

நம் வீடுகளில் எலிகள் என்பது பொதுவான ஒன்றாக உள்ளது. அதே சமயம் மூக்கு நீண்ட துறுதுறுப்பான மூஞ்சூறு எலியைக் கண்டால் ஏதோ வீட்டுக்கு நல்லது வரப்போவது போல அதை அடிக்காமல் விட்டு விடுவதை பார்ப்போம்.
ஒரு சிலர் அதை ஆன்மீகத்துடன் தொடர்புபடுத்தி பிள்ளையாரின் வாகனமாகவே அதை பார்ப்பார்கள். சில சமயங்களில் அழகான அதை வேடிக்கை பார்க்கும்போதே அது ஓடிவிடும். இந்த மூஞ்சூறு எலியை பற்றி திரட்டிய தகவல்கள் வெகு சுவாரஸ்யமானவை. இதோ அவை உங்கள் பார்வைக்கும்.
“மூஞ்சூறு எலி” (Bandicoot Rat) என்பது இந்தியா, இலங்கை, வங்காளதேசம் போன்ற நாட்டு நகரப்பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும் பரவலாக காணப்படுகிறது. பொதுவாக வீடுகளில் காணப்படும் எலிகளும் இந்த மூஞ்சுறுகளும் ஒன்றே என்று நினைக்கிறார்கள். அது தவறு. இரண்டும் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தது. வாய்ப்பகுதி சற்றே நீளமாக இருக்கும் இந்த மூஞ்சுறுவின் வாழ்வியல் வெகு சுவாரஸ்யமானதாக உள்ளது.
தாய் மூஞ்சுறு ஒரே சமயத்தில் 2 முதல் 8 குட்டிகள் வரை போடும் இயல்புடையது. பிறக்கும்போது 1 கிராம் அல்லது 2 கிராம் எடையுடன் பிறக்கும் குட்டிளுக்கு காது கேட்காது கண் தெரியாது மற்றும் ரோமங்கள் இல்லாமல் பிறக்கும். சுமார் 3 மாதங்களுக்கு பிறகு இந்த குட்டிகள் வளர்ச்சி அடைந்து கண் தெரியும், காது கேட்கும் மற்றும் ரோமங்கள் வளரும்.
அதுவரை தாயானது எடை குறைவான இவற்றை கவ்வி வேறு இடங்களில் மாற்றி தீவிரமாக கண்காணித்து பாதுகாக்கும். 3மாதங்கள் கழிந்த பின் பாலுடன் தாய் கொண்டுவரும் உணவுகளையும் உண்ணும் இயல்புடையதாக மாறிவிடும்.
தாய் தனது குட்டிகளை வேட்டைக்கு பழகும் விதம் அலாதியானது. தாய் முன்னே செல்ல அதன் வாலை ஒட்டியவாறே அடுத்த மூஞ்சுறு செல்ல அதன் வாலை ஓட்டி அடுத்தது என ரயில் போல செல்வதைக்காண அழகாக இருக்கும்.
5 அல்லது 6 வாரங்களில் குட்டிகள் தாயைப் பிரிந்து தாங்களே வேட்டையாடி தனித்து வாழப்பழகும். இவைகள் இரவில் மட்டுமே வேட்டையாடும். இதற்கு கண் பார்வை திறன் குறைவு ஆனால் எப்படி இரவு நேரங்களில் வேட்டையாட முடிகிறது என்ற கேள்வி வரும்.
மூஞ்சூறுகளுக்கு இரவில் எதிரொலி மூலமாக திசை அறியும் திறன் உள்ளது. அதுமட்டுமின்றி வாசனை அறியும் திறனும் கேட்கும் திறனும் இருப்பதால் இவற்றுக்கு இரவில் வேட்டையாடுவது எளிதாக உள்ளது. பகல் நேரங்களில் இவைகள் இண்டு இடுக்குகளில் பாதுகாப்பாக மறைந்து வாழும் தன்மை உடையது.
பொதுவாக ஒரு குட்டி வளர்ந்து ஓரிரண்டு மாதங்களில் பாலியல் பருவத்தை அடைந்துவிடும். பெண் மூஞ்சறு தனது உடலில் இருந்து வரும் ஒரு விதமான மணம் மற்றும் ஒலியின் மூலம் ஆண் மூஞ்சுறுவை ஈர்க்கிறது பின் ஒரு மாதம் வரை கர்ப்பத்தை தாங்கி இருக்கும்.
மூஞ்சுறுகளுக்கு 70 சதவிகிதம் உணவாக மாறுவது புழுக்களே. அத்துடன் சிறு சிறு பூச்சிகள், வெட்டுக்கிளி, கரப்பான் பூச்சி போன்றவைகளே உணவாகிறது என்பதால் மனிதர்களின் உணவுகளை நாடுவதில்லை.
எப்போதும் துரு துருவென வேட்டையாடியே தனது உணவை உண்கிறது. பூனை, பாம்பு, பறவைகள் போன்றவைகள் இதன் எதிரிகள். அத்துடன் இந்த மூஞ்சுறுகளின் பசி இவற்றை வேட்டையாடும் என்றால் வியப்பாக இருக்கிறதா ?ஆம்.
மூஞ்சுறு தனது உடல் எடையின் அளவிற்கு ஒரு நாள் உணவை எடுத்துக் கொள்கிறது என்பது வியப்பானது. மனிதர்களான நாம் நமது உடல் எடையில் 3 அல்லது 4 சதவீதம் மட்டுமே உணவை எடுத்துக்கொள்ள முடியும்.
உடல் எடை அளவிற்கு உணவை எடுக்கும் மூஞ்சுறுவின் மெட்டபாலிசம் எனப்படும் ஜீரண சக்தி அதீத வேகமாக இருக்கும் காரணத்தினால் உணவுகள் வெகு விரைவில் சக்தியாக எரிக்கப்படுகிறது.
இரவு நேரங்களில் தனது எடை அளவு உணவை வேட்டையாடி உண்ணும் இவைகள் பகல் நேரங்களில் இடுப்புகளில் பாதுகாப்பாக மறைந்து ஓய்வு எடுக்கிறது. இதன் உணவு கிடைக்கவில்லை எனில் அல்லது உணவு கிடைக்க தாமதம் ஆகிவிட்டால் சில சமயங்களில் இது இறந்து போகவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
புழு, பூச்சிகள் குளிர்காலங்களில் அதிகம் இருப்பதில்லை என்பதால் மூஞ்சுறுகள் தனது எடையில் 20 சதவீதத்தை சுருக்கிக் கொண்டு பசித்தன்மை அடக்கி வாழும் தன்மையுடையது என்பது வெகு அதிசயமான ஒன்று.
மூஞ்சுறுகளால் வீடுகளில் இருக்கும் பொருட்களுக்கு ஆபத்து இல்லையா என்றால் எலிகள் அளவுக்கு நிச்சயம் இல்லை என்று தான் சொல்லலாம். ஆனால் இந்த மூஞ்சூறுகள் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக தமது உடலில் இருந்து ஒருவித துர்நாற்றத்தை பரப்புகிறது. இது மட்டுமே பாதிப்பு தரும் விஷயம்.
அதேசமயம் புழு பூச்சிகள் அதிகம் உள்ள வேளாண் நிலங்களில் பயிர் சேதம் அதிகம் செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.