
ஆப்பிரிக்கா என்றதும் நம் நினைவுக்கு வருவது சிங்கமும் சிறுத்தையும் கூடவே, மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் பாபாப் மரங்களும்தான். உலகில் பல வகையான மரங்கள் இருந்தாலும், சில மரங்கள் அவற்றின் வடிவம் மற்றும் குணங்களால் அதிக புகழ் பெறுகின்றன. பாபாப் மரமும் இது போன்றதுதான்.
ஆப்பிரிக்காவின் அடையாளமே இந்த பெரிய பாபாப் மரங்கள்தான். இந்த மரங்கள் பலரையும் வாழ்வித்து தானும் வாழ்கிறது. ஆப்பிரிக்க மரபுகளில், நாட்டுப்புறக் கதைகளில், உள்ளூர் வைத்திய முறைகளில், வரலாறுகளில் இந்த மரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த மரம் 300க்கும் மேற்பட்ட பயன்பாடுகளை மக்களுக்கு வழங்குகிறது.
மனிதர்கள் பூமியில் தோன்றுவதற்கு 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாபாப் மரம் தோன்றியுள்ளது. 100 அடி உயரம் வரை வளரும் மிக உயரமான மரமாகவும், 30 அடி அளவு அகலம் கொண்ட மிகப்பெரிய மரமாகவும், உருவத்தில் ராட்சசனாக இருக்கும் மரம் இது.
ஐரோப்பிய ஆய்வாளர்கள் இந்த மரங்கள் 5,000 ஆண்டுகள் வரை வாழும் என்று கூறியுள்ளனர். ஆப்பிரிக்க சவன்னா பழங்குடியின மக்கள் நீண்ட காலமாக பாபாப் மரங்களைச் சுற்றியே தங்கள் சமூகங்களின் தங்குமிடங்களை அமைத்துள்ளனர்.
இந்த மரம் பல்வேறு உயிரினங்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடங்களை வழங்குகின்றன. இந்த மரம் 17000 லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை தன்னுள் சேமித்து வைக்கிறது. இதன் மூலம், பலரின் தாகத்தை ஒரே நேரத்தில் தணிக்க முடியும். பொதுவாக இந்த மரத்தில் உள்ள தண்ணீர் மிகவும் தூய்மையானது, அதை அனைத்து ஜீவராசிகளும் குடிக்கலாம். பெரும் வறட்சியான காலங்களில் குடிநீரும் பாபாப் மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
இந்த மரம் மழைக்காலத்தில் தண்ணீரை அதன் பெரிய தண்டில் உறிஞ்சி சேமித்து, வறண்ட காலங்களில் ஊட்டச்சத்து நிறைந்த பழத்தை உற்பத்தி செய்கிறது. பாபாப் மர பழங்கள் ஒரு அடி நீளம் வரை வளரக்கூடியது. இந்த பழத்தில் டார்டாரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது பல உயிரினங்களுக்கு ஒரு முக்கிய ஊட்டச்சத்து மிக்க உணவாக உள்ளது.
பாபாப் பழத்தை மனிதர்கள் உண்ணலாம். இதிலிருந்து பழச்சாறு எடுத்து புத்துணர்ச்சியூட்டும் பானமாக தயாரிக்கின்றனர். தண்ணீரில் ஊறவைத்து ஜாமாக செய்து சாப்பிடுகிறார்கள், மேலும் பழங்களை காயவைத்து வறுத்து அரைத்து காபி போன்ற பானத்தையும் உருவாக்குகின்றனர்.
பாபாப் மரமானது பறவைகள், பல்லிகள், குரங்குகள் மற்றும் யானைகள் உட்பட நூற்றுக்கணக்கான விலங்குகளுக்கு அவை நீர் ஆதாரமாகவும், தங்குமிடமாகவும் உள்ளது. விலங்குகள் மற்றும் தண்ணீர் இல்லாதபோது ஈரப்பதத்திற்காக மரப்பட்டையில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த மரப்பட்டையில் 40% மேல் தண்ணீர் உள்ளது. இந்த பட்டையில் இருந்து போர்வைகள், காகிதம், துணிகள், மீன்பிடி வலைகள் மற்றும் கயிறுகள் வரை தயாரிக்கப்படுகின்றன. உலகில் எந்த ஒரு மரமும் மனிதர்களுக்கு இவ்வளவு பயனைத் தராது. அதனால், இம்மரத்தை ஆப்பிரிக்க கற்பகத்தரு என்று அழைப்பதும் பொருத்தமாகத்தான் இருக்கும்.
இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால், வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மட்டுமே இலைகள் இருக்கும். இந்த மரம் எந்த விதமான சேதத்தையும் சந்திக்கவில்லை என்றால், அது சுமார் 6000 ஆண்டுகள் கூட உயிர்வாழும். ஆயினும் காலநிலை மாற்றம் காரணமாக, ஆப்பிரிக்காவின் பழமையான மற்றும் மிகப்பெரிய பதின்மூன்று பாபாப் மரங்களில் ஒன்பது மரங்கள் கடந்த பத்தாண்டுகளில் இறந்துவிட்டன.
வெப்பமயமாதல் அதிகரிப்பால் மரங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் விழ்ச்சி அடைகின்றன. பாபாப் மரங்களின் அழிவு மனித குலத்தின் அழிவுக்கும் வழி கோலும். சுற்றுசூழலை பராமரித்து மரங்களை உயிர்வாழ வைப்பதன் மூலம் மனித குலத்தையும் பாதுகாக்க முடியும்.