லிதயங்களை மேலும் ரணமாக்கும் அடாவடி இது. அப்படி முறைகேடாக இணைப்பு கொடுத்தவர்களைக் கண்டுபிடித்து அந்த இணைப்பைத் துண்டிப்பதோடு, அவ்வாறு செய்ததற்காக அவர்களுக்கு அபராதமும் மாநகராட்சி விதிக்கிறது என்றாலும், இவ்வாறு செய்ய அந்தக் குடியுருப்புவாசிகளுக்கு எப்படி மனம் வந்தது என்பது கவலைக்குரிய கேள்விதான்.

மாடிப்பகுதியில் குடியிருப்பவர்கள் மேலிருந்தவாறே குப்பை மூட்டையை சாலையை நோக்கி வீசி எறிவது சில இடங்களில் இன்றும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலான நகரத் தெருக்களில் ஒவ்வொரு வீடாக குப்பைகளை சேகரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். கீழே இறங்கிவந்து வீட்டுக்கு முன்பாக தம் குப்பையை வைக்கக்கூட சோம்பல்பட்டுகொள்ளும் நாமும் இந்த சீரழிவுக்கு ஒரு காரணமாகிறோம். 

தூர்ந்து போயிருக்கும் கிணறுகள், குளங்கள், ஏரிகள் எதையும் தூர்வாராமல், மழை நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் அவற்றின் ஈர்ப்புத் தன்மையையும் அழித்து, அதனால் நீர் உள்ளே இறங்காமல் மேல் மட்டத்திலேயே வழிந்து ஊரெல்லாம் பரவுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில், மழை பெய்கிறதோ, இல்லையோ, இவ்வாறு தூர்வாரி, பேரிடர் என்று சொல்லத்தக்க மழைப் பொழிவின் சவாலை நாம் சமாளித்திருக்கிறோமா? சமீபத்திய வருடங்களில் அடுத்தடுத்து இப்படி துயர வெள்ளச் சம்பவம் நிகழ்ந்தபோதும், ‘அடுத்த வருஷம் மழை வந்தா பார்த்துக்கலாம்,‘ என்ற விட்டேற்றியான போக்கு எப்போதுதான் மாறும்?

இதையும் படியுங்கள்:
டைனோசர்களை அழித்த எரிக்கல்… மனிதர்கள் தப்பிப்பார்களா? 
Disaster

பெருமழைக்குப் பிறகு, அந்த நாலைந்து நாட்கள் யாரும் கடற்கரைக்குச் செல்லாமலேயே, அங்கே ஏகப்பட்ட குப்பைகள் குவிந்திருந்தன. இவை எப்படி வந்தன தெரியுமா? கடல் என்ற இயற்கையை அனுபவிக்கச் சென்ற நாம், உணவு மிச்சங்களை, காலியான பொட்டலங்களை மற்றும் வேண்டாதவை என்று நாம் தீர்மானித்த பல கழிவுகளைக் கடலிலும், கடற்கரை மணல் பரப்பிலும் தூக்கி எறிந்தோமே, அவைதான், மழையால் பொங்கிய கடல் அலையால் அடித்துகொண்டுவரப்பட்டு கரை சேர்ந்திருக்கின்றன. 

சூழலைப் பாதுகாப்பதையும் அவற்றிற்கு நேரும் கேடுகளைத் தடுப்பதையும் நம் தலையாய கடமையாகக் கருதி, நமக்கு மட்டுமல்ல, நம் அடுத்த தலைமுறையினருக்கும் நல்லதொரு உதாரணமாகத் திகழ்வோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com